அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான செல் தாக்குதலில் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை இராணுவம் நடத்தி வருகின்றது.
இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் தார்ப்பாள் கூடாரங்களிலும் உறக்கத்திலிருந்த பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தும் உள்ளனர்.
பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுவதுடன், வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் சிதறிய நிலையில் காணப்படுவதாகவும், இலங்கைப் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தொடர் தாக்குதல்கள் காரணமாக அவ்வுடலங்களை மீட்க முடியாதிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.