நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னெடுக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு முரணான வகையில் நம்பிக்கையில்லா தீர்மான முனைப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்தல், உறுப்புரிமையை இழக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் அரசியல் அமைப்பிற்கு அமைய பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் கடப்பாடுடையவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் அண்மையில் சட்ட விளக்கம் அளித்திருந்தது.
உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னெடுக்கப்பட்டால் அது தெளிவான அரசியல் சாசன மீறலாக கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அதனை பாதுகாப்பாக உறுதியளித்து பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை மீறிச் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசனம் பற்றி சட்ட விளக்கம் அளிக்கும் அதிகாரம் கிடையாது எனவும், அரசியல் சாசனம் பற்றி விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றிற்கு மட்டுமே காணப்படுவதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச எதிர்பாராத வகையில் நீதித்துறை சார்ந்த அனைவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராகக் குரல்கொடுத்தனர்.
பாசிச ஆட்சியொன்றின் முடிவுகள் செயற்படுத்தப்படாவிட்டால் அந்த ஆட்சிக்கு எதிரான தொடர் போராட்டங்களின் ஆரம்பப்புள்ளியாக அமையும்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மகிந்த ராஜபக்ச அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி தலைமை நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது








