தமது பாதுகாப்பை உறுதிசெய்ய விசாரணைகளைத் துரிதப்படுத்தல் உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதிலுமுள்ள சுமார் 10,000 அரசியல் கைதிகள் இன்று முழு நேர அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளர் சமில் ஜயநெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:
“சிறைவாசம் அனுபவிக்கும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. சிறைச்சாலைகளில் கூட தத்தமது உயிர்களுக்கு உத்தரவாதம் தேடிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அரசியல் கைதிகள் சிறைகளில் தாக்கப்படும் சம்பவங்கள் தலைத்தூக்குகின்ற போதிலும் இதுவரையில் விசாரணைகள் நடத்தப்படவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை.
எனவே சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் தமது பாதுகாப்பை உறுதி செய்தல், தாக்குதல்களை நிறுத்துதல், சிறையில் காயமடைந்த கைதிகளுக்கு சிகிச்சை அளித்தல், விசாரணைகளைத் துரிதப்படுத்தல் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 10 ஆயிரம் அரசியல் கைதிகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்” என்றார்.
we all must support this struggle for justice and civil rights