நகைக்கு கடன் வழங்குவதாகக் கூறி கொங்கு மண்டலத்தில் கவரிங் நகைகளுக்கு கடன் வழங்கியுள்ளது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன் படி 5 சவரனுக்குக் கீழே அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இதன் படி சுமார் 6 ஆயிரம் கோடி அளவுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நகைக்கடன் தள்ளுபடிக்காக அரசு ஊழியர்கள் கடன் வாங்கியோர் பட்டியலை ஆய்வு செய்த போது முந்தைய அதிமுக ஆட்சியில் வித விதமாக நடந்துள்ள நகைக்கடன் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஒரே ஆதார் எண்ணுக்கு அதிக நகைக்கடன். கவரிங் நகைகளுக்கு தங்க நகைக்கடன். காலியான பெட்டிகளை வைத்து நகைகள் என்று கூறி கடன் வாங்கியுள்ளமை என நகைக்கடன் மோசடி வெளியில் வந்துள்ளனது.
இந்த மோசடி, மதுரை, திருச்சி என பல ஊர்களில் நடந்துள்ள போதும் அதிமுக அதிக தொகுதிகளில் வென்ற கொங்கு மண்டலத்தில் தான் அதிக அளவு மோசடி நடந்துள்ளது. பல கடன்களுக்கு பணயமாக எதுவுமே இல்லை என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. உதாரணத்திற்கு குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்களே இல்லை. மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பெயர்களில் பல கோடி ரூபாய்கள் மோசடி நடைபெற்றுள்ளது. வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என்ற அளவு கோலில் கிலோ கணக்கில் நகைகளை அடகு வைத்து சந்தை விலையை விட பல மடங்கு அதிகம் பணம் பெற்றுள்ளனர்.
மதுரை பாப்பையாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ஒருவர் மட்டும் 300 நகைகளை வைத்து அதிக அளவு கடன் பெற்றுள்ளார். இப்படி பல்லாயிரம் பேர் ஏழைகளுக்குச் செல்ல வேண்டிய நகைக்கடன்களை சுருட்டியிருக்கிறார்கள் இதற்கு வங்கி ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.
நகைக்கடன் தள்ளுபடி ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பயிர்க்கடன் தள்ளுபடியிலும் மோசடி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 2,500 கோடி ரூபாய் அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதிலும், விவசாயமே செய்யாத தரிசு நிலங்களுக்குக்கூட 110 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அதிமுகவினர் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காரணத்தால் கூட்டுறவு சங்கங்களில் அதிமுகவினரே 99 சதவிகிதம் பதவிகளில் உள்ளனர். இவர்கள் திட்டம் போட்டு இப்படி ஒரு சூறையாடலை நிகழ்த்தியுள்ளார்கள். பல்லாயிரம் கோடி அளவுக்கு நடந்துள்ள இந்த மோசடி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில்தான் நடந்துள்ளது.இந்த நகைக்கடன் மோசடி தொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.