லண்டன் நகரின் நெஞ்சுப் பகுதியில் அமைந்திருக்கும் எக்குவடோர் நாட்டின் தூதரகத்தில் ஜுலியன் அசாஞ்ஜ் தஞ்சம் கோரி ஜூன் 19ம் திகதியுடன் இரண்டுவருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஊடகமும் தகவல் பரிமாற்றமும் பணம் திரட்டுவதற்கான கருவிகளுள் ஒன்றாகிவிட்ட சூழலில் தனது உயிரைப் பணயம் வைத்து உண்மைய மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனது வாழ்கையை இழந்தவர் ஜூலியன் அசாஞ்ஜ்.
இந்தியாவின் அடிவயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் இலங்கைத் தீவின் ஒவ்வொரு சந்தும் ஊடக வியாபாரிகளால் நிரம்பியுள்ளது. உண்மைகளைச் சொல்வதற்குப் ஆயிரமாயிரமாய் மக்களைப் பலிகொடுக்க ஊடகவியலாளர்களும் காரணமாயிருந்துள்ளனர்.
அப்பட்டமாக புலிகளின் பெயராலும், புலியெதிர்ப்பின் பெயராலும் மக்களிடமிருந்து சமூகத்தின் உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பிணங்களை வைத்துப் பணம் சேர்க்கும் எமது சமூகத்தின் புல்லுரிவிகளோடு ஒப்பு நோக்க முடியாத தூரத்தில் அசாஞ்ஜ் ஊடகத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.
விமர்சனத்திற்கும், சுய விமர்சனத்திற்கும் கருத்துகளுக்கும் அஞ்சி வாழும் கோழைகளின் போலித் திமிர் உமிழும் தேசிய அழுக்குகளின் மத்தியில் அசாஞ்ஜ் மனித சமூகத்திற்குச் செய்த பணி அளப்பரியது.
அதிகாரவர்க்கம் போலிக் குற்றச்சாட்டுகளால் அழிக்க முற்ப்பட்ட வேளையில், ஐக்கிய நாடுகள் அகதி உரிமை பேசும் மண்ணில் எக்குவடோர் தூதரகத்தில் அசாஞ்ஜ் தஞ்சமடைந்த நாளிலிருந்து போலிஸ் காவல் நாய்கள் போல தூதரகத்தின் வாசலில் குழுமியிருக்கின்றது.
உண்மைகளை நெஞ்சு நிமிர்த்தி துணிந்து சொல்லும் புதிய கூட்டம் அசாஞ்சின் பாதிப்பினால் தமிழ் சமூகத்திலும் தோன்றும் என நம்பிக்கை கொள்வோம்.
-அம்பிகா