23.08.2008.
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ள பர்வேஸ் முஷாரஃப்பை அந்நாட்டு அரசு பாதுகாப்பு காவலில் வைத்திருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும் முஷாரஃப் சுதந்திரமாக வெளியே செல்லவோ அல்லது உறவினர்கள், நண்பர்களைச் சந்திக்கவோ எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது என்று இஸ்லாமாபாத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
புதிய அதிபர் தேர்தல் நடைபெற்று வேறு ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்பது மற்றும் கடந்த 2007ல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது முஷாரஃபால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை அவர் இத்தகைய காவலில் கண்காணிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த காவல் என்றும் அவர் கூறினார்.
புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டு விட்டால், முஷாரஃப் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார் என்றார் அவர்.
கடந்த திங்கட்கிழமையன்று அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரஃப், அமெரிக்கா செல்ல விரும்பியதாகவும், ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த 3 அல்லது 4 வாரத்திற்குப் பின், அதிபர் தேர்தல் முடிந்த பின் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 6ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.