பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு எதிராக களத்தில் இறங்குகிறார் நீதித்துறை சுதந்திரத்துக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் கோட்டை விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர்.
இதே வேளை மகிந்த பாசிச அரசின் கைக்கூலிகள் பிரதம நீதியரசருக்கு எதிரான போராட்டத்தை அதே இடத்தில் நடத்த உள்ளனர். வழமைபோல வன்முறையைத் தூண்டுவதே மகிந்த அரசின் நோக்கம் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெறும் இந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், போராட்டத்தில் பங்குகொள்ளும் எவரும் அந்த இடத்தைவிட்டு அகலக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நாகவிகாரையில் நேற்று முன்நாள் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
திவிநெகும சட்டமூலத்திற்கு நீதிமன்றத்தினால் அனுமதி கிடைக்காததால் பிரதம நீதியரசருக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டு வருவது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதே எனது கருத்தாகும்.
இந்தக் குற்றப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவு தெரி விக்கவும் போராட்டத்தில் சகல மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
இந்தப் பேராட்டத்துக்கு எதிராகத் தடையேற்படுத்தும் வகையில் தண்ணீர்ப் பீச்சியடிக்கும் நடவடிக்கைகளேதும் மேற்கொள்ளப்பட்டால், அவற்றை அனைவரும் அமைதியாக எதிர்கொண்டு அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டு எதிர்ப்பைக் காட்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் கீழ் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள கேடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தடுப்பதற்குரிய முயற்சிகளை எடுப்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
முன்னாள் நீதியரசர் நெவில் சமரக்கோனுக்கும் இந்தக் கதியே ஏற்பட்டது. இவர் தமது விருப்பத்திற்கேற்ப நீதிமன்றத் தீர்ப்பை வழங்காததால் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன தமது அதிகாரத்தைப் பாவித்து இவரைத் தூக்கியெறிந்தார்.
இன்று ஏற்பட்டுள்ள நீதித்துறைச் சிக்கல்களுக்கு மன்னார் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட சம்பவமும் ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரிலேயே இந்தக் குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இதற்குமுன் உலகில் எங்கேயும் நடைபெறாத புதுமையான வழக்கு இதுவாகும்.
வழக்கைத் தாக்கல் செய்பவர், வழக்கைக் கேட்பவர், தீர்ப்பளிப்பவர், தண்டனை கொடுப்பவர் எல்லோருமே ஒருபக்கச் சார்பானவர்கள் என்பதுவே இதிலுள்ள விசித்திரமாகும்.
இவர்களின் தீர்ப்பு ஏற்கனவே அறிந்ததுதான். பத்து கொலைகளைச் செய்த கொலையாளிக்குக் கூட தனது பக்க நியாயத்தை எடுத்துக் கூறுவதற்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்படும். ஆனால் இந்நாட்டின் நீதியரசருக்கு தமது பக்க நியாயத்தைக் கூறுவதற்கு கொடுத்தது ஒருவார காலம்தான் என்றார்.
Yes, this is something between the Rajapakses and Bandaranaikes.