தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றால் அதேயளவு சாபக்கேடு தமிழ் ‘புத்திஜீவிகள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களும் அழைக்கப்படுபவர்களுமே. இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இந்தப் ‘புத்திஜீவிகள்’ எனப்பட்டோரால் விளைந்த சேதம் கொஞ்ச நஞ்சமல்ல.
இம் முறை பாரளுமன்றத் தேர்தலிலும் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிய வண்ணமே இருக்கிறார்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதான தமிழ் நாளிதழ்களில் இவர்கள் தங்கள் தத்துவ முத்துக்களை உதிர்த்திருக்கிறார்கள். தமிழ்ப் பிரதித்துவத்தின் அவசியம் பற்றியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ.) வாக்களிக்க வேண்டியதன் தேவை பற்றியும் நிரம்பவே பேசப்படுகிறது. காலத்துக் காலம் தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றிப் பேச இந்த புத்திஜீவிகளால் முடிகிறது. புத்திஜீவிகளாய் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி இதுவாகக் கூட இருக்க முடியும்.
ஒரு தமிழ் நாளிதழின் பிரதான செய்தியாக வெளிவந்துள்ள செய்தியின் சாரம்சம் வருமாறு.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுள்ள சர்வதேச சமூகம் அதிகாரப் பகிர்வு உட்பட தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகார மையத்தை வலியுறுத்தி வருகின்றது. யதார்த்த நிலைமைக்கேற்ப தங்களையும் தாம் சார்ந்த மக்களையும் நெறிப்படுத்தக்கூடிய சிரேஷ்ட அரசியல்வாதிகளை அடையாளங்கண்டு அவர்களைப் பலமான அரசியல் அணியாக உருவாக்குவது குறித்து தமிழ் மக்கள் சிந்திப்பது அவசியமென்றும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைக் குழுக்களாகவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்களால் தமிழ் மக்களுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படும் பலம் வாய்ந்த அரசியல் அணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்பது சிறுபிள்ளை கூடப் புரிந்துகொள்ளக்கூடிய விடயமென்று சுட்டிக்காட்டும் அரசியல் அவதானியொருவர் பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைகளாகவும் வட, கிழக்குத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்போர் உண்மையிலேயே தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைப்பவர்களாகும் என்றும் தெரிவித்தார்.
யார் இந்த அரசியல் அவதானி என்பது பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் வேண்டுவதோ த.தே.கூ.விற்கான வாக்கையே. இந்த அவதானி சொல்கிறபடியான சிரேஷ்ட அரசியல்வாதிகள் இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கான பதில் என்னவாக இருக்க முடியும்? தமிழ் மக்கள் அகதி முகாம்களில் வாடுகையில் சுவிற்சர்லாந்து, இலண்டன், வியன்னா எனச் சுற்றுப் பயணம் போனார்கள். அதிலும் முக்கியமாக டெல்லியில் தவம் கிடந்தார்கள். இதைவிட இவர்கள் மக்களுக்கு என்ன பண்ணிக் கிழித்தார்கள். இப்போது மீண்டும் “துரோகி” பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த இடத்தில் கவிதையொன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
துரோகி எனத் தீர்த்து
முன்னொருநாட் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது.
சுடக் கண்டவனைச் சுட்டது.
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது.
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது.
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது.
எதிர்தவனைச் சுட்டது.
சும்மா இருந்தவனையுஞ்
சுட்டது.
இங்கே துரோகி பட்டம் சூட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் தேசியவாதிகளும் த.தே. கூட்டமைப்பும் இருக்கிறது. மாற்று அரசியல் ஒன்றைக் கட்டியெழுப்ப விடாமல் தங்களது அதிகாரம் மேலும் தொடர வேண்டுமென்று இவர்கள் விரும்புகிறார்கள். இனப் படுகொலை ஆட்சியாளர்களிடம் சலுகைகளை வேண்டி நிற்கிற அதே வேளை தமிழ்த் தேசியம் பற்றி கோஷமெழுப்பவும் முடிகிறது. “தனித் தமிழீழம் தான் தீர்வு, புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிகள்” எனச் சொல்லிய அதே வாயால் “நாங்கள் தனித் தமிழீழம் கோரவேயில்லை, விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களுக்கு எனது கட்சியில் இடமில்லை” என்று நாக் கூசாமல் பொய்யுரைக்க சம்பந்தனுக்கு முடிகிறது. அதே வேளை தமிழ்ப் பிரதிநிதித்துவம் பறிபோகக் கூடாது என்று வாய்கிழியக் கத்துகிற சம்பந்தனும் கொம்பனியும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகாமல் தமிழ்க் கட்சிகள் பொது வேட்பாளர் பட்டியலை முன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் சார்பாக முன் வைக்கப்பட்டபோதும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களது அக்கறையெல்லாம் இந்த அரசியல் அவதானி சொல்லுகிற சிரேஷ்ட அரசியல்வாதியின் கதிரையைக் காப்பாற்றுவதற்கான முன்னெடுப்பேயன்றி எதுவுமல்ல.
சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுள்ளதாகக் கதை அளக்கிற அரசியல் அவதானி, அதைச் செயற்படுத்தக் கூட்டணிக்கு வாக்குப்போடுமாறு பரிந்துரைக்கிறார். சர்வதேச சமூகத்தின் தமிழ் மக்களின் மீதான அக்கறை குறித்து நடந்து முடிந்த இறுதிக் கட்டப் போரில் அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் இப்போது எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் பார்த்தால் விளங்கும். தமிழ் மக்களின் விடுதலை மக்கள் தம் கைகளிலேயே தங்கியுள்ளது, சர்வதேச சமூகத்தின் கைகளில் அல்ல என்பதை வரலாறு தெளிவாகவே காட்டியுள்ளது. எனவே புத்திஜீவிகள் என்பதன் பேரால் நிகழ்த்தப்படும் அபத்தங்கள் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். புலி வேஷம் கட்டி ஆடிய யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இன்று புனிதர்கள் போல தேர்தல்களில் நிற்கிறார்கள். யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் புகலிடம் என அரசும் பாதுகாப்புப் படைகளும் உறுதியாக நம்பும் விதமாகச் செயலாற்றி அதன் நடுநிலைத்தன்மையைச் சிதைத்தவர்கள் தாம் இவர்கள். இதனால் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளானவர்கள் மாணவர்கள். உருவாக்கப்பட்ட பிம்பம் அழிக்கப் படாமல் இன்னமும் அரசிடம் இருக்கிறது. அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இன்று தேர்தலில் நின்று புனிதராக தம்மை காட்டுகின்ற அயோக்கியத்தனம் கண்டிக்கப்படவேண்டியதே.
தமிழ் மக்களால் தனித்து நின்று போராட இயலாது. எனவே, அந்நிய அரசுகளின் ஆதரவு தேவை என்று வாதிப்போர் பழைய பிழைகளையே திரும்பும் செயுமாறு தூண்டுகிற காரியத்தையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் சுயநலன் சார்ந்தது மட்டுமன்றி மக்கள் விரோதமானதும் கூட. அந்நிய ஆதரவு என்பது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் அந்நிய அரசுகளிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதல்ல. அரசுகளிடையே நடக்கிற காய் நகர்த்தல்களை ஒரு விடுதலை இயக்கமோ ஒடுக்கப்பட்ட சமூகமோ தீர்மானிக்க முடியாது. எங்கள் அனுபவங்களிலிருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற விதமாக எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது. இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் அதற்கான பலன்களை அனுபவிக்கப் போவது மக்களே அன்றி வித்தைகாட்;டுகின்ற தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் அல்ல.
தினக்குரலில் அரசியல் பத்தியை எழுதுகிற கலாநிதி கீதபொன்கலன் தொடர்ச்சியாக த.தே.கூ.வுக்கு வாக்களிக்க வேண்டிய தேவையையும் அதன் அரசியல் முக்கியத்துவம் பற்றியும் எழுதி வருகின்றார். இம் முறை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி. தவிர்ந்த ஏனைய கட்சிகள் யாவும் ‘பம்பலுக்காக போட்டியிடுகின்றன’ என்று சொல்லுகிறார். மேலும் பிரநிதித்துவம் பிரிவது ஆபத்தானதென்றும் அவ்வாறு பிரிக்கப்பட்டால் அவர்களை இலகுவாக ‘விலைக்கு வாங்கலாம்’ அல்லது ‘பிரித்தாளலாம்’ எனவே கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார். விடுதலை புலிகள் இல்லாத நிலையில் கூட்டமைப்பால் தனது 22 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து வைத்திருக்க முடியவில்லை. இந் நிலையில் இம் முறை கூட்டமைப்பில் இருந்து தெரிவாவர்கள் விலை போகவோ பிரியவோ மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதைவிடக் கூட்டமைப்பு அளவுக்கு விலைபோன ஒரு கட்சியைக் காண்பது அரிது. ‘அரசியல் விபசாரம்” என்பதன் முழு வடிவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த இடத்தில் புதிய கட்சிகளதும் சுயேச்சைக் குழுக்கள் மீதும் கொட்டப்படுகின்ற விஷம் பயத்தின் அடிப்படையிலானது தான். மாற்று அரசியல் அணி ஒன்று தமிழ் மக்களிடையே உருவாகாமல் தடுக்கும் முயற்சியில் தான் இந்த புத்திஜீவிகள் இறங்கியிருக்கிறார்கள்.
தனது பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார் கீதபொன்கலன்:
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் இன்றுள்ள பிரதானமான தமிழ்க் கட்சி என்று கூறக்கூடியது மட்டுமல்ல. பின்-யுத்தகால தமிழ்த் தேசியவாதத்திற்கு தலைமை வழங்க வேண்டிய நிலையிலும் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களின் போதே தமிழ்த் தேசியவாதம் கூட்டமைப்புக்கு கைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியிருந்தேன்.”
கீதபொன்கலன் சொல்லுகிற உள்ளுராட்சித் தேர்தல்களில் மக்களில் பெரும்பகுதியினர் வாக்களிக்கவில்லை. அது தமிழ்ப் பாரளுமன்ற அரசியல் மீதான வெறுப்பின் விளைவானது. தமிழ் மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு விடயம். வடக்கில் தேர்தல்கள் பற்றிய அறிவிப்பே தமிழ் மக்களை அவமதிக்கின்ற செயற்பாடு. இத் தேர்தலின் விளைவால் பயனேதும் விளையாது என்று எல்லோரும் நன்கு அறிவர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை அவமதிக்கும் விதமாக தேர்தலில் போட்டியிட்டது. மக்கள் வாக்களிக்காது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தமிழ்த் தேசியவாதம் கூட்டமைப்புக்கு கைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று விளக்கமளிக்கும் தமிழ்ப் புத்திஜீவிகள் தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் என்றால் எதிர்காலம் நிச்சயம் பயங்பரமானதாகவே இருக்கும். தனது இருப்பையன்றி வேறு எதைப் பற்றியும் அக்கறை செலுத்தாது, மக்கள் மீது நம்பிக்கை வைக்காதுள்ள குறுகிய தமிழ்த் தேசியவாதத்தால் வேறெதையுஞ் செய்ய இயலாது. இதை கடந்த நான்கு தசாப்தகால தமிழ்த் தேசியவாத அரசியலை எமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளது. இன்றுள்ள தமிழ் தேசியவாதத் தலைமைகளில் முக்கியமான சில நேரடியாகவே பேரினவாத ஆட்சியாலும் இந்திய மேலாதிக்கவாதிகளாலும் இயக்கப்படுகின்றன. வேட்பாளர் பட்டியல்களைக் கூட ஒரு அயல் நாடு தீர்மானிக்க இயலும் என்றால் தமிழ் மக்களின் இறைமை எங்கே போய் நிற்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்.
நடந்து முடிந்த அவலத்திற்குப் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்கள் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளும் தமிழ்த் தேசியவாதிகளுமே. ஆனால் இன்றும் தங்கள் சந்தர்ப்பவாத அரசியலைத் தொடர்வது பற்றியே இவர்கள் அக்கறையாய் இருக்கிறார்கள். இவர்களும் சரி, இவர்களுக்கு ஆலவட்டம் பிடிக்கும் புத்திஜீவிகளும் சரி, முகாம்களில் இருக்கும்; மக்கள் பற்றியோ நடந்து முடிந்த பேரழிவு பற்றியோ எதுவித அக்கறையுமற்று புதிய மாயைகளை, கனவுகளை, வெற்று நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஊட்டும் சீரழிவுச் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள். இது ஆபத்தானது. இன்றைய தேவை மாற்று அரசியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு அரசியல் தலைமையே. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலோ ஏனைய பிரதான தமிழ்க் கட்சிகளாலோ வழங்க முடியாது.
அறிவுத்துறை அயோக்கியத்தனங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் மிகப் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதை வரலாறு எங்குமே காணலாம், உதாரணத்துக்கு, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டாமென்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி வாக்களியுங்கள் என்று (முன்னாள் நீதியரசர் ஒருவர் உட்படத்) தமிழ்ப் புத்திஜீவிகள் தொடர்ச்சியாகக் வேண்டிக் கொண்டார்கள். ஆனால் ஏன், எதற்கு என்று எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. இரண்டு போர்க் குற்றவாளிக்கிடையில், சுடச் சொன்னவருக்கும் சுட்டவருக்கும் இடையில் இரண்டு மனித குல விரோதிகளுக்கிடையில் தேர்வதற்குத் தமிழ் மக்களுக்கு என்ன இருந்தது? இன்று பொன்சேகா எங்கே நிற்கிறார்? சமஷ்டியை அமுல்படுத்தும் முயற்சிகளைத் தோற்கடிக்கவுள்ளதாக பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணுவதற்கு தனது சக்தியை சகல வழிகளிலும் பயன்படுத்தப் போவதாக அக் கட்சி கூறியுள்ளது. பொன்சேகா இது சிங்களவரின் நாடு என்று சொன்னது தற்செயலாக வாய் தவறி வந்த சொற்கள் அல்ல. அது தான் அவரது சிந்தனை என்பது இப்போது மேலும் தெளிவாகிறது. சரத் பொன்சேகாவை நம்பும்படி சொன்னவர்கட்கு என்ன விதமான அரசியல் ஞானம் இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். சாதாரண அறிவுக்கு எட்டுகிற விடயங்களை விளங்கிக் கொள்ள இயலாதவர்களா தமிழ் மக்களுக்கு வழிகாட்டப் போகிறார்கள்?
அரசியல் அயோக்கியத்தனம் என்பது பற்றிப் பலரும் அறிவார்கள். அறிவுத்துறை அயோக்கியத்தனம் பற்றி நாம் கூடக் கவனமாக இருக்க வேண்டும். ஒருவகையில் இது மூளைச்சலவை செய்கிறது. தமிழ்ச் சமூகத்திடம் நிறைந்திருக்கின்ற காலனித்துவ எச்சங்களில் ஒன்றுதான் “படித்தவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்ற எண்ணப் போக்கு. இதை ‘புத்திஜீவிகள்’ தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள். எட்வட் ஸயிட் சொல்வது போல கொலை இரண்டு விதமாக இடம்பெற முடியும். முதலாவது உயிர்க் கொலை, மற்றையது சிந்தனைக் கொலை. இரண்டாவது கொலை அபாயமானது, பயங்கரமானது. இதன் பாதிப்பு பரம்பரை பரம்பரையாகத் தொடரக் கூடியது. இவ்வாறான ஒன்றைத் தான் எமது தமிழ்ப் புத்திஜீவிகள் பல தளங்களிலும் செய்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்திரன்,
தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல!
1. மகிந்த ராஜபக்ச அரசு.
2. பேரினவாதிகள் 3. பிரச்சனைகள் குறித்து சரியான தந்திரோபாயக் கோட்பாடின்மை.
இந்தப் பிரச்சனைகளைப் புரிந்த கொள்ள மறுக்கும் இடதுசாரிகள் பிரச்னையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற குறுந்தேசிய வாத அமைப்புக்களின் கைகளில் வழங்கி விடுகிறார்கள். இவர்கள் தான் கூட்டமைப்பின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம். இது தான் 70 களின் ஆரம்பத்திலிருந்து நடந்தது. இன்றும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆக,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வளர்க்கும் இடதுசாரிகள் விமர்சன அடிப்படையில் அணுகப்பட வேண்டும் தேவைப்படும் பட்சத்தில் அம்பலப்படுத்தப்படவும் வேண்டும்.
தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளிள் சிந்து கூறிய மூன்றும் அடங்கும் என்பதை எந்த இடதுசாரிகள் புரிந்துகொள்ள மறுக்கிறர்கள்? தயவு செய்து பாராளுமன்ற இடதுசாரிகளைக் கணக்கில் எடுக்காதீர்கள்.
மூன்றாவது பிரச்சனையின் அடிப்படையிலேயே த.தே.கூவின் தில்லுமுல்லுக்கள் முக்கியமாகின்றன. தமிழ் மக்களை மீன்டும் ஒருமுறை ஏமாற்ற உரிமை கோருகிறது த.தே.கூ.
அதற்கு ஒத்தூதுகிற “அறிஞர்கள்” பற்றி மக்கள் அறிய வேண்டாமா?
தயவு செய்து குறுந்தேசியவதம் வள்ர்ந்ததற்கான பழியை இடதுசாரிகள் மீது சுமத்திவிட்டுத் தப்பப் பார்க்காதீர்கள்.
இன்னும் விடியவில்லை.இரவு வெளீச்சத்தில் தெரிபவை எல்லாம் காட்சியாகி விடாது ஆக விடிவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.மரபோடும்,பழமையோடும் பழகி விட்ட வாழ்க்கை,குளீரோடு தொடர்ந்தும் போராட முடியவில்லை வயதாகிறது.கூட்டமைப்பு வெல்ல வேண்டுமாய் லண்டன் முருகன் கோயிலில் அர்ச்சனை செய்கிறேன், ஐயரிடம் சம்பந்தர் ஐயா என் கிறேன் நட்ச்த்திரம் கேட் கிறார் வெற்றீ என் கிறேன்.நாகநாதக் குருக்கள் சிரிக்கிறார். அவர் பண்ணாடை ஐ.தி,சம்பந்தர் என நினைத்திருக்கலாம். நான் தெளீவாக வீட்டுச் சின்னத்தில் நிற்கும் எங்கள் நாட்டுக்குச் சொந்தக்காரர் சம்பந்தர் ஐயா என்றூ சொல்கிறேன்.இன்னும் அவருக்கு விளங்கவில்லை.உங்களூக்கு???
நல்லவே விளங்கித்தான் ஐயர் சொல்லியிருப்பார். ரண்டு சம்பந்தனும் பழைய பன்னாடையள் எண்டு உங்களுக்கும் தெரியும் ஐயருக்கும் தெரியும்.
யாழ்ப்பாணம் கம்பஸ் பெடியள் த.தே. கூட்டணிக்கு ஆதரவை விலக்கின கதை கேள்விப்ப்பட்டியளோ?
மெல்ல மெல்லத்தான் எல்லாருக்கும் விடியுது.
தயவு செய்து வழக்கம் போலை கட்டுரையிலை இருந்து கவனத்தைத் திருப்பிற வேலை பாக்காதையுங்ககோ! கருத்திருந்தாச் சொல்லுங்கோ.
பிரித்தானிய ஆட்சிக்குப் பின்னர் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஒவ்வொரு சிங்களப் பேடினவாத அரசாலும் திட்டமிட்டப்பட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதன் விழைவுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்னர் புலிகளும் அரசியல் முக்கியத்துவம் பெற்ற காலகட்டங்களாகும்.
புலிகளின் போராட்டம் நியாயமானது, அதன் வழிமுறை தவறானது இவ்வளவுதான். இதனை நெறிப்படுத்துவதில் இடதுசாரிகள் என்ன தவறிழைத்தனர்? ஏன் தலைமைவழங்கத் தவறினர்? இவர்களின் இந்தத் தவறும் கூட முள்ளிவாய்க்காலில் நூறாயிரம் தமிழ் அப்பாவிகள் செத்து மடிவதற்கு ஒரு காரணமில்லையா?
ராஷ்யா தோற்றுப்போனது. சீனா சீரழிந்து போய்விட்டது. இதற்கான காரணங்களையெல்லாம் அலசுகிறோம். வீட்டுமுற்றத்தில் நடந்த செத்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றிப் பேச மறுக்கிறோம்.
பரீஸ் கம்யூன் தோற்றுப் போனதற்கே ஆயிரம் விமர்சனங்களும் பகுப்பாய்வுகளும் வெளியாகியுள்ளன. ஆனால் தோற்றுப் போன இடதுசாரிகளின் வழிமுறை குறித்துப் விமர்சனப்பார்வையில் பேசுவதே குற்றச் செயலாகக் கருதுவது இடது சாரியமல்ல.
1. இன்றைய சமூகத்தின் புற நிலை யதார்த்தம் குறித்துப் புரிந்துகொள்ளல்.
2. பிரதான முரண்பாட்டையும் அடிப்படை முரண்பாட்டையும் வரையறுத்தல்.
3. இதன் அடிப்படையிலுருந்து சமூகத்தின் இயகம் குறித்த பார்வையை முன்வைத்தல்.
இவைதான் அடிப்படை. இந்த அடிப்படைகளில் இடதுசாரிகளின் கடந்தகாலத் தவறுகளை சுயவிமர்சனம் செய்துகொள்வதனூடாகப் புதிய அரசியலை முன்வைக்க முடியும்.
இதன் பின்னர், கட்சி-வெகுஜனமுன்னணி-இராணுவம் குறித்த உறவுகள் என்ற நடைமுறைப் பிரச்சனைகள் முன்னெழும்.
ஆனால் இன்று அடிப்படைக் கொள்கைத்திட்டம் ஒன்று “யாரிடமும்” இல்லை!!!
70 களில் தமிழ் மக்கள் மீது இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டப் போது தமிழர் விடுதலைக் கூட்டணி தான் (சரி தவறு என்பதற்கு அப்பால்) அதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தது. இடதுசாரிகளோ தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சிப்பதிலேயே தமது காலத்தை விரையமாக்கி பொதுவான தேசிய அரசியலிலிருந்து அன்னியப்பட்டுப் போக புலிகளிடம் போராட்டம் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது.
இதன் மறு சுற்று இன்று ஆரம்பமாகியிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு களத்தில்! இடது சாரிகள் தமது வழமையான வர்க்கப் பிரச்சனைகளோடு!! இன்னொரு தவறான போராட்டம் தன்னை உருவமைத்துக் கொள்வது போல தோற்றம் தருகிறது. சிங்கள பௌத்த மயமாக்கல் குறித்து ஆனந்தசங்கரி கூடப் பேசுகிறார். இலங்கை இனவாதத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது, மகிந்த ராஜபக்ச இது சிங்கள நாடு. நான் சிங்களவன் என கொக்கரித்த சம்பவம் மின்னியல் ஒளிப்படங்களாய் ஆதரம் தருகின்றன.
சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த சிங்கள அதிகாரத்தின் இராணுவமயமாக்கல், இப்படி இன்னொரு தீயை மகிந்த அரசு மூட்டிவிட்டிருக்கிறது. இதற்கெதிராக ஒரு துண்டுப்பிரசுரம் கூட “இடதுசாரிகள்” வெளியிடவில்லை. ஒரு அறிக்கை, தேர்தல் பேச்சு, மூச்சுக்கூட இல்லை.
இவைகளெல்லாம் பிரதான முரண்பாடும் பிரதான பிரச்சனைகளும் தான்.
இதை இடதுசாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு அவர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள். இவர்களின் திட்டுதல் எல்லாம் காற்றுவெளியில் வெற்ற்றுக் கூச்சலாக அடங்கிப் போய்விடும். இனப் பிரச்சனையின் புதிய சுற்றில் யார் (எந்தவர்க்கம்) தலைமை வகிக்க முன்வருகின்றது என்பதிலிருந்து தான் அதன் எழுச்சியும் வீழ்ச்சியும் தங்கியிருக்கிறது.!
தயவு செய்து புதிய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையை இந்த இணையத் தளதிலேயே தேடிப் பார்த்துவிட்டுக் கீழ் வருவது போன்ற உண்மை சாராத கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்.
“சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த சிங்கள அதிகாரத்தின் இராணுவமயமாக்கல், இப்படி இன்னொரு தீயை மகிந்த அரசு மூட்டிவிட்டிருக்கிறது. இதற்கெதிராக ஒரு துண்டுப்பிரசுரம் கூட “இடதுசாரிகள்” வெளியிடவில்லை.”
பிற இடதுசாரிகளும் இவ் விடயத்தில் நேர்மையாகவே நடந்து கொண்டுள்ளனர். தயவு செய்து ஜே.வீ.பீ. மற்றும் பாராளுமன்ற இடதுசாரிகளை வைத்து உங்கள் பொய்யான வாதத்தை நியாயப்படுத்த முயலாதீர்கள்.
மோனங் காப்போர் ஒரு காலத்தில் தமிழ் ஈழம் கேட்டவர்களே.
தோற்றுப் போனது மட்டுமல்ல, தமிழ் மக்கள் 200,000 பேரின் சாவுக்கும் உள்நாட்டில் 600,000 பேரின் அகதி நிலைக்கும் 900,000 பேரின் புலப்பெயர்வுக்கும் 50,000 பேர் உடல் ஊனமானதற்கும் காரணமானது குறுகிய தமிழ்த் தேசியவாதமன்றி வேறென்ன?
இடதுசாரிகள் தோற்றால் முழுச் சமூகமும் தோற்றதாகிவிடும்.
ஒழிந்து விட்டது என்ற போது தான் நேபளத்தில் வென்றர்கள். ஒழிக்கப் போகிறோம் என்று இந்திய ஆட்சியாளர்கள் சூளுரைக்கையில் தான் மேலும் போராடுகிறர்கள்.
நேர்மையாகக் கூறப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுக்கும் யாரும் பதில் கூற மறுத்ததும் இல்லை.
விமர்சனமும் சுயவிமர்சனமுமே நடைமுறையாகக் கொண்டவர்கள் விமர்சனத்தைக் குற்றமெனப் பார்க்கிறதாக வாய் கூசாமற் பொய் கூறாதீர்கள்.
தயவு செய்து புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய இனப்ப் பிரச்சனை பற்றிய வெளியீடுகளைப் பார்த்து விட்டு அவற்றின் அடிப்படையில் அவர்களது ஆய்வு பற்றி விமர்சியுங்கள்.
விதண்டாவாதம் இல்லையெனின் பயனுற விவாதிக்கலாம்.
விடுதலைப் புலிகளின் போராட்ட நியாயம் சரியானதே ஒழியப் போராட்ட இலக்கும் போராட்ட முறையும் தவறானவை என நேர்மையான இடதுசாரிகள் எப்போதுமே சொல்லி வந்துள்ளனர்.
சுயலாபத்துக்காக தமிழீழக் கோரிக்கைக்குப் பின்னால் போன பல முன்னாள் இடதுசாரிகளையும் சில சந்தர்ப்பவாத ‘இடதுசாரிக்’ கட்சிகளையும் அறிவேன்.
நேர்மையான இடதுசாரிகள் நிலை தடுமாறவில்லை. பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான ஒரே போராளி அமைப்பு என்றளவில் விடுதலைப் புலிகளின் போராட்டதை மதித்தார்கள். ஆனால் ஒவ்வொரு தவற்றையும் சுட்டிக் காட்டினார்கள். 2008 முடிவில் மக்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் சொன்ன போது அதை எதிர்த்தோரான தமிழ்த் தேசியவாதிகள் தான் அந்தப் பேரழிவுக்குப் பதில் கூற வேன்டும்.
வடக்கில் தேசியவாத அலை எழுந்த பின் ஒவ்வொரு இடதுசாரிக் கட்சியும் அயல் ஆதரவுடனும் ஆயுத வலிமையுடனும் செயற்பட்ட இயக்கங்களால் முடக்கப் பட்டன. அந்த அலையினூடு நின்றுபிடிப்பதே பெரிய சவால் என்று இடதுசாரிகள் மட்டுமன்றி போட்டி இயக்கங்களும் அறியும்.
“முள்ளிவாய்க்காலில் நூறாயிரம் (?) தமிழ் அப்பாவிகள் செத்து மடிவதற்கு” யார் காரணம் என மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரும் அறிவார். குற்றத்தில் பங்கு போடப் பிறரை அழைப்பதால், குற்றவாளிகள் நழுவிவிட இயலாது.
“விடுதலைப் புலிகளின் போராட்ட நியாயம் சரியானதே ஒழியப் போராட்ட இலக்கும் போராட்ட முறையும் தவறானவை என நேர்மையான இடதுசாரிகள் எப்போதுமே சொல்லி வந்துள்ளனர்.”
போராட்ட நியாயம் சரியானதே எனின் அது குறித்து அந்த நேர்மையான இடதுசாரிகள் செய்ததென்ன?
தயவு செய்து உரிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்ட கட்சிகள் வெளியிட்ட கருத்துக்களைப் படித்துப் பாருங்கள்.
ஆயுதங்கலே அதிகாரத்தை தீர்மானித்த விடுதலைப்போருக்கு ஆயுதங்கலே முடிவை எழுதின.சிங்கள இடதுசாரிகளூம் தமிழ் இடதுசாரிகளூம் இனைந்து இலங்கை மக்களூக்கான பொதுவான் வேலைத்திட்டத்தில் இனைவதும், பொதுவான பிரச்சனைகலை பேசி இன முரண்னாடுகலை பேசுவதும்,செயற்படுவ்தும் ஆரோக்கியமான அரசியலை இலங்கையில் ஏற்படுத்தும்.
thamilmaran
உங்களுடன் முதல் முறையாக என்னால் முற்றாக உடன்பட முடிகிறது.
இடதுசாரிகளின் தவறு என்பது அவர்கள் செய்தது மட்டுமல்ல. செய்யாமல் விட்டதும் தான். இவைகளின் ஆரம்பம் இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. எத்தனை பேர் இவை பற்றி ஆராயத் தயார்?
1. “தமிழ் தேசியத் ” தலைமைகளும் தவறிழைத்தன. அவை பற்றி உரிய வகையில் சுட்டடிக் காட்டாமல் விட்டதும் இடதுசாரிகளின் தவறே.
2. இட துசாரிகள் தம்மிடையேயான முரண்பாடுகள் குறித்துக் கரிசனை காட்டிய அளவு தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிக் கரிசனை காட்டவில்லை
3. தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்கள் உள் முரண்பாடுகள் குறித்தே கவனம் செலுத்தியது. சாதி ரீதியாக ஒடுக்கும் பகுதியைச் சேர்ந்தோரின் (அரசுடனான) பிரச்சினைகள பற்றிக் கவனம் செலுத்தப்படவில்லை.
4. பல இடதுசாரிகள் அரசுடன் கூடிக் குலவி வந்தனர்.
இங்கு தவறு பற்றி நான் பேசுவது குற்றம் காணவல்ல. தவறுகளிலிருந்து திருத்திக் கொள்ளவே.
நிச்சயமாக நீங்கள் சொல்லுகிற தவறுகளை “இடதுசாரிகள்” எனப்ப்பட்டோர் செய்துள்ளனர்.
ஆனால் யார்?
பாராளுமன்ற இடதுசாரிகள் உள்ளனர். சந்தர்ப்பவாதிகள் உள்ளனர். நேர்மையானோர் உள்ளனர்.
நீங்கள் சொல்லுகிற தவறுகளை யார் செய்தார்கள் என்பதைக் கவனித்து இடதுசாரிகளை வேறுபடுத்துவது முக்கியமானது.
கட்சிகளைப் பற்றிச் சில வட்டங்களில் பொத்தம் பொதுவாக நிலவும் கருத்துக்களை வைத்து ஒவ்வொரு கட்சியையும் பற்றி முடிவுகட்கு வர முடியாது.
இடதுசாரிகளிடையிலான முரண்பாடுகளிற் பல “அரசுடன் கூடிக் குலவல்” பற்றியன, தேசிய இனப் பிரச்சனை பற்றியன. பொதுவாகப் பலவுமே நீங்கள் முறைப்படுவன போன்ற பிரச்சினைகள் தொடர்பானவை.
சமசமாஜக் கட்சிப் பிளவில் (1964) மொழிப் பிரச்சனைக்கு முக்கிய பங்கிருந்தது. 1972இல் தோழர் சண் அரசியல் யாப்பை விமர்சித்த அடிப்படை என்ன?
தோழர் செந்திவேலின் நேர்காணல் சென்ற ஆன்டு இவ் இணையத்தளத்தில் வந்ததை அறிவீர்களோ தெரியாது. அதில் சில கேள்விகள் எழுப்பப் பட்டன. விடைகள் தரப்பட்டன.
சில வாரங்கள் முன்பும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் பற்றிய விளக்கங்கள் புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக இங்கு தரப்பட்டன. தேர்தல் தொடர்பான விவாதங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, யார் எதை எப்போது செய்யத் தவறினர் என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டினாலொழிய எத் தவற்றையும் விளங்கிக் கொள்ளவொ திருத்தவோ வாய்ப்பிராது.
நேர்மையாகப் பேசவும் விவாதிக்கவும் முடியுமானால் குற்றம் காண்பது கூட நல்லதாக இருக்க முடியும்.
தோழர் சண் குறித்து எனக்கு மிகவும் மரியாதை உண்டு.
80களில் சீனா இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கியதை கவனிக்காமல் விடுவதன் மூலமும் மறுப்பதன் மூலமும் தோழர் செந்திவேலின் கட்சி நியாயப்படுத்தி வந்தது.
நீண்ட காலமாக தீண்டாமை குறித்துப் போராடிய பேசிய இவர்கள் அதனுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இனப்பிரச்சினை பற்றிப் பேசினார்கள்.
இந்த விமரிசனம் வெளியார் மீது அல்ல என் மீதும் தான்.
தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்பதால் இங்கு தவிர்த்து விடுகிறேன்
தயவு செய்து புதிய ஜனநாயகக் கட்சி இவ் விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள நூல்களிற் சிலவற்றையேனும் கவனமாகப் படித்து விட்டு எழுதுங்கள்.
தோழர் சண் தமிழ் மக்கள் தேசிய இனம் இல்லை என்று தவறாகக் கூறிய போது திருத்தியோர் தான் புதிய ஜனநாயகக் கட்சியாக அமைந்தனர் என நீங்கள் அறியக்க் கூடும். சண் தவற்றைப் பின்னர் திருத்திக் கொண்டமை மெச்சத் தக்கது.
தேசிய இனப் பிரச்சனை பற்றி இது வரை வந்த முழுமையான இடதுசாரி ஆராய்வு புதிய ஜனநாயகக் கட்சியினது.
வசதி கருதித் தனித் தமிழ் ஈழம் என்ற பொறியில் விழுந்த இடதுசாரிகளும் குறுகிய தமிழ்த் தேசியவதிகளும் தனித் தமிழ் ஈழம் என்ற நிலைப்பாட்டில் இருந்து தொடங்காதவர்கள் அனைவருமே தமிழர் பற்றி அக்கறை அற்றோர் என்று பிரசாரம் செய்து வந்துள்ளனர்.
புதிய ஜனநாயகக் கட்சியின் வெளியீடுகளை நீங்கள் கவனமாகப் படித்துப் பார்த்த பின்பு இது பற்றி நாம் பேசுவது பயனுள்ளது.
நான் பு ஜ க பற்றி மட்டும் பேசவில்லை. நீங்கள் அவர்களின் ஆதரவாளர் போலும்.
1. பு ஜ க சீனா இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கிய விடயத்தில் மழுப்பியதை மறுக்கிறீர்களா? அது பற்றிய சுயவிமர்கனம் நடந்திருந்தால் அறியத்தரவும்.
2. சாதி இன ஒடுக்குமுறையில் அணுகுமுறை வேறாயிருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா? (நான் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் பரிபூரணமாக ஆதரிக்கிறேன்)
3. சுயநிர்ணய உரிமை விடயத்தில் பு ஜ க (க.க.- இடது) நீண்டகாலம் நழுவல் நிலையிலேயே இருந்ததை மறுக்கிறீர்களா?.
அரசுடன் கூடிக் குலாவல் என்பது அமைச்சில் சேருவது மட்டுமல்ல. 1956ல் அரசை ஒன்றிணைந்த க.க (பிரிவிற்கு முன்னரே ) ஆதரிக்கவில்லையா?
நான் எல்லா வெளியீடுகளையும் படிக்காமல் இருக்கக் கூடும். தாங்கள் தந்துதவலாமே?
1. உஙகள் குற்றச்சாட்டை நீங்கள் தான் நிறுவ வேண்டும்.
சீனா முதலாளியப் பாதைக்குப் போகும் வரை சீனாவை எல்லா மார்க்சிய லெனினியர்களும் ஆதரித்தனர். பின்பு சீனாவை அமெரிக்காவின் ஆதிக்கத்துகெதிரான ஒரு சக்தியாக மட்டுமே நோக்கினர். சீனாவைப் பற்றிய விமர்சனங்கள் பல வேறு மட்டங்களில் முன்வைக்கப் பட்டதை அறிவேன்.
நீங்கள் சொல்வது போல எல்லாவிடத்தும் சீனாவை நியாயப்படுத்தியதாக எனக்குத் தெரியாது.
2. தேசிய இனப் பிரச்சனையில் மார்க்சிய லெனினிய நிலைப்பாட்டின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பே மறுக்கப்பட்ட ஒரு சூழலை வைத்து மார்க்சிய லெனினிய நிலைப்பாட்டை மதிப்பிட முடியாது.
போராட்ட முனைப்பின் தவறுகளை விமர்சித்த அதே வேளை, போராட்டம் நடக்கையில் அரசாங்கத்துடன் கூடிக் குலாவிய சில முன்னாள் இடதுசாரிக் கட்சிகளும் அறிஞர் பெருமக்களும் போல புதிய ஜனநாயகக் கட்சி நடந்து கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளை அண்டிப் பிழைக்கவும் இல்லை.
நிலைப்பாட்டைப் பொறுத்தவரை நான் முன்பு சொன்னது போல வெளியீடுகளைப் படித்துவிட்டுக் கருத்துரைப்பது பொருந்தும்.
3.நழுவல் என்பது ஆளுங் கட்சியுடன் குலாவி அதே நேரம் தேசியவாத அமைப்புக்களில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் மாறி மாறிக் காட்டுகிற கட்சிகளுக்கும் பிரமுகர்கட்குமே உரியது.
புதிய ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு தேசிய இனப் பிரச்சனையின் விருத்தியின் அடிப்படையிலேயே விருத்தி பெற்றது.
1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்பு பிரிவினை வேன்டுமா இல்லையா என்ற அடிப்படையிலேயே விவாதம் நடந்த்து. அதில் நழுவல் என்ற பேச்சுக்கு இடமில்லை. பிரிவினை எதிர்ப்பில் அவர்கள் தெளிவாகவும் உறுதியாகவும் தான் இருந்தார்கள்.
‘மார்க்சிய லெனினிய நிலைப்பாட்டின் அடிப்படையில்’ தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற சிலர் எப்படித் தேசியவாதத்தினுட் தொலைந்தும் தேசியவாதிகளால் அழிக்கப்பட்டும் போனார்களென்றும் அறிவேன்.
தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்க முடியுமான சூழலில் தேசிய இனப் பிரச்சனையைப் பற்றி முழுமையன ஆய்வும் தீர்வும் முன்வைக்கப் பட்டது.
சுயநிர்ணயக் கோட்பட்டை எதித்துப் புதிய ஜனநாயகக் கட்சியின் அறிக்கை எதையும் சுட்டிக் காட்டுவீர்களயின் நன்றியுடையவனாவேன்.
நான் புதிய ஜனநாயகக் கட்சியை மதிக்கக் காரணம் நான் அறிந்த பல இடதுசாரிக் கட்சிகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய இனப் பிரச்சனை, சமூகநீதி ஆகிய விடயங்களில் அவர்களது கருத்துக்கள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளமையே.
எனக்குத் தெரிந்த நல்ல கட்சி பற்றித் தான் என்னால் பேச முடியும். மற்றவை பல பற்றி நீங்களே மிகவும் சரியகச் சொல்லிவிட்டீர்கள்
உங்களுக்கு இந்த அடக்குமுறைச் சூழலில் அந்தக் கட்சியுடன் ஒப்பிடக் கூடிய நம்பகமான கட்சி ஏதேன் இருக்கத் தெரிந்தால் சொல்லுங்கள்.
உங்களிடம் பயனுள்ள மாற்றுச் சிந்தனைகள் இருந்தால் சொல்லுங்கள்.
கேட்க ஆவலாக உள்ளேன்.