பாதுகாப்பு வலயத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுவை தற்போதைய நிலைமையில் அனுப்ப முடியாது. அவ்வாறான சர்வதேசத்தின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது”. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“பாதுகாப்பு வலயத்துக்கு எக்காரணத்தைக்கொண்டும் தற்போதைய நிலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுவை அனுப்ப முடியாது. அதற்கான தேவையும் இல்லை என்றே கருதுகின்றோம்.
மிகவும் சிரமமான பணியை இராணுவத்தினர் செய்து முடித்துள்ளனர். அதாவது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிவிலியன்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். மேலும் எஞ்சியிருக்கின்ற சிவிலியன்களையும் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பாக மீட்டு விடுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பாதுகாப்பு தரப்பினர் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டுவருகின்றனர். எனவே ஐ.நா. குழுவை அனுப்பும் அவசியம் இல்லை என்றே கருதுகின்றோம். அவர்களுக்கான பாதுகாப்பு பிரச்சினையும் காணப்படுகின்றது. அதனைவிட அந்த மக்களை மீட்டெடுக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தினுடையதாகும். எனவே அதனை நாங்கள் செய்வோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை அனுப்பும் தேவை எதிர்காலத்திலும் ஏற்படாது என்றே நம்புகின்றோம். தேவை ஏற்படின் அரசாங்கம் கோரிக்கை விடுக்கும். அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களையும் பாதுகாப்பு வலயத்துக்கு அனுமதிக்க முடியாது என்பதனை தெளிவாகக் கூறுகின்றோம்” என்றார்.