முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான சிவகாமி அவர்கள் இது தொடர்பாக வழங்கிய நேர்காணல், இந்திய அரசியல் சாசனம் 244(1)-ன் படி, 5-வது அட்டவணை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இதுவரை, இதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால் பழங்குடியினர் நிலங்களை பிற இனத்தவர்கள் அபகரித்துள்ளனர். தொடர்ந்து அபகரித்து வருகின்றனர். தமிழகத்தில் 5-வது அட்டவணை அமல்படுத்தாவிட்டால், பழங்குடியினரிடம் எஞ்சியுள்ள சிறு பகுதியும் பறிபோய்விடும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் சித்தேரி, சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, பச்சமலை, அறனூத்துமலை, சேர்வராயன் மலை, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை, திருச்சி மாவட்டம் பச்சமலை, நாமக்கல் கொல்லிமலை, வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை ஆகிய 9 பழங்குடியின பகுதிகளை உடனடியாக பட்டியல் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் 3.85 லட்சம் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் பழங்குடியினர் வன உரிமைச் சட்டம் 2006-ல் அமலாக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், பழங்குடியினர் காலங்காலமாய் அனுபவித்து வரும் நிலத்தை விட்டு வெளியேற வன அதிகாரிகள் அடிக்கடி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்களுக்கு உடனடியாக நிலப் பட்டா வழங்க வேண்டும். தமிழகத்தில் பழங்குடியின பட்டியலில் மொத்தம் 36 பிரிவினர் உள்ளனர். இவர்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதை உண்மையான பழங்குடியினர் 30 சதவீதத்தினர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 70 சதவீதத்தினர் போலிச் சான்றிதழ் பெற்று அனுபவித்து வருகின்றனர். இவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோல் பல வகைகளில் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இவற்றை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு எதிரான போக்கை கையாண்டு வருகிறது. எனவே, தமிழக ஆளுநரை சந்தித்து, பழங்குடியினருக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூக சமத்துவப் படை சார்பில் விரைவில் வலியுறுத்த உள்ளோம். தொடர்ந்து பழங்குடியினர் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். 2011-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளோம். யாருடன் கூட்டணி சேர்வோம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அவர்