புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அரச தரப்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
அரசாங்கம் நேற்று அறிவித்த பாதுகாப்பு வலயம் மீது படையினர் இன்று கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வன்னியில் படையினரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் 243 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி காலை 7:55 அளவில் இருந்து தொடர்ச்சியாக படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். வலது குறைந்த சிறுவர் இல்லமான இனிய வாழ்வு இல்லம், வீதியால் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் மற்றும் இடம்பெயர்ந்து வீதியோரத்தில் தங்கியிருந்தவர்கள் மீது இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.