அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்களும் இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு அடுத்த மாதம் வருகை தர உள்ளார். அதன் முன்னோட்டமாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் வியாழக்கிழமை இரவு தில்லி வந்தார்.
அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் எம்.கே. நாராயணனை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் செயல்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனியையும் ஜோன்ஸ் சந்தித்துப் பேச உள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் சென்ற ஜோன்ஸ், அங்கு அந்நாட்டு ராணுவ தளபதி அஷ்பாக் கயானியைச் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளதாக்கில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கயானிடம் அவர் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் நிலைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.