லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை கைப்பற்றினார்.
லிபியத் தெருக்களில் இரத்தம் வடிகிறது என்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் எகொனமிஸ்ட் சஞ்சிகை செய்திப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. துனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களின் தொடர்ச்சியாக லிபியாவில் மக்கள் எழுச்சி கடாபியின் சர்வாதிகார அரசை ஆட்டம்காணச் செய்துள்ளது.
போராட்டங்களுக்கு எதிராக லிபிய அரசாங்கம் இராணுவ பலத்தை மக்கள் மீது பிரயோகித்து வருகின்றது. 1969ம் ஆண்டு சதிப் புரட்சியினூடாகப் பதவியை கைப்பற்றிக்கொண்ட கடாபி அரசை கடந்த நான்கு நாட்களாக நடைபெறும் போராட்டம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
நிராயுத பாணிகளான மக்கள் மீது கடாபியின் இராணுவம் நடத்திய தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் பல ஆயிரம் மக்கள் காயமடைந்தும் உள்ளதாகத் தெரியவருகிறது.
பென்காசி நகரத் தெருக்களெங்கும் இரத்தப் படிவுகள் காணப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெப்ருவரி பதினேழாம் திகதியிலிருந்து இணைய வலைகள் அனைத்தும் தடைசெய்யப்படுள்ளன.பல கைத்தொலை பேசிகள் இயங்கவில்லை. ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இழப்புக்களின் எண்ணிகை குறித்த தகவல்கள் ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள லிபியர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் உள்ளூரிலிருந்து தொலைபேரியூடாகக் கிடைக்கபெறும் தகவல்களே தகவல்களுக்கான ஒரே மூலமாக அமைந்திருக்கிறது.
பென்காசி உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து கனரகத் துப்பாக்கிச் ஒலியும், வெடிகுண்டு ஒலியும் கேட்டவண்ணமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பேய்டா நகரில் அரச படைகள் பலரை கொலை செய்திருப்பதாகவும் எஞ்சியோரை அவர்களின் வசிப்புடங்கள் வரை சென்று கொலை மற்றும் சித்திரவதை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கடாபியின் மகனிடம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதே வேளை மக்களுக்கு எதிராகப் பயன்படும் பல ஆயுதங்களை பிரித்தானிய அரசே லிபியாவிற்கு விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள், இராணுவப் பயிற்சி, இராணுவப் புகைப்டக் கருவி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள், தொடர்புக் கருவிகள், கலமடக்கும் பயிற்சி மற்றும் கருவிகள் போன்றவற்றிற்கான எட்டு வேறுவகையான அனுமதிகளை பிரித்தானிய அரசு வழங்கியிருக்கின்றது.
200 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் பெறுமதியான இந்த ஒப்பந்தங்கள் மக்கள் போராட்டங்களை எதிர்பார்த்த லிபிய அரசு முன்னதாகவே மேற்கொண்டிருந்தது. லிபிய மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்கு பிரித்தானிய அரசின் ஆயுதங்களே பயன்படுகின்றன.
Comments 1