பின்னடைவு:முதல் தடவையாக புலிகள் ஒப்புதல்

கொழும்பு, ஆக.20: இலங்கை ராணுவம் நடத்தி வரும் அதிரடி தாக்குதலில் தாங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
.
ராணுவத்தின் தாக்குதல் காரணமாக இலங்கையின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலி களுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தொடர்ந்து புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி அவற்றையும் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

ராணுவத்தின் இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், இந்த தாக்குதல் காரணமாக தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ராணுவத்தின் இந்த நடவடிக்கை காரணமாக அப்பாவி மக்கள் தங்களது வசிப்பிடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள தாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்
தங்களது இருப்பிடத்திலிருந்து வெளியேறி ஒரு பகுதியில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் தாக்குதல் அதிகரிப்பதன் காரணமாக அங்கிருந்தும் கிளிநொச்சிக்குள் தப்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு ஏராளமானோர் பல்வேறு இடங்களிலிருந்து உயிருக்கு பயந்து தப்பிச் செல்ல வேண்டியிருப்பதால் அவர்களுக்கு உரிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க இயலாத நிலை உள்ளது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக தங்குமிடங்கள் கூட அமைக்க முடியாததால் மக்கள் மரங்களுக்கு அடியில் தங்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் இந்த கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. பாதிக்கப்படும்
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் வழங்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது