இன்று வரை இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் எத்தனை ஆயிரம் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த அறுதியிட்ட ஆவணம் ஏதும் கிடையாது. இறுதி நாள் போரில் மட்டும் நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென ஆய்வுகள் கூறுகின்றன. கிளினொச்சியில் போர் ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு லட்சம் அப்பாவிகள் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் ராஜபக்ச குடும்ப அதிகாரத்தால் கொன்று போடப்பட்டிருக்கலாமென இதே ஆய்வுகள் கூறுகின்றன. பின்னதாக மூன்று லட்சம் மனிதர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முகாம்களில் அடைத்துவைத்து பட்டினி போட்டு மனித குலத்தைத் திகைக்க வைத்த சமூகவிரோதிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. சமூகத்தின் அதிகார பீடத்தில் அனைத்துலக அங்கீகாரத்தோடு இவர்கள் தான் அமர்ந்திருக்கிறார்கள்.
மக்கள் இன்னும் இவை எல்லாவற்றையும் மறந்து விட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள் அரச ஆதரவுத் தமிழர்கள். பயத்தின் எல்லைக்குள்,மரணத்தின் விழிம்பில் வாழுகின்ற மக்கள் கூட்டத்தின் வாழ்வியலை இயல்பானது என்கிறார்கள்.
இவ்வேளையில் “புதுமாத்தளனில் பசி, பட்டினியுடன் வாடிய நிலையில் கஞ்சிக்காகக் கையேந்தி வரிசையில் நின்றவேளையில், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகியதை எப்படி மறப்பது?” என்று நிகழ்வுகளின் கோரத்தை மீட்கிறார் யாழ்.தேர்தல் மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சி.சிறிதரன். இலங்கை அரசு மக்களை மறந்து விடக்கோரும் போரின் நினைவுகளை மறுபடி அவர்களின் நினைவிற்குக் அழைத்து வருகிறது சிறிதரனின் உரை.
இதனைத் தான் சமூகத்தின் புதிய நினைவுத்திறன் என்று நவீன சமூக விஞ்ஞானிகள் வரைமுறை செய்கின்றார்கள். சமூகத்தின் நினைவாற்றலைக் கையாள்வது என்பதிலிருந்தே ஏகபோக வல்லரசுகள் பல மக்கள் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றன. வியட்னாமிலிருந்து ஈராக் வரை என்ற தனது நூலில் அன்றூ கொக்கின்ஸ் (Andrew Hoskins) ஈராக் மீது அமரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்பு யுத்தம் ஏற்படுத்திய சமூக நினைவாற்றல் பற்றி ஆய்வு செய்கிறார். மக்கள் சதாம் ஹுசைனின் சர்வாதிகாரம் விதைத்த கோரங்களை மறந்துவிட்டனர். உலகம் முழுவது இஸ்லாமிய மக்கள் அமரிக்க ஏகபோகத்தின் மீது நீண்ட வெறுப்புக் கொண்டுள்ளனர் என்கிறார். ஈராக் மக்களின் சமூக நினைவாற்றல் இவ்வாறு ஒரு நீண்ட வாழ்வுக்காலத்தைக் (Lifetime) கொண்டுள்ளது.
சமூகத்தின் இந்த நினைவாற்றலை மாற்றம் செய்வதற்குரிய புறக்காரணிகளைக் கண்டறியும் ஆய்வு முறைகளை பல தன்னார்வ நிறுவனங்கள்(NGO) ஏகாதிபத்திய தேவை கருதி மேற்கொள்கின்றன. இனப்படுகொலை போன்ற குரூர நிகழ்வுகள் ஏற்படுத்தும் நினைவாற்றலை இன்னொரு சமூக நிகழ்வினூடாக நிரப்ப (Substitute) முனைவது இதன் இன்னொரு வழிமுறைகளில் ஒன்று. இலங்கையைப் பொறுத்தவரை நிகழ்ந்த இனப்படுகொலையின் கோரத்தை,அது குறித்த மக்களின் நினைவாற்ரலை அரசுக்கெதிரான எதிர்ப்புணர்வாக மாற்றமடையாமல் தடுப்பதற்கு கையாளப்பட்ட இன்னொரு வழிமுறைதான், ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்படும் தேர்தல்கள்.
பிரஞ்சுத் தத்துவவியலாளரான அல்போவிச் (Maurice Halbwachs) என்பவரால் முன்வைக்கப்பட்ட சமூக நினைவாற்றல் குறித்த கருத்தானது மிக அண்மைக்கால மானுடவியலிலிலும், சமூகவியலிலும் ஆய்வுப் பொறிமுறையாகப் பிரயோகிகப்படுகின்றது.
இவ்வாறு மக்களின் நினைவாற்றலை உருமாற்றும் இலங்கை அரசினதும் அதன் பின்புலத்தில் தொழிற்படும் ஏகபோக வல்லரசுகளினதும் நிகழ்ச்சி நிரல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் மக்களின் சமூக நினைவாற்றல் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான உணர்வாக மாற்றப்பட வேண்டும் . அந்த வகையில் சிறீதரனின் கூற்று தேவையானதே. ஆனால், தமிழ்ரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிற்போக்குத் தேசியவாதிகளின் கரங்களில் இதற்கான பொறுப்பை ஒப்ப்டைத்தல் என்பது அபாயகரமானது. அது இன்னொரு புது மத்தாளனை உருவாக்கவே வழிவகுக்கும். இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை இடதுசாரிகள் புரிந்துகொண்டால் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் வழிநடத்த வாய்ப்பிருக்கும். மக்களின் சமூக நினைவாற்றலை மழுங்கடிக்க எண்ணும் இலங்கை அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுத் தேர்தலைப் பயன்படுத்துவதும், சமூக நினைவாற்றலை அரசிற்கெதிரான போராட்டமாக மாற்றுதலும் இடதுசாரிகளின் வரலாற்றுக் கடமை.
நம்மை எதிர்நோக்குகிற பிரச்சனைகள் சில:
பாரளுமன்ற அரசியலில் சீரழிந்த இரண்டு கட்சிகள் போக எஞ்சியிருப்பவற்றை நோக்கினால் நான்கு ட்ரொட்ஸ்கியக் கட்சிகள் உள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் அவற்றின் நடத்தை நமக்கென்ன சொல்லுகிறது?
புதிய ஜனநாயகக் கட்சியைய்ம் உதிரியாக உள்ள குழுக்கள் சிலவற்றை மட்டுமே நாம் நோக்க வேண்டியுள்ளது. மாஓவாதக் கம்யூனிஸ்ற் கட்சியை குமார் ரூபசிங்கவின் சகோதரர் அஜித் ரூபசிங்க சீரழித்து விட்டார்.
புதிய ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழுநாட்டுக்கும் தமிழ் மக்கள் ஒரு புதிய பதைக்கு வழி திறந்து விடலாம்.
புதிய ஜனநாயக கட்சிக்கு ஆதரவு கொடுப்பதே சரியானது. கெருடாவில் இலகடி மல்லாகம் அளவெட்டி கிழக்கு மூளாய் பிள்ளையார் கோவிலடி பெரிய புலோ சுழிபுரம் சிறீராம் சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் இவர்களது பிரசாரத்தையும் வீதிநாடகத்தையும் பார்வையிட்டேன் மக்களை சரியான வழியில் வழி நடத்தக்கூடிய கட்சியாக இருக்கிறது.
இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 2) -சாகரன்
ஆனால்… பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கலுக்கு பின்னரான மற்றைய தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சம்பந்தரும், சுரேஸ{ம் கூட தெரிவு செய்யப்படுவது சந்தேகம் என்ற களநிலமை ஆருடம் கூறுமளவிற்கு மாற்றி வருகின்றது. கதிரை பறிபோகும் என்ற செய்தி கொடுத்த ‘பேதி’ தமிழ் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் அன்றேல் தமிழ் பிரதிநித்துவம் பறிபோய் விடும் என பகிரங்கமாக ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டனர் சம்மந்தர் குழுவினர். அது மட்டும் அல்லாமல் இவர்களால் துரோகக் குழுக்கள் என்றழைக்கப்படும் ஏனைய தமிழ்கட்சி உறுப்பினர்களிடம் ‘வேண்டுதலும்’ இரகசியமாக விடுகின்றனர். கிழக்கில் தமது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்ய இரா. துரைரத்தினத்தை கொழுக்கி போட்டு இழுக்க எடுத்த சகுனி சிவசக்தி ஆனந்தனின் முயற்சிகளும் இந்த வகையானதே. வன்னியில் இம்முறை ஆனந்தன், அடைக்கலநாதன் போன்றோர் காணமல் போவது உறுதி என்ற இனிப்பான செய்திகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியை ஆதரித்த வடக்கு கிழக்கை மையமாக கொண்ட தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கில் மகிந்தாவிற்கு கிடைத்த எதிர் வோட்டுக்களில் மயங்கி தனித்து நிற்றல், எதிர்த்து நிற்றல், வேறு அணிகளுடன் அணி சேர்ந்து நிற்றல் என்ற ஆசனக் கனவுகளில் புதிய பாதை அமைத்து தேர்தலில் நிற்கின்றன. தமிழ் தேசியம் என்ற குறும் தேசியவாதத்ததையும் தூக்கி கரகாட்டம் ஆட முயல்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பதை தவிர்த்து குறும் தேசியவாத இனவெறியை தமிழ் மக்களுக்கு ஊட்டி மீண்டும் சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்ற அளவிற்கு பேசத் துணிந்துவிட்டனர். இப் புதுப்பாதையில் தமக்கு சேர்ந்து நிற்பதைவிட தனித்து நிற்பது அதிகமான பாராளுமன்ற கதிரைகளை வாரி வழங்கும் என்று கனவுகளைக் பலரிடம் காணக் கூடியதாக இருக்கின்றது. இதில் சிலர் தனி தன்மையுடன் நிற்கின்றோம், ஆனால் நாம் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவோம் என்று ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ என்ற கோதாவில் தேர்தலில் நிற்கின்றன. பாராளுமன்றத் தேர்தலின் பின்பு அமையும் அரசில் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதைக் கருதாக்க கொண்டு செயல்படுகின்ற இவர்களின் ஆசைகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுத்தால் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்?
மறுபுறத்தில் நிராசை என்று தெரிந்தும் இதே மாதிரியான ஆசையில் ஐதேக உடனும் பலர் கூட்டு வைத்துள்ளனர். சரத் பொன்சேகாவுடன் கூட்டமைத்து செயற்பட்ட ஐதேகட்சி சரத் பொன்சேகாவையும் ஜேவிபியையும் கழட்டி விட்ட நிலையில் ஜேவிபி கொள்கைகள் அற்று தனித்து, தவித்து சிறையில் இருக்கும் சரத்தையும் தாங்கி? நிற்கின்றது. ஜேவிபி இத் தேர்தலுடன் காணாமல் போகும் நிலமைகளே பெரும்பாலும் ஏற்படும் என்பது அவர்களுக்கும் தெரியும்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரிக் கட்சிகள் தமக்கிடையே ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்து ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்து தமக்கிடையே தொகுதிப் பங்கீட்டை மேற்கொண்டு செயற்பட வேண்டிய கடப்பாட்டில் இருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த யாழ், வன்னி மாநகர தேர்தலில் ஐக்கியப்பட்டு நின்றதை விட மேலும் பிளவுபட்டு நிற்பதையே காண முடிகின்றது. பத்மநாபா ஈபிஆர்எல்எவ், புளொட் அமைப்பினர் ஐக்கியப்பட்டு வடக்கு கிழக்கு முழுவதும் தேர்தலில் நிற்கின்றனர். இதில் சிறப்பாக பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் ஐக்கிய முன்னணியிற்காக அர்ப்பணிப்புடனும் விட்டுக் கொடுப்புடனும் செயற்பட்டும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை அமைக்க செயற்பட்டு வந்தனர். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணி அமைப்பது செயல் முறையில் முடியாமல் போய் விட்டது. ஆனாலும் எழுதப்படாத ஒரு ஐக்கிய முன்னணி வேலைகளை இவ் பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் ஈடுபடுவதை இவர்களின் பிரச்சாரம், பத்திரிகை அறிக்கைகள், பேட்டிகளில் அறிய முடிகின்றது. இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகும்.
இனிவரும் காலங்களிலும் தங்களின் ஐக்கிய முன்னணி முயற்சிகளை தொடரப் போவதாக அவர்களின் அறிக்கைகளில் மட்டும் அல்ல செயற்பாடுகளிலும் காணப்படுவது ஒரு நம்பிக்கை தரும் செயற்பாடு ஆகும். மாகாண மட்டத்து பிராந்திய நலன் என்பதற்கு அப்பால் நாட்டின் நலன் என்ற இவர்களின் பரந்துபட்ட பார்வையும், செயற்பாடுகளும் கடந்த காலங்களைப் போல் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவர்கள்தான் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை நட்சந்திரங்களில் முதன்மையானவர்கள். தென்னிலங்கையில் உள்ள ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகளுடன் ஒரு பரந்துபட்ட தொடர்பை வலுப்படுத்தும் பரந்து பட்ட செயற்பாடுகள் இவர்களிடம் இன்னமும் இருக்கின்றது. இதுவே தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி நகர்த்த ஏதுவாக அமையும்.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் கொள்கை, கோட்பாடு, பொதுவான வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் செயற்படாமல் தொகுதிகளை பங்கீடு செய்வதை முதன்மைப்படுத்தி பலரும் செயற்பட முற்படுவதில் பலரின் கவனம் அதிகம் இருந்ததினால்தான் இவர்களால் பரந்து பட்ட ஐக்கிய முன்னணியை சாத்தியப்படுத்த முடியாமல் போய்விட்டது. சிறுபான்மை தமிழர் மகாசபையினர், தமிழ் தேசியம் பேசும் கட்சிகளுடன் பேசுவதில் காட்டிய ஈடுபாடு முற்போக்கு ஐனநாயகக் கட்சிகளுடன் பேசும் போது காட்டவில்லை என்பது துர்அதிஷ்டவசமானது. இதேபோல் இன்னொரு பகுதி தமிழ் கட்சியினர் அரசுடன் இணைந்து போட்டியிடுவதில் இருக்கும் சௌகரியங்களை விரும்பும் நிலயில் இருந்ததும் இன்னொரு காரணம் ஆகும்.
மலையக கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் இலங்கையின் பெரும்பான்மைக்கட்சிகளாக இணைந்து போட்டியிடுகின்றன. இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐதேக என்பன எக்காலத்திலும் முழு இலங்கையும் பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக இருந்ததில்லை. இடதுசாரி கட்சிகள் மட்டும் பலவீனமான நிலையிலும் முழு இலங்கைக்கான கட்சிகளாக ஒரு காலத்திலேனும் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. இதேபோல் சிறுபான்மையினரின் கட்சிகள் பிராந்திய கட்சிகளாகவே இருந்து வருகின்றன. தற்போது இவை மேலும் பிரதேசக் கட்சிகளாக குறுகி வருகின்றன. பிராந்தியக் கட்சிகள் தேசிய நலன்களைப் பற்றப் பேசுவதில்லை. இது அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் நிகழ்ந்தது வருந்தத் தக்கது.
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எடுத்த நிகழ்வைத் தவிர வேறு எந்த நிகழ்வுகளிலும் அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக செயற்படவில்லை. மாறாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கட்சியாகத் தான் செயற்பட முற்பட்டனர். உலகில் ஏற்பட்டு வரும் புதிய சூழலுக்கு ஏற்ப பிராந்தியக் கட்சிகள் தேசிய நலன்களிலும் அக்கறை கொண்டு செயற்பட்டு தேசியக்கட்சிகளாக பரிணாமம் அடைய வேண்டிய சூழலில் குறும் தேசியவாதம் மட்டும் பேசி பிரதேசக்கட்சிகளாக குறுகி வருகின்றன. இது எதிர்காலத்தில் இவர்களை இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாகத் தான் அமையப் போகின்றது.
இந்நிலையில் இந்த குழம்பிய குட்டையில் தமிழ் தேசியம் என்ற வசிய மருந்தைப் பாவித்து சம்மந்தர் குழுவினர் சில ஆசனங்களை கூடுதலாக பிடிக்க திட்டம் போட்டும் விட்டார்கள். ஆனால் இவர்களால் நான்கு தொடக்கம் ஏழு வரையிலான தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும். இவர்களுக்கு நாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று இரு தேசம் ஒரு நாடு என்று பறப்படடிருக்கும் புலம்பெயர் புலிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் களத்தில் உள்ளது. புலிகளின் தீவிர ஆதரவாளர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்கள் ஒன்று தொடக்கம் மூன்று வரையிலான ஆசனங்களை வெல்லும் வாய்ப்பு இருக்கின்றது. சிவாஜிலிங்கத்தின் கதி அதோ கதிதான். இவர் தலையில் துண்டைப் போடுவதைத் தவிர வேறு விமோசனம் இல்லை. வேலுப்பிள்ளையரின் மரணச்சடங்கு, பார்வதி அம்மாளின் வெளிநாட்டுப் பயண ஒழுங்கு என்ற எம்ஜிஆர் பாணி வேலைகள் இந்த ‘சிவாஜி’ க்கு கை கொடுக்கவில்லை.
(தொடரும்..) –சாகரன்
நன்றி! தேனீ இணையம்.
இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 1) -சாகரன்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று பாராளுமன்றத் தேர்தல் காய்சல் இலங்கையில் வீசத் தொடங்கி விட்டது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றி தோல்விகளின் அடிப்படையிலும் அதற்கு அப்பாற்பட்டும் தேர்தல் கூட்டுகள் அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. கூடுதலான பாராளுமன்றக் கதிரைகளை எப்படிப் பெறுவது என்பதே தேர்தலில் பிரச்சாரதில் மேலோங்கி இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வருதல் இதன் தொடர்சியாக 13 வது திருத்தச்சட்டத்தை மேலும் அர்தமுள்ளதாக அமுல்படுத்தல். 17 வது தேர்தல் திருத்தச் சட்டத்தை மாற்றி ஜனாதிபதி முறமையை இல்லாது ஒழித்து அதிகாரம் கூடிய பிரமர் பதவியுடன் கூடிய பாராளுமன்ற மறமையை ஏற்படுத்தல், விருப்பு வாக்கு முறையை இல்லாது ஒழித்தல், விகிதாசாரப் பிரநிதித்துவத்திற்கு பதிலாக தொகுதி, விகிதாரப் பிரதிநிதித்துவம் கலந்த ஒரு முறையை ஏற்படுத்தல், இரண்டாவது சபை முறமையை ஏற்படுத்தல் என்பன முக்கியமாக பிரச்சாரப்படுத்தப்படுகின்றன. மற்றபடி தேர்தலில் தமது கொள்கை, கோட்பாடுகள், வேலைத்திட்டம், என்பவற்றையெல்லாம் கடாசிவிட்டு கட்சிகள் தமது தேர்தல் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளன.
தங்களோடு சேர்ந்து போட்டியிட வேண்டும் அன்றேல் தனித்தனியாக சிறுபான்மை இனங்களின் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பதையே பெரும்பான்மை இனத்தவரை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்றும் போல் விரும்பின. அவர்களின் விருப்பை நிறைவேற்றவதைப் போல் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் தனித்து, தனித்து போட்டியிடுகின்றன. இலங்கையின் இடதுசாரிகள், வடக்கு, கிழக்கில் உள்ள ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி அமைப்புக்களை அவற்றிற்குள் ஐக்கியப்படுத்தி பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டு அமைப்பதில் தோற்றப் போய் தாம் மட்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சங்கமம் ஆகி நிற்கின்றன. வடக்கில் மட்டும் பலம் பொருந்தியவர்கள் தனித்த போட்டியிட்டால் தமக்கு ஒரு ஆசனமாகினும் கிடைக்கலாம் என்பதைக் கணக்கு போட்டு தனித்து நிற்க தீர்மானம் போட்டு போட்டியிடுகின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் எதிர்பார்த்தபடியே கிடைத்த வெற்றிக்கும் அப்பால் கிடைத்த அமோக வெற்றி பொதுஜன ஐக்கிய முன்னணியை மிகுந்த நம்பிக்கையுடன் பாராளுமன்றத் தேர்தலை நோக்கி பாய்சலுடன் அணுக வைத்துள்ளது. தாம் கிழிக்கும் கோட்டிற்குள் யாவரும் நிற்கவேண்டும் என்ற சற்று அதீத எதிர்பார்ப்புடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இத் தேர்தலை எதிர் கொள்கின்றது. ஏற்கனவே பொது ஜன ஐக்கிய முன்னணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், மலையக கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் தமது பாதையை மேலும் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன்; இறுக்கமாக பிணைத்துக் கொண்டு அவர்களின் சொற் கேட்டுச் செயற்பட தயாராக உள்ளனர். இவ்வாறு செயற்பட வேண்டிய நிலமையில் உள்ள கட்சிகளின் நிர்பந்த நியாயத் தன்மை புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன ஐக்கிய முன்னணியிற்கு கிடைத் நாடு தழுவிய அமோக ஆதரவும், தமிழ் மக்கள் மத்தியில் அரசுடன் இணைந்திருந்தவர்களால் திரட்டிக் காட்டப்பட முடியாத ‘அமிர்த’ ஆதரவும், இலங்கை ஆட்சியை இனிமேல் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்குகள் இருக்க மாட்டாது என்ற பாடத்தையும் உறுதி செய்துள்ளது. இதனால் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளை அது வெற்றிலை வைத்து அழைக்கத் தயாராக இருக்கவில்லை. ‘வந்தால் வரட்டும் வராவிட்டால் பரவாய் இல்லை’ என்ற மன நிலையிலிருந்து தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழர் தரப்பு கட்சிகளை பார்கின்றது. இதன் வெளிப்பாடே ஏற்கனவே அரசில் இணைந்து செயற்படுபவர்களையே வெற்றிலையிலும், அவர்தம் சொந்த சின்னத்திலும் போட்டியிட அனுமதித்ததாகும். மலையகத்து கட்சியான மலையக மக்கள் முன்னணியையும் இதே அணுகுமுறையில் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதித்தது.
அரசில் அங்கம் வகித்தவர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கால கட்டத்தில் நிலவிய சரத் பொன்சேகாவின் ‘மாயமான் ஆதரவு அலை’ தங்களை அடித்து விடுமோ என்று தப்புக் கணக்கு போட்டு ஜனாதிபதித் தேர்தலில் ஓடும் புளியம் பழம் போலவே பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவிற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகள் இவர்கள் கணிப்பை முற்று முழுதாக மாற்றி எழுத தாமே மகிந்தாவிடம் காவடி தூக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய பரிதாப நிலைதான் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்த ‘ஓடும் புளியம் பழம்’ கதை மகிந்த சகோதரர்களுக்கும் தெரியாமல் இருக்கவில்லை என்று யாரும் எதிர்பார்க்க முடியாது தானே. அதுதான் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழ் கட்சிகளை தம்முடன் இணைந்து போடடியிடுமாறு இம்முறை ‘வெற்றிலை’ வைத்து அழைக்கவில்லை. உங்கள் சொந்த வாத்தியத்தில் இசைக்கலாம் என்று ‘தேமே’ என்று இருந்துவிட்டனர்.
மறுபுறத்தில் சரத் பொன்சேகா தலமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டமைப்பிற்கு ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த பலத்த அடி (தமிழ் பகுதிகள் தவிர்த்து) பலரையும் சிந்திக்க வைத்தது. இது ஐ.தே கட்சியை ஜேவிபியையும், சரத் பொன்சேகாவையும் கழட்டிவிட்டு முஸ்லீம் காங்கிரசையும் தமிழ் கட்சிகளையும் மேலும் அரவணைக்கத் வைத்து விட்டது. முஸ்லீம் காங்கிரசும், மேலக மக்கள் முன்னணியும் பச்சைக்கொடியை காட்டி ஐ.தே கட்சியுடன் சங்கமம் ஆகின. தமிழரசு கட்சி – சம்மந்தர்குழு பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஐதே கட்சியுடன் பகிரங்கமாக பிணையும் நோக்குடன் தனிவழி சென்று ‘தமிழ் தேசியம்’ பேசி மீண்டும் தமிழ் மக்களிடம் ஆணை கேட்கின்றது. ஆனால் தேர்தலில் ஐதேக எதிராக பிரசாரம் செய்வதில்லை என்ற எழுதப்படாத வர்க்க ஒப்பந்தத்தின் படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. அப்படியே செயற்படுகின்றது. இது ஒன்றும் புதிய விடயம் அல்ல கடந்த 60 வருட பிற்போக்கு தமிழ் ஏகபோக சிந்தனைத் தலைமைகளின் செயற்பாட்டின் தொடர்சிதான். இச் செயற்பாடே தொடர்ந்தும் தமது எதிர்ப்பு அரசியலைச் செய்து தங்கள் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டு இருக்க சௌகரியமானது என்று வழமைபோல் முடிவு எடுக்கத் தூண்டியது.
புலிகளை கொல்வதில் தலைமை வகித்த இராணுவத் தளபதியை ஆதரியுங்கள் என்று தாம் போட்ட ஆணைக்கு இன்னமும் ஏமாற தமிழ் மக்களில் ஒரு பெரும் பகுதியினர் இருக்கின்றார்கள். அதனால் தான் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு கூடுதல் வாக்குகளை மகிந்தாவை விட போட்டார்கள். தொடர்ந்தும் இந்த தமிழ் மக்களை ஏமாற்றி பாராளுமன்றக் கதிரைகளை அதிகம் பெற்று பாராளுமன்றத்திலும், வெளியிலும் 60 வருடகாலம் தொடரும் ஏகபோகத்தை தமிழ் மக்கள் மத்தியில் நிலைநாட்ட முடியும் என்ற அதீத பேராசையில் சம்மந்தர் குழு பிரபாகரன் நியமனங்களைத் தவிர்த்து தனித்து பாராளுமன்றத் தேர்தலில் குதிக்கின்றது. இந்திய அரசிடம் நல்ல பிள்ளை பெயர் வாங்க பிரபாகரன் நியமனங்களைத் தவிர்த்தல் உதவிகரமாக இருக்கும் என்று சம்மந்தருக்கும், சுரேஸ{க்கும் நன்றாகவே தெரியும். இதன் மூலம் சம்மந்தரின் கேரளாவில் சொத்து சேர்தலும், அடைக்கலநாதனின் திருச்சி வியாபாரமும், சென்னையில் சுரேஸ், மாவையின் முதலீடுகளும் தங்கு தடையின்றி செயற்படுத்த உதவியாக இருக்கும் என்று கணக்குப் போட்டு தமிழ் மக்களுக்கு கணக்கு விடுகின்றனர்..
(தொடரும்..) (இவ் ஆய்வுக் கட்டுரை 4பாகங்களாக தொடர்ந்து வெளிவர இருக்கின்றது)
நன்றி! தேனீ இணையம்.
இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 3) -சாகரன்
(நேற்றைய தொடர்ச்சி…) தமக்குள் ஐக்கிய முன்னணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ், புளொட் இனர் இம்முறை நம்பிக்கையூட்டும் வகையில் மக்களிடம் வாக்குகளைப் பெற்று தமது பலத்தை நிரூபிப்பர். இவர்களின் பாராளுமன்ற பிரசன்னம் நிச்சயம் ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். இவர்கள் மட்டுமே வடக்கு கிழக்கு முழுவதும் தமது நியாயாதிகம் நிறைந்த ஆதரவை நிரூபிப்பர். பாராளுமன்றத் உறுப்பினர் தெரிவு எண்ணிக்கைக்கு அப்பால் ஒரு பரந்துபட்ட ஆதரவுத்தளத்தை நிரூபிக்க வேண்டி நிலையிலும் இவர்கள் உள்ளார்கள். இதனை உறுதி செய்யும் வகையில் இவர்களின் செயற்பாடுகளும் ஆதரவுத்தளமும் விரிந்து வருவதாக அறிய முடிகின்றது. வடக்கில் மட்டும் போட்டியிடும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையினரின் வாக்கு வங்கியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களின் பாராளுமன்றத் தெரிவு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஜனநாயக முற்போக்கு இடதுசாரி ஐக்கிய முன்னணியை தேர்தலுக்கு பிறகு இன்னும் வலுப்பெறச் செய்ய உதவிகரமாக அமையும். இவர்கள் இவ்விடயத்தில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ், புளொட் போன்றவர்களுடன் இணைந்து செயற்படுதல் அர்த்தம் உள்ளதாக அமையும். இது அவசியமானதும் கூட. சாதிய அடிப்படையிலான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையே ஐக்கியத்திறகு பதிலாக மேலும் பிளவுகளையே ஏற்படுத்தும். எனவே வர்க்க நலன்களை முதன்மைப்படுத்தி வர்க்க உடன்பாட்டுடன் செயற்படுதல் முற்போக்கானது சமூகங்களுக்கிடையில் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்து ஐகிகியத்தை பலப்படுத்தும். இதில் தமது கவனத்தை சிறுபான்மை தமிழர் மகாசபை அதிகம் செலுத்தல் வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 9 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐதே கட்சி இற்கு 4 பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லீம் காங்கிரஸ{க்கு 3 உறுப்பினர்களும் என தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களே இருக்கின்றன.
வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்கள், சிங்கள மக்கள் செறிந்த வாழும் பிரதேசங்களில் முஸ்லீம், இலங்கைத் தேசியக்கட்சிகள் அங்குள்ள பாராளுமன்ற ஆசனங்களை தமக்கள் பகிர்ந்து கொள்ளும். சிறப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம், சிங்கள மக்களின் கூடுதல் பிரதிநிதித்துவம் இம்முறை நிச்சயம் உறுதிப்படுத்தப்படும். வன்னி யாழ்பாணத்தில் முஸ்லீம் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு செல்லக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் உள்ளது. பகிரப்பட போகும் வாக்குகள் தமிழ் மக்களின் வாக்குகளே இதனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரநிதித்துவம் இம்முறை பாராளுமன்றத்தில் நிச்சயம் குறையும்.
இவ்வாறு குறைந்த பிரநிதித்துவத்திலும் ஒரு பலமான நிலமை கடந்த 60 ஆண்டுகளை விட ஏற்படப் போகின்றது என்பது தான் சிறப்பான அம்சம். ஆமாம் கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களின் பிரதிநித்துவம் ஏகபோகம் என்ற கோதாவில் தமிழ் மேட்டுக்குடியினரிடம் மட்டும் இருந்து வந்தது. இந்திய படைகளின் பிரசன்னம் இருந்த குறுகிய காலப்பகுதி தவிர்ந்த ஏனைய காலங்களில். இம்முறை அவ்வாறு ஏகபோகமாக அமையமாட்டாது. எண்ணிக்கையில் தமிழ் பிரதிநித்தவம் குறைவாக இருந்தர்லும் பன்முகப்படுத்பட்ட தலமையில் பலமான உறுதியான முற்போக்கான நிலமையே பாராளுமன்றத்தில் ஏற்படப் போகின்றது. இத ஒரு ஆரோக்கியமான நகர்வு.
60 வருடகாலமாக நிலவி வரும் காட்டிக் கொடுக்கும் தமிழ் தலைமை பலவீனம் அடைந்து போகும் ஆனாலும் அமையப் போகும் பாராளுமன்றத்தில் எண்ணிக்கையில் தமிழர் தரப்பில் இவர்களே கூடுதலாக இருப்பர். எண்ணிக்கையைவிட கொள்ளை கோட்பாடு வேலைத்திட்டம் செயற்பாடு என்பனவற்றில் ஏனையோர் பலமாகவும் காத்தரமான பங்களிப்பையும் வழங்கப் போகின்;றார்கள். இது மிக ஆரோக்கிமான நகர்வுதான். இதன் தொடர்சியாக வருகாலங்களில் அமையப் போகும் பாராளுமன்றங்களில் தமிழ் பிற்போக்குத் தலமை மேலும் பலவீனப்பட்டே போகும், போக வேண்டும்.
எனவே எண்ணிக்கையில் கூடுதலான தமிழ் உறுப்பினர்கள் விழலுக்கு இறைத்த நீராகப் போனதுதான் வரலாறு. மாறாக யாழ் மாநகரசபையில் தோழர் சுபத்திரன் போன்றவர்கள் தனி நபராக? நின்று தமிழர் விடுதலைக் கூட்டணி செல்லையன் கந்தையனை சரியான திசைவழியில் செல்ல ஒத்தழைப்பும், ஊக்கமும், தைரியமும், ஏன் வழி நடத்தலும் செய்தது போல் பாராளுமன்றத்தின் திசைவழி பயணிக்கப் போகின்றது. மீண்டும் ஒரு ‘யாழ் நூலகத்தை புதிப்பித்த’ வரலாறு நிகழத்தான் போகின்றது.
இதேபோல் புளொட் அமைப்பின் லிங்கநாதனின் தலமையில் வவுனியா மாநகர சபை நடைபெற்ற காலத்தில், கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகார வரம்பிற்குள் வவுனியா மாநகரை புலிகளின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டு செல்லவில்லையா? அதுபோலவே பாராளுமன்றத்தில் ஏகபோகத் தலமை அற்ற பன்முகப்படுத்பட்ட தமிழர் தலமையின் செயற்பாடுகள் இருக்கப் போகின்றது. வன்னி நிலப்பரப்பு அரசு அதிபர்கள் ‘வுhசநநமதிகள்’ திருமதி சாள்ஸ், திருமதி. இமெல்டா சுகுமார், திருமதி. கேதீஸ்வரன் போன்றோர் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சாதித்து காட்டுவதைப் போல் அமையும் புதிய பாராளுமன்றத்தில் புதிய தமிழ் தலமைகள் சாதித்துக் காட்டும் புதிய நிலமைகள் ஏற்படப் போகின்றது.
ஆனால் வழமை போல் தமிழ் மக்களின் பிற்போக்கு ‘தமிழ் தேசிய’த் தலைமை ஐதேக கை கோர்த்து தம்மால் இயன்ற குழப்பல் வேலைகளை செய்து கொண்டே இருப்பர். இச் செயற்பாட்டை சம்மந்தர் சுரேஸ் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் விருப்புடன் செய்து முடிப்பர். ஆனால் ஒரு மகிழ்சியான விடயம் இம்முறை சம்மந்தர் தெரிவு செய்வதற்குரிய வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருங்கின்றது. இதே நிலமையே சுரேஸ{க்கும் இருப்பதாக அறியமுடிகின்றது. இந்நிலமையில் தேசியப்பட்டியல் ஊடாக கள்ளக் கதவால் பாராளுமன்றத்திற்கு நுழையும் நரி வேலைகளை இவர்கள் ஏற்கனவே செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்களின் தவிர்ப்பு தமிழ் மக்களின் விமோசனத்திற்கான முதல் படியாக அமையும்.
இன்றைய நிலையில் பல முனைகளில் இருந்தும் புலிப்பினாமிகளின் ஈனக்குரல்கள்; கேட்க ஆரம்பித்து விட்டன.
இம்முறை பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் குறையப் போகின்றது. பல நூறு வேட்பாளர்கள் பல கட்சிகள், குழுக்களாக தேர்தலில் தமிழ் பிரதேசங்களில் தேர்தலில் நிற்பதினால் தமிழ் மக்களின் வாக்குகள் பிரியப் போகின்றன என ‘தமிழ் தேசிய’த்தின் பெயரால் மக்களை முள்ளிவாய்காலில் மண்டியிட வைத்தவர்கள் பிளிருகின்றனர். தமிழ் தேசியக் கூப்பாட்டினரின் இந்தக் கூக்குரல் எப்படி இருக்கின்றது என்றால், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை விடுவிக்க புலிகளை கோராமல், புலிகளை ஆயுதம் கைவிடுமாறு கோராமல் இலங்கை அரசாங்கத்தை மட்டும் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தம் செய்து பொதுமக்களை காப்பாற்றுமாறு கோருவது போல் கோரி புலிகளை காப்பாற்ற எடுத்த முயற்சியை போன்றதாகும்.
இவ் பிழையான அணுகுமுறை முள்ளிவாய்காலில் பல ஆயிரம் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. ஏன் புலிகளையும் காப்பாற்ற முடியாமலும் போனது போன்றதாகும். இன்றும் சாராம்சத்தில் இதேமாதிரியான கூக்குரலையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரிந்து நின்று இடுகின்றனர். தமிழ் மக்களின் பிரநிதித்துவம் குறைந்து விடுகின்றது என்று நீலிக்கண்ணீர் வடிப்தெல்லாம் சாராம்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ஆசனம் குறையப் போகின்றது என்பதன் மறு வடிவமே. தமிழ் மக்களிடம் ஏக ஆதரவு உங்களுக்கு தான் இருக்கின்றது என்றால் ஏன் பயப்பட வேண்டும் எத்தனை நூறுபேர் பல குழுக்களாக பிரிந்து நின்றாலும் நீங்கள் ‘தனித்து’ வெல்லலாம் தானே?
(தொடரும்..) -சாகரன்
நன்றி! அதிரடி இணையம்
பின் வருவதை விட நம்பகமான ஆரூடத்தைக் கிளி ஜோசியரிடமோ “சாஸ்திரம் சாஸ்திரம்” என்று தெருவால் கூவிக்கொன்டு போகிற குறப் பெண்ணிடமோ பெறலாம்:
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 9 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐதே கட்சி இற்கு 4 பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லீம் காங்கிரஸ{க்கு 3 உறுப்பினர்களும் என தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களே இருக்கின்றன.”
கவனத்தை வேறு திசையில் திருப்பிக் கட்டுரை பற்றிய கலந்துரையாடலுக்கு ஊறு செய்கிற இடுகைகள் இவை. வேன்டுமானால் தனிக் கட்டுரையாக வெளியிடலாமே.
தேனீ போன்ற இணையத்தளங்களில் விஷம் உள்ள அளவுக்கு விஷயம் இருப்பதில்லை.
பச்சையான சந்தர்ப்பவாத அரச ஆதரவு மட்டுமல்லாது, தமிழருக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளையும் மூடிமறைக்காத போது நியாயப்படுத்துகிற ஒரு கூட்டத்தைப் பற்றிய விமர்சனப் பாங்கான சில சொற்களைத் தாங்கிக் கொள்ளா இயலாமலா இந்தப் பொய்கள் இங்கு மீள அள்ளிக் கொட்டப்பட்டுள்ளன?
இக்கட்டுரை ஓர் நடுநிலமையாலரால் நடுநிலைமையாக அவரது கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் இக் கட்டுரை சூத்திரம் இணையம், அதிரடி இணயத்தில் முதலில் வந்தது, நான்தான் தவறுதலாக “நன்றி! தேனீ” என்று குறிப்பிட்டுவிட்டேன். அத்துடன் நானும் “இனியொரு” வாசகன் என்ற முறையிலும் பல கோணங்களில் ஓர் விடயத்தை ஆராயுமிடத்து “இனியொரு” வாசகர்களின் ஆய்வு, விமர்சனக்களுக்கிடையே பகிர்ந்து கொள்கிறேன். அத்துடன் தாங்கள் தேனீயைப் பற்றி கூறும் கருத்து சரியே.
கட்டுரையின் “நடுநிலை’ பற்றி எனக்கு மிகுந்த ஐயமுள்ளது.
நான் முன்னர் கூறிப்பிட்ட மேற்கோள் அதற்கான ஒரு சான்று. கட்டுரையில் பல்வேறு இடங்களில் தெளிவாகவே புலனாகும் நேர்மையீனமான ஒரு பக்கச் சார்பு உங்களுக்குத் தெரியவில்லையா?
ஏனினும் “இனியொரு” கட்டுரைக்கும் இந்த நீண்ட கட்டுரைக்கும் உள்ள உறவு என்ன?
“இனியொரு” கட்டுரையைப் பற்றிய ஆக்கமான கருத்துரைக்க இடையூறகவே இந்த இடுகையின் நீளமும் உள்ளடக்கமும் உள்ளன.
குறிப்பிட்ட கட்டுரை முக்கியமானதாகவிருந்தல் அது பற்றிய ஒரு குறிப்புடன் அல்லது அதன் ஒரு சுருக்கத்துடன் அதன் தொடுப்புக்களைச் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
இயலுமாயிருந்தால் அதை இனியொரு மூலம் மறு பிரசுரம் செய்திருக்கலாம்.
அதைப் பற்றி விவாதிக்க இது ஏற்ற இடமல்ல.
இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும்.. (பாகம் 4+5) –சாகரன்
(நேற்றைய தொடர்ச்சி..) சரி ஒரு பேச்சுக்கு உங்கள் வாதப்படி தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது பல தமிழ் உறுப்பினர்கள் தேர்தலில் நிற்பதினால் என்றும் எடுத்துக்கொள்வோம். இதன் பாதிப்பு முதன்மையாக இருக்கும் திருமலையில் சம்மந்தர் இந்த தள்ளாத வயதில் தேர்தலில் இருந்து ஓதுங்கி தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்வதை உறுதிப்படுத்தட்டும் பார்கலாம். இதே போல் சும்மா இருந்து சொத்து சேர்த்து, உடம்பை மட்டும் வளர்த்த சுரேஸ{ம், மாவையும், செல்வம் அடைகலநாதனும் தேர்தலில் இருந்து பின்வாங்கி ஏனைய தமிழ் உறுப்பினர்களுக்கு வழிவிடட்டும் பாரக்கலாம். இவர்கள்தான் தமிழர்கள். ஏனையவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்கள் மக்களுக்காக போராடவில்வையா?
கடந்த பாராளுமன்றத்தில் 22 பேர் கூட்டாக? இருந்து ஒன்றும் இவர்கள் கிழி;க்வில்லையே. வெளிநாடுகளில் தங்கள் குடும்பத்திற்கு சொத்துக்களை சேர்த்ததைத் தவிர. எனவே நீங்கள் வழிவிட்டு, ஒதுங்கி வழிவிடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எண்ணிக்கையை குறைத்து வல்லவர்கள், நல்லவர்கள், திறமையானவர்கள், செயற்பாடாளர்கள் போன்ற தமிழ் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யுங்கள் பார்கலாம். வாக்குகளைச் சிதறாமல் செய்து பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை கூட்ட உதவுங்கள் பார்க்கலாம். இதுபோன்ற கோரிக்கையை அல்லது ஆய்வுக்கட்டுரை எழுதட்டும் பார்க்கலாம். இவற்றை சிறப்பாக தமிழ் தேசியம் பேசும் ‘கனவான்கள்’ செய்யட்டும் பார்க்கலாம்.
தமிழ்நாடு வழசரவாக்கத்தில் சொத்துக்களையும், யாழ்பாணத்தில் சீட்டுக்கம்பனி நடத்தி மக்களின் பணத்தை சூறையாடிய அரசுடன் நல் உறவில் உள்ள ‘சப்றா’ சரவணபவனையும் வேட்பாளராக இல்லாமல் ஒதுங்க சொல்லட்டும் பார்க்கலாம். ஏன் சுரேஸின் அன்புத் தம்பியை மீண்டும் விடுதலையின் பெயரால் விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் ஏனையோரை போர் முனைக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் படிப்பைத் தொடர்ந்ததைப் போன்று இன்றும் படிப்பைத் தொடரச் சொல்லலாம் தானே. ஆருயிர் நண்பன் ஜங்கரநேசனை விட வல்லவர்கள், மக்களுக்காக போராடியவர்கள் இந்த மண்ணில் இல்லையா? சுய விளம்பர விரும்பி ஐங்கரநேசன் சுரேஸின் நண்பனைத் என்பதைத் தவிர வேறு என்ன தகுதி உண்டு அவருக்கு,
ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதைதான் உங்கள் (ஏகப்பிரதிநிதித்து புலிக் கூட்டங்களின்) தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைகின்றது என்ற கூப்பாடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநித்துவம் குறையப் போகின்ற என்ற படு பிற்போக்குத்தனமான சுய நலமான சிந்தனைகளின் வெளிப்பாடுகளே இவை வேறு ஒன்றும் அல்ல. பாராளுமன்ற நாற்காலிகளின் சுகம் அப்படி. பாராளுமன்றம் யாழ் மேட்டுக்கடியினரின் பூர்வீக சொத்தா?
மகிந்த அரசிடம் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்று இருக்கின்றது. அதனை யார் பாராளுமன்றம் வந்தால் என்ன? யார் வராவிட்டால் என்ன அவர்கள் அமுல்படுத்தத்தான் போகின்றனர். இது முழுமையான தீர்வுத்திட்டமாக இருக்கும் என்று நாம் கூறவில்லை. இது ஒரு ஆரம்பத்திற்கான தீர்வுத்திட்டமாக முழுமை பெறாததாகத்தான் இருக்கும். இந்த யதார்த்;த நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்துதான் நாம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ‘பலவீனமான’ சூழலில் எம்மை புலிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது தமிழ் மக்களை. நுல்ல தலைவர்கள் புத்தி ஜீவிகள், கல்விமான்கள் பலரை புலி கொன்று விட்டது. அல்லது நாட்டையும் விட்டு துரத்திவிட்டது. இன்று ஈழத்தில் எஞ்ஞி இருப்பவர்கள் சிலரே.
இன்றுள்ள நிலமையில் தமிழ் பேசும் மக்கள் தீர்மானிக்கும் சக்தி அல்ல என்ற பலவீனமான நிலைக்கு தள்ளி கொண்டு வந்து விட்டனர் கடந்த 30 வருடம் ஏகபோகம் செய்தவர்கள். தமிழ் பேசும் மக்கள் தீர்மானிக்கும் சக்தி அல்ல என நாம் ஐனாதிபதித் தேர்தலிலும் எதிர்வு கூறி இருந்தோம். நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் இதுவே உண்மை நிலையாக அமையப் போகின்றது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் நாம் ‘தீர்மானிக்கும்’ சக்தியாக மாறலாம். எல்லாம் எங்கள் கைகளில்தான் தங்கியிருக்கின்றது. தீர்மானிக்கும் சக்தி என்ற மமதைவிடுத்து இணக்கப்பாட்டுடன் எவ்வாறு பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்ற இராஜதந்திர அணுகுமுறையை பின்பற்ற வேண்டிய நிலமையில் நாம் உள்ளோம்.
ஐக்கிய முன்னணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் கட்சிகள், சிறப்பாக மூவின மக்களின் கூட்டு முன்னணியில் இருக்கும் கட்சிகள் ஒரே மேடையில் தோன்றும்போது இனவாதம் பேசுவதைத் தவிர்த்;தாலும், தனி மேடை போட்டு பேசும் போது தன(ம)து வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன் இனவாதம் பேசுவதை தவிர்க்க முடிவில்லை. இதனைச் சிறப்பாக கிழக்கு மாகாணத்தில் பரவலாக காணக் கூடியதாக இருக்கின்றது. இதேபோலவே விருப்பு வாக்குகள் என்ற முறமை ஒரு கட்சிக்குள்ளேயே ‘குத்து வெட்டு’ க்களை ஏற்படுத்தாமல் இல்லை.
இனங்களுக்கிடையான புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, ஐக்கியம் இன்று மிக முக்கியம். இதில் சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்படவேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர். இதனை ‘தமிழ் தேசியம்’ மட்டும் பேசும் குறும் தேசியவாதிகளிடமும், சிங்கள இனவெறிக் கட்சிகளிடமும், முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள குறுகிய இனவாத, மதவாதச் சிந்தனையுடன் செயற்படும் பதவி வெறி பிடித்தவர்களிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இனவாதம் பேசும் வேட்பாளர்களை மக்கள் இனம் கண்டு நிராகரிக்கும் நிலமைகள் மேலோங்கி இருப்பது ஒரு ஆரோக்கியமான நிலமைகளே?
60 வருடகாலம் நிலவிவந்த பிற்போக்கு தலமையை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஒரு வருடத்தில் தூக்கி வீசி முழுமையாக அகற்ற முடியாது. சிறப்பாக கடந்த 30 வருடமாக புலிகளின் துப்பாக்கிகளின் மத்தி;யில் ஒரு தலைப்பட்சமான செய்திகளையும், கருத்துக்களையும் மட்டும் ஊட்டி மூளைச்சலவையில் இருக்கும் மக்களை ஒரு வருடத்திற்குள்; தெளிவுபடுத்தி மாற்றியமைக்க முடியாது. ஆனால் சிறிய ஆட்டத்தை காண வைக்க முடியும். இவ் ஆட்டம் எதிர்காலத்தில் பலதை மாற்றியமைக்கத்தான் போகின்றது. சிறப்பாக தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த ஏகபோக தலமை, சிந்தனையை, செயற்பாட்டை உடைத்தெறியப் போகின்றது. ஒரு கதம்பமான நிலையில் எற்படப் போகும் தமிழ் பாராளுமன்றப் பிரநிதிகளின் செயற்பாட்டை ஒழுங்குபடுத்தி மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தும், சமூப் பிரஞ்ஞையுள்ள ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முன்னோக்கி நகர வைப்பதில்தான் இதன் வெற்றியின் அளவு அமையப் போகின்றது. அது எப்படி இருப்பினும் 60 வருடம் நிலவிவரும் தமிழ் மேட்டுக்குடி பாராளுமன்ற ஏகபோகத்தை விட இது முற்போக்கானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
(தொடரும்..)
இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 5) -சாகரன்
(தொடர்ச்சி…)
2010 பாராளுமன்றத் தேர்தல்
இலங்கை முழுவதிலும் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் (கூட்மைப்புகள்):
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலமையிலான கூட்டமைப்பு) (United People’s Freedom Alliance) (வெற்றிலைச் சின்னம்)
ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்பு) (United National Front) (யானைச் சின்னம்)
ஜனநாயகத் தேசிய முன்னணி (ஜேவிபி, சரத் பொன்சேகா இணைந்த கூட்டமைப்பு) (Democratic National Alliance) (கழுகு சின்னம்)
வடக்கு கிழக்கு மாகாணத்தில் போடடியிடும் பிரதான அரசியல் கட்சிகள்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
தமிழ் அரசுக் கட்சி
இலங்கை தமிழ் காங்கிரஸ்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட் கூட்டமைப்பு
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிறுபான்மை தமிழர் மகாசபை
ஈழவர் ஜனநாயக முன்னணி
மேற்கூறிய கட்சிகள் கூட்டமைப்பில் இருந்துதான் பெரும்பாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட போகின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் வடக்கு உட்பட இலங்கையின் முழுபாகத்திலும் நடைபெறப் போகும் 3 வது தேர்தல் இது. இதனால் தேர்தலில் பொதுவாக மக்கள் சற்று ஆர்வம் இன்மையுடன் இருப்பதைக் காணக் கூடிதாக இருக்கின்றது. எனவே பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலைவிட குறைந்த வீதத்திலேயே வாக்களிப்பு நடைபெறப் போகின்றது. இது சிங்களப் பகுதிகளில் அதிகமாக காணப்படும். மாறாக தமிழ் பகுதிகளில் ஜனாதிபதித் ரேதர்தலைவிட சற்றேனும் கூடுதலான வீதத்தில் வாக்களிப்புகள் நடைபெறலாம். இவற்றின் அடிப்படையில் வெற்றி, தோல்விகள் பின்வருமாறு அமையலாம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுதல் ஆசனங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறப் போகின்றது என்பது முடிந்த முடிவு. அப்படியாயின் தேசிய ரீதியில் அவர்களுக்கு யார் போட்டியாக திகழப் போகின்றார்கள் என்றால் அது ஐக்கிய தேசிய முன்னணியோ அல்லது ஜனநாயகத் தேசிய முன்னணியோ அல்ல. மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போட்டியாக திகழப் போகின்றது. ஆமாம் யார் கூடுதல் விருப்பு வாக்குகளைப் தமக்குள் பெறுதல் என்ற போட்டியே நிலவப் போகின்றது. விருப்பு வாக்கு தேர்தல் முறை செய்யும் திருகு தாளம் இது. இது தமிழ் பகுதிகளை விட சற்று அதிகமாக தென்னிலங்கையில் இம்முறை நடைபெறப் போகின்றது.
இறுதியாக, ஒரு வருடத்தில் நடைபெறும் 3 வது தேர்தல் இது. தேர்தல் தொகுதி அடிப்படையில் தேர்வு செய்யும் பாராளுமன்றத் தேர்தல் முறையில் (17 வது தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு முன்பு இருந்த தேர்தல் முறை) நடைபெற்றால் இம்முறை 4ஃ5 பாராளுமன்றத் தொகுதிகளை (கிட்டதட்ட 165 உறுப்பினர்கள்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறக் கூடியவாய்புகள் இருக்கும். ஆனால் விகிதாசாரப் பிரநிதித்துவ தேர்தல் முறையாக இருப்பதினால் 2ஃ3 பாராளுமன்ற உறுப்பினர்களைப் (கிட்டதட்ட 138 உறுப்பினர்கள்) பெறும் வாய்ப்புகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இற்கு உண்டு. ஜனாதிபதித் தேர்தலின் பின்பு ஜேவிபி , ஐ.தே கட்சினர் வேறு வேறு அணிகள் அமைத்து போட்டியிடாவிட்டிருந்தால் இந்நிலமை சாத்தியப்படாமல் போகலாம்.
இதே வேளை தமிழர் தரப்பில் வடக்கு கிழக்கில் இருந்து மொத்தமாக 20 உறுப்பினர்களுக்கு குறைவானவர்களே இம்முறை தெரிவாவதற்குரிய வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றன. சிறப்பாக மூவின மக்களும் கிட்டத்தட்ட சம அளவு பரம்பலில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம், சிங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. ஆனால் தமிழர் தரப்பில் இம்முறை பாராளுமன்றத்தில் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தும் பல கட்சி உறுப்பினர்கள் இடம்பெறப் போகின்றனர். 60 வருடகால ஏகபோக தமிழ் தலமை இல்லாது போகும். இது ஒரு ஆரோக்கியமா நகர்வாக அமையப் போகின்றது. எண்ணிக்கையை விட எண்ணங்கள், நிலைப்பாடுகள், செயற்பாடுகள் பலவாக இருந்து பலமாக இருக்கப் போவது நல்ல ஆரம்பமாக அமையும்.
சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிற்கு 2ஃ3 பெரும்பான்மை கிடைக்காதவிடத்து ஐ.தே கட்சியோ அல்லது ஜேவிபி யோ தனது ஓத்துழைப்பை வழங்கி அரசியல் அமைப்பில் வேண்டிய மாற்றத்திற்கு ஒத்துழைக்கமாட்டா. இச் சந்தர்பத்தில் தமிழ் அரசுக்கட்சி சம்மந்தர் குழுவின் ஆதரவு அரசிற்கு தேவைப்படும்; இடத்து ‘பலமான’ நிலையில் இருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, கடந்த 60 வருடகாலமாக தமிழ் பிற்போக்குத் தலமைகள் செய்ததைப் போல் எதிர்ப்பு அரசியலை மட்டுமே சம்மந்தர் குழு தூக்கிப்பிடிக்கும். ஐ. தே கட்சியுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் ஒரு துரோகத்தனத்தை செய்யத்தான் முயலுவார்கள்.
இதனைத் தவிர்பதற்கு தேசியக் கூட்டமைப்பிரை அரசியல் அரங்கில் இருந்தும், பாராளுமன்றத்திலிருந்தும் அகற்றியே ஆகவேண்டும.; புலிகளின் இல்லாமையின் பின்பு இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரதான எதிர்ச் சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். இவ்விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனையோர் அமையப் போகும் பாராளுமன்றத்தில் தமக்கிடையே ஓரு ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படவேண்டியதன் அவசியம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது இனிவரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆரோக்கியமான நிலமைகளை ஏற்படுத்த அத்திவாரமாக அமையலாம். பொறுத்திருந்து தான் பார்ப்போமே?
(குறிப்பு: பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தேசியப்பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட போகும் உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.)
(இக் கட்டுரை மாசி 20, 2010 எழுதப்பட்டாலும் பங்குனி கடைசி வாரத்திலேயே பிரசுரிக்கப்படுகின்றது)
(சாகரன்) (பங்குனி 28, 2010)
பிற்குறிப்பு:
இக்கட்டுரை சாகரன் என்ற ஓர் நடுநிலமையாலரால் (என் கண்ணோடத்தில்) நடுநிலைமையாக அவரது கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது (ஆனால் தனிப்பட்ட முறையில் யார் என்று தெரியாது). அத்துடன் நானும் “இனியொரு” வாசகன் என்ற முறையிலும் பல கோணங்களில் ஓர் விடயத்தை ஆராயுமிடத்து “இனியொரு” வாசகர்களின் ஆய்வு, விமர்சனக்களுக்கிடையே பகிர்ந்து கொள்கிறேன்.
முன்பு இக்கட்டுரையின் முதல் மூன்று பாகத்தையும் “பாராளுமன்றத் தேர்தல் – வரலாற்றுக் கடமை : சபா நாவலன்” என்ற தலைப்பின் கீழ் பின்னூட்டத்தில் இணைத்து இருந்தேன். வேறு தலைப்பு பொருந்தாத நிலையில் இத்தலைப்பின் கீழ் இணைத்திருந்தேன்.இதில் திரு. சபா நாவலன் அவர்களின் கருத்திற்கு முரண்பட்டோ, எதிராகவோ இணைக்கவில்லை. வாசகர்களின் ஆராயவிர்க்காக பகிர்ந்து கொண்டேன்.
நன்றி!
தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.
அலெக்சின் கருத்து எதனுடனும் உடன்படுகிறதோ முரண்படுகிறதோ என்பதல்ல என் கவலை.
ஒரு கட்டுரைப் பொருளைப் பற்றிய கலந்துரையாடலுக்கே இடமில்லாதபடி கட்டுரைப் பொருளுக்கு நேரடி உறவற்ற மிக நீளமான இடுகைகளின் விளைவுகள் பற்றியதே என் கவலை.
இவ்வாறான இடுகைகளால் மூலக் கட்டுரை பற்றிய கவனம் திசை திரும்புவது ஒருபுறமிருக்க, இடப்பட்ட விடயமும் அதற்குரிய பெறுமதியையும் பயன்பாட்டையும் இழந்து விடுகிறது.
இவ் விடயத்தில் இணைய இடுகைக்கான பொறுப்பாளர் கூடிய கவனம் காட்டி இடுவோரைப் பயனுற வழிநடத்த வேண்டும்.
இதுபற்றி நான் முன்பு எனது கருத்தைச் சொன்னபோது பலர் என்மேல் ஏறி விழுந்தார்கள்.