பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாகா சாவடிப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 55 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர் 120 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களுள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர் என போலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாட்டு தேசியக் கொடிகளையும் இறக்கும் நிகழ்ச்சியைக் கண்டுவிட்டு ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள நுழைவுப்பகுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அந்த மர்மநபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
பாகிஸ்தான் தலிபான் குழுவிலிருந்து பிரிந்த ஜந்துல்லா என்ற அமைப்பு ஒன்றே தாக்குதலுக்குப் பொறுப்பெடுத்துள்ளது.
வசிரிஸ்தான், ஜார்ப்-இ-அஜப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.