மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி துவங்கியது. அதே நேரத்தில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தால் முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பெகாசஸ் விவகாரம் தொடர்பாக வாயே திறக்கவில்லை. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டதாகவும் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் தொடர்ந்து ஊடகங்களிடம் சொல்லி வந்தார்கள். ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பி வரும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், முக்கிய மசோதாக்களை எதிர்கட்சிகள் ஆதரவின்றி நிறைவேற்றும் போக்கு போன்றவை தொடர்பாக விவாதிக்க டெல்லியில் 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடினார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை, இடதுசாரி கட்சிகள், ஐயுஎம்எல், ஆர்எஸ்பி, கேரள மணி காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாடு, திரிணமூல் காங்கிரஸ், லோக்தந்த்ரிக் ஜனதா தளம் ஆகிய 15 கட்சிகளின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகளின் இன்றைய கூட்டம் மிக முக்கியத்துவம் உள்ள ஒன்றாக பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலக் கட்சிகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் ராகுல்காந்தி மாநிலக் கட்சிகளுடன் இணக்கமான போக்கையே விரும்புவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. காரணம் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாமல் போன போதெல்லாம் பாஜக வென்றிருக்கிறது. ஆனால் இந்த முறை கடந்த காலங்களில் செய்த அதே தவறை காங்கிரஸ் செய்யாது என நம்புவோம்.