வளர்ந்தவர் ஒருவர் தனது உடலை / பாலியல் ஆற்றலை இன்னொரு வளர்ந்தவருக்கு காசுக்கு விற்பது பாலியல் தொழிலாகும். வளர்ந்தவர் இருவருக்கிடையில் நடைபெறும் பாலியல், பணம் (பொருள்) பரிமாற்றமாக பாலியல் வியாபாரத்தைக் கொள்ளலாம்.
இலங்கையின் மேற்குக் கரையோர பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண் சிறுவர்கள் ஓரினப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இது அடிப்படையில் சிறுவர் துஸ்பிரயோகமாகும். அதே போல சிறுமியர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் தொழிலாக கருதப்படமாட்டாது. இது சிறுமியர் மீதான வன்முறையாகும். அவ்வகையில் பாலியல் தொழிலில் எனும் வரையறைக்குள் இவை எவ்விதத்திலும் உள்ளடக்கப்பட மாட்டாது.
இலங்கைச் சமூகத்தில் பெண்கள் தமது பாலியலை விற்பவர்களாகவும் ஆண்கள் வாங்குபவர்களாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.இலங்கைச் சமூகத்தில் பாலியல் தொழில் என்பது பெண்ணின் உடலை / ஆற்றலை வியாபாரப் பொருளாக்குவதில் மையங் கொண்டுள்ளது. இவ்வாறு பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுவோரின் நிலைகளை (பெண் விற்பவர்- ஆண் வாங்குபவர்) இனங் காண்பதுடன் கூடவே இந்தத் துறை பற்றி பல கேள்விகள் எழுகின்றன. ‘ ஏன் இது இவ்வாறு நடைபெறுகிறது? இது ஒரு தொழிலா அல்லது சமூக ஒழுக்க நெறியுடன் தொடர்புபட்ட ஒன்றா? அல்லது இது ஒரு சமூகத் தவறா? தவறென்றால் தவறுக்கு பொறுப்பேற்பது யார்? பாலியலை விற்கும் பெண்ணா? அல்லது அதை வாங்கும் ஆணா? மேற்குலக நாடுகளின் சட்டங்களில் பாலியல் தொழில் எவ்வாறு அணுகப்படுகின்றது?” இவை புறந்தள்ளிவிட முடியாத கேள்விகளாகும். இவற்றை விவாதத்துக்கு உட்படுத்தி பெண்ணிலைவாத கண்ணோட்டத்தில் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வது பெண்களின் நலன்களுக்காக செயற்படும் பெண்கள்,ஆண்கள் அனைவரதும் கடமையாகும். அவ்வடிப்படையில் எனது கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.
பாலியல் வியாபாரம் (sex trade) பாலியல் தொழில் (sex work) ஆனது பண்டைய தமிழ்ச்சமூகத்தில் ‘தாசித்தொழில்” என்று அழைக்கப்பட்டு வந்தது.காலனித்துவ ஆட்சியுடன் ஆங்கிலேய ஆணாதிக்க விழுமியங்களுக்கமைய ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டங்கள் அடையாளப்படுத்தப்படலாயிற்று. ஆங்கிலத்தில் Prostitute என பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் குறிக்கும் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த ‘விபச்சாரி” எனும் சொல்லாகும். பாலியல் வியாபாரத் துறையும் ‘விபச்சாரம்” (Prostitution) என அடையாளப்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு சொல்லும் தனக்கேயான குறிப்பான அர்த்தங்களைக் கொண்டுள்ளது.குறிப்பான சமூக உறவுகளை சமூக நிலைகளை சுட்டும் பல சொற்கள் தாம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தின் ஆதிக்கக் கருத்தியலின் அடிப்படையில் அமைந்த அர்த்தங்களையும் சுமந்து கொண்டிருக்கின்றன.’விபச்சாரி” அல்லது ‘தாசி” எனும் பதமானது ஐதீகங்கள் நிறைந்ததாகும். பிரதானமாக பெண்ணின் குணாதிசயங்களை சித்தரிப்பதையும் தனக்குள் உள்ளடக்கிக் கொண்டதாக இச்சொல் உள்ளது.(உருவாக்கப்பட்டுள்ளது) பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை சமூகப் பொதுவாழ்வில் இருந்து ஓரங்கட்டி விளிம்புக்கே தள்ளிவிடும் வன்மமான ஆற்றல் இச்சொல்லுக்கு உண்டு. அதனால் தான், பொதுவாகப் பெண்களை அடக்குவதற்கும் அவமதிப்பதற்கும் ‘வேசி”,’தேவடியாள்” எனும் சொற்களும் பெண்களை மையப்படுத்தியதாயிருப்பதுடன் இந்நடவடிக்கை பெண்களால் மேற்கொள்ளப்படும் ஒரு
சமூக சீர்கேடாக சமூகத்தாலும் சட்டத்தாலும் அணுகப்படுகின்றது. இவ்வாறு சமூக ஒழுங்கீனம் சீர்கேட்டுன் தொடர்புபடுத்தி பெண்களைச் சுட்டும் விபச்சாரி எனும் சொல்லானது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை சமூகத்தில் மிகவும் மோசமான முறையில் அவதூறு செய்து ஒதுக்கி வைப்பதற்கும் தன்னளவில் காரணமாயுள்ளது.
பாலியல் தொழில் செய்யும் பெண்களை சமூகப் பொதுவாழ்விலிருந்து ஓரங்கட்டுவதை இல்லாது செய்வதற்கும் அவர்கள் மீது அவர்களைச் சார்ந்தோர் மீதும் படிந்திடும் சமூகக் கறைகளை நீக்கும் நோக்குடனும் விபச்சாரம், விபச்சாரி போன்ற சொற்கள் சமூகப் பாவனையிலிருந்து அகற்றப்படலாயின. ‘பாலியல் தொழில்”,’பாலியல் தொழிலாளர்”, ‘பாலியல் வியாபாரம்” போன்ற சொற்கள் பாலியல் தொழிலை, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை எனும் தளத்திலிருந்து சமூகத்தின் ஒரு பொதுப் பிரச்னை எனும் தளத்துக்கு கொண்டு வருவதற்கு உதவியுள்ளன.
பாலியல் தொழிலை ஏனைய தொழில்களைப் போல் பார்க்க வேண்டும் எனும் கருத்து பெண்ணிலைவாதிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் காணப்படுகின்றது. இந்த ஒவ்வொரு தரப்பினரதும் கருத்து நிலைகள் வேறுபட்டனவாகும். உதாரணத்துக்கு,
*பாலியல் தொழில் சமூகத்தில் நிலவுவதால் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைவடையும் என்பது ஒரு சாராரின் வாதமாகும். ஆண்கள் தமது பாலியல் தேவைகளை பாலியல் தொழிலாளர் மூலம்
பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்புக் கிடைப்பதால் ஏனைய பெண்களை வன்முறைக்குள்ளாக்காது இருப்பர் என்பதே இதன் அர்த்தம்.
*ஆண்களின் பாலியல் தேவைகள் நிறைவேற்றப்படுவதால் அவர்கள் உளவியல் ஆரோக்கியத்துடன் இருப்பர்.அதனால் சமூக ஒழுங்கு பேணப்படும்.உற்பத்தி பெருகும்.
உண்மையில் இவை ஆணாதிக்க வகைப்பட்ட நியாயப்படுத்தல்களாகும்.
சமூக உற்பத்தியில் ஈடுபடும் மனிதக் கைகள், மூளை, இயந்திரங்களை போன்று பெண்ணின் பாலியல் உறுப்புக்களையும் உற்பத்தி சாதனமாகக் கூறுவோரும் உண்டு. தனிப்பட்ட ரீதியாக பெண்கள் ஓரங்கட்டப்படாது இருப்பதற்காக பாலியல் தொழிலை சமூக உற்பத்தி நடவடிக்கையுடன் இணைக்கும் நோக்குடன் இக்கருத்து முன் வைக்கப்படுகின்றது.
எதுவாயினும் பாலியல் தொழிலின் அரசியலை பெண்ணியக்கண்ணோட்டத்தில் அணுகிப் புரிந்து கொள்வதன் மூலமே அது குறித்த நிலைப்பாடுகளை எடுக்கமுடியும்.
மனித வரலாற்றில் பாலியல் தொழிலுக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்ப தனியான வரலாறு உண்டு. ஆனாலும் அதன் பண்பு ஒன்று தான். ஒரு தார மணமுறையின் மூலம் பெண்ணின் பாலியல் நடவடிக்கையையும் ஒருங்கே பெண்ணின் உடலையும் ஆண்கள் கட்டுப்படுத்துகின்ற ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்பத்திலும் சமூகத்திலும் தனித்தனியான வகி பாகங்கள் (Genderroles)உண்டு.
குடும்ப அமைப்புக்குள் பெண் ஆனவள் ஆணின் தேவைகளை நிறைவேற்றும் சேவகியாவாள். இதுவே சமூகப் பொது வாழ்விலும் நடைபெறுகின்றது. ஆணின் பாலியல் தேவைகளை நிறைவேற்றும் ஆணுக்குப் பாலியல் சேவை செய்யும் சேவகியாக பெண்ணின் வகிபாகம் ஆணாதிக்க சமூக அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இது கருத்தியல் தளத்திலும் அன்றாட நடைமுறை வாழ்விலும் வெளிப்படுகின்றது. பாலியல் தொழிலானது’பெண் ஒரு பாலியல் நுகர் பண்டம்” என்பதை மறு உற்பத்திசெயவதாக அமைகின்றது. பெண் ஆணுக்குப் பாலியல் சேவகம் செய்யப் பிறந்தவள் என்பதை மீள மீள சமூகத்தில் நிலைநிறுத்துவதாயுள்ளது.
பாலியல் தொழிலின் அடித்தளமாக பால்நிலை வகிபாகங்களும் அதன் ஆணிவேரான ஆணாதிக்க சமூக உறவுகளும் காணப்படுகின்றன. பெண் இனத்தையும் ஒட்டு மொத்த மனித குலத்தையும் ஆணரிக்க அதிகார உறவிலிருந்து வெளிவர விடாது அதற்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஒரு பொறி என்றே பாலியல் தொழிலைக் கூறவேண்டியுள்ளது. சமூகப் பொதுவாழ்வில் ஆணுக்குப் பாலியல் சேவகம் செய்பவளாக பெண் இருக்கும் வரையில் ஆணாதிக்க உறவுகளிலும் ஆண் – பெண் வகிபாகங்களிலும் மாற்றம் வராது.
பெண் பாலியல் நுகர் பண்டமாக இருக்கும் சமூக அமைப்பில் பெண் விடுதலை என்பது பேச்சளவில் தான் இருக்கும்.
இவ்வாறு பாலியல் தொழிலை கட்டமைப்பு கட்டத்தில் ( Structural level) விளங்கிக்கொள்வது பொருத்தமானதெனக் காண்கின்றேன்.
தனி நபர் ரீதியாக (Individual level ) பார்க்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு தனிநபரதும் – பெண்ணினதும் வாழ்க்கைச் சூழலைக் கவனத்திற் கொள்வதாக அமையும். இவ்வடிப்படையில் பார்க்கையில் குறிப்பிட்ட பெண் ஏன் பாலியல் தொழிலைத் தெரிவாகக் கொள்வதற்குத் தள்ளப்படுகின்றார்? இத்தொழில் அவர் தனது வாழ்வைக் கொண்டு நடாத்துவதற்கு எவ்வாறு உதவுகின்றது? பாலியல் தொழிலாளர்கள் தமது தொழில் நிலைமைகளை எவ்வாறு மேம்படுத்திக் கொள்கின்றனர்? எவ்வாறு தமது தொழில்சார் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்? இது குறித்த அரச சட்டங்கள் எவ்வாறு அமையவேண்டும்? போன்ற தனிநபர் மற்றும் நடைமுறை வாழ்வுடன் தொடர்புடைய பல கேள்விகள் உள்ளன.
இலங்கையில் பாலியல் தொழில் இன்று விரிவாக்கம் பெற்று வருவதற்கு பிரதான காரணம் வறுமையாகும். முதலாளித்துவ சுரண்டல் பொருளாதார முறையின் விரிவாக்கம், யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் போன்றன இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பதற்கான காரணங்களாகும். சமூக பொருளாதார வாழ்வில் ஏற்படும் சிதைவுகளாலும் குடும்ப சுமைகள் காரணங்களாலும் சமூக பொருளாதார வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகையில் தான் பாலியல் தொழிலை பெண்கள் செய்யும் சூழ்நிலை ஏற்படுகின்றது.
‘இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையிலா பாலியல் தொழிலாளர்கள் உருவாகின்றார்கள்” என கேள்விகள் கேட்கலாம். இங்கே ‘சமூக பொருளாதார விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுதல்” எனக் குறிப்பிட்டது’ இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலை” என்பதையல்ல. அவரவர் வாழும் வர்க்க நிலையில் விளிம்பு நிலை என்பது பொருத்தமாயிருக்கும். உதாரணத்துக்கு நடுத்தர வர்க்கப் பெண் ஒருவருக்கு ஒரு காணித்துண்டும், வீடும் வீட்டுக்கான பொருட்களும் தொழிலை தெரிவாகக் கொள்ளலாம். அதேநேரம் இவரிலும் வறிய பெண்ணொருவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வாழ்வைக் கொண்டு நடாத்தலாம். இவற்றைப் பார்க்கும்
ஒருவருக்கு, நடுத்தர வர்க்கப் பெண் பாலியல் தொழில் செய்யாது கூலித்தொழில் செய்யலாம் தானே எனும் கேள்வி நிச்சயம் எழும்.
தமது வர்க்க நிலைகளைத் தக்க வைத்துக் கொண்டு மேல் நோக்கிச் செல்வதற்கே மனிதர்கள் இடையறாது முயற்சிக்கின்றனர். தமது பொருளாதார நிலையைக் காப்பாற்றிக் கொள்வது தான் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களதும் தேவையாயுள்ளது. எனவே பாலியல் தொழிலைப் பற்றி உரையாடுகையில் சமூக வர்க்கங்களின் இயக்கப் போக்கையும் கவனத்திற் கொள்வது முக்கியமாகும்.
எதுவாயினும் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் பொருளாதாரப் போராட்டத்தின் சுவடுகள் படிந்திருக்கும் பொறுப்புகளும் சுமைகளும் இருக்கும்.
இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரித்தானியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலியல் தொழிலுக்கு சட்டரீதியாகத் தடை விதித்துள்ளன. அதனால் அங்கெல்லாம் பாலியல் தொழில் நிலவவில்லை என்று அர்த்தமாகாது. ஆணாதிக்க சமூக அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதனால் மாத்திரமல்ல, ஆணாதிக்க நோக்கு நிலையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களாலும் பாதிக்கப்படுபவர்களாகப் பெண்களே உள்ளனர். பெண்களே குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பாலியல் தொழில் என்பது ஆணாதிக்க சமூக உறவுகளின் காரணமாக உருவாகியிருப்பதால் அது தன்னளவில் ஒரு கட்டமைப்பாக உள்ளது. இந்தக் கட்டமைப்பை அப்படியே பேணியபடி சட்டங்களை மாத்திரம் ஏற்படுத்துவதால் பயனில்லை.
பாலியல் தொழில் ஒரு வன்முறையா?
பாலியல் தொழில் என்பது தன்னளவில் ஒரு வன்முறையல்ல எனும் வாதம் நிலவுகின்றது. எனினும் ஆணுக்குப் பாலியல் சேவகம் செய்பவர்களாக கருத்தியல் தளத்திலும் நடைமுறையிலும் பெண்களை இசைவாக்கம் செய்து வரும் – அடிமைப்படுத்தி வரும் ஒரு கட்டமைப்பெனும் வகையில் பாலியல் தொழில் என்பது கட்டமைப்பு சார்வன்முறையாகும்.
அதேநேரம் பாலியல் தொழிலை மையப்படுத்தி நேரடியான வன்முறைகள் நடைபெறுகிள்றன. பாலியல் தொழிலிலும் தொழிலுக்கு பெண்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்தல், கடத்துதல், உடலையும் மனதையும் துன்புறுத்துதல், வல்லுறவு புரிதல், ஆபாசப் படங்கள் தயாரித்தல், கொலை செய்தல் போன்றன இந்த வட்டத்துக்குள் அதிகம் நடைபெறுகின்றன. அவ்வகையில் பாலியல் தொழிலானது பெண்கள் மீதான நிலையான வன்முறைக்கான களமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் பாலியல் தொழிலை எவ்வாறு அணுகுவது எனும் கேள்வி எழுகின்றது.
ஏற்கனவே பார்த்தது போல் பாலியல் தொழிலை கட்டமைப்பு ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் அணுகவேண்டும்.
பாலியல் தொழில் என்பது தனிமனித திறனை வளர்ச்சிக் கோட்டில் இட்டுச் செல்லும் தொழிலல்ல. இந்தத் தொழில் சமூக அளவில் பெண்களுக்கு அபிவிருத்தியைத் தருவதுமல்ல. அவ்வகையில் இத்தொழில் சமூகத்தில் நிலைத்திருப்பதற்கு ஊக்கமளித்திட முடியாது.
எனினும் இதைத் தடை செய்யும் நாடுகளின் சட்டங்கள், பாலியல் தொழிலை ஒரு சமூகக்கட்டமைப்பாகப் பார்த்து அணுகாது தனிநபரைத் தண்டிப்பதை அடிப்படையாகக் கொண்டே அணுகுகின்றன. அதனால் தான் பாலியல் தொழிலை சமூகத்திலிருந்து அகற்றுவதற்காக ஆணாதிக்க சமூக உறவுகளில் மாற்றங்களை ஊக்குவிக்காது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களைத் தண்டிக்கின்றன. இத்தகைய அணுகுமுறையானது பெண்களை மேலும் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.அத்துடன் இக்கட்டமைப்பு குறித்து சமூகத்தில் எந்தவிதக் கேள்வியும் எழாத மௌனமான சூழலையும் உருவாக்கி விடுகின்றது.
எனவே, பெண்களைக் குற்றவாளிகளாக்கித் தண்டிப்பதை நோக்காகக் கொண்ட சட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பாலியல் தொழிலை நீண்டகாலத்தில் சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பதற்காக பால்நிலை சமத்துவக் கண்ணோட்டத்திலான அரச கொள்கைகளே தேவை.
-ஸ்டெலா விக்டர்
நன்றி: ‘பெண்” (இலங்கை)
பெரும்பாலான அல்லது 90 வீதமானவர்களின் பால்லியல் தொழில் வறுமையாலே
இதில் போய் வீழ்ந்துவிடுகிறார்கள்.இது இலங்கை இந்தியாவல்ல முழுஉலகத்திற்தும்
பொருந்தும்.வறுமையை ஒழிக்கவேண்டுமென்றால் சுரண்டலை ஒழித்தாக வேண்டும்.சுரண்டலை ஒழிப்பதாகயிருந்தால் சர்வதேசரீதியாக தொழிலாளர் அணிதிரண்டாக-வேண்டும் முதலாளித்துவத்தை உலகரீதியில் துடைத்தெறிந்தாக வேண்டும்.
இது சிலருக்கு அலுப்பு சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கலாம். என்னசெய்வது இதை
விட்டால் கண்ணுக்கு புலப்படும் அளவில் எந்த மார்கமும் இல்லை.அப்படியாரும் உங்களுக்கு
சொன்னால் உங்களை ஏமாற்றுகிறார்கள் அல்லது பொய் சொல்லுகிறார்கள்.
அதற்கான காலம் கனிந்துவருகிறது அதோ!………………………
குறிப்பு; முதாலாளித்தவத்தின் பொருளாதாரசரிவை மந்தநிலையையே உலகத்தைமாற்றுவதற்கான ஆயுதமாகக் கையில் எடுத்தான் மாமேதை கால்மாக்ஸ். அதன்
அடிப்படையிலேயே தனது காலத்தால் அழியாத ஆய்வுகளை உழைப்பாளிகளுக்கு கேடயமாகக்கொடுத்தான். கேடயத்தை எடுப்பதும் தூக்கியெறிவதும் அவரவர் வர்க்ககுணாம்சத்தைப் பொறுத்தது.