மகிந்த பரம்பரையினரின் சுகபோகத்துக்காக ஏற்பாடுகள்; ஜே.வி.பி. குற்றச்சாட்டு !

ரொஷான் நாகலிங்கம்-

மக்களின் போராட்டங்களை திசை திருப்பவும் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை 10 வருடங்களாக நீடிப்பதற்குமே அரசாங்கம் தனது ஆட்சியின் கீழிருந்த மாகாண சபைகளை கலைத்து அங்கு தேர்தலை நடத்துவதாக ஜே.வி.பி. குற்றம்சாட்டியதுடன் இதற்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி. நேற்று வெள்ளிக்கிழமை காலை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

அரசாங்கத்துக்கு எதிராக மக்களும் தொழிற்சங்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவர்களது கவனத்தை திசை திருப்பும் முகமாகவே இன்னும் 14 மாதங்களில் முடிவுறவுள்ள சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளை கலைத்து அங்கு தேர்தலை நடத்துகின்றது.

அரசின் கைகளிலுள்ள இரு மாகாண சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு மற்றுமொரு காரணம் இத்தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி இரண்டு வருடத்தின் பின்னர் சத்தியப்பிரமாணம் செய்து மேலும் 10 வருடம் ஆட்சியை நீடிப்பதற்கான திட்டமும் உள்ளடங்கும்.

எனவே, ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகமுள்ள இந்த அரசை கலைப்பதற்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மக்கள் தீர்க்கமான முடிவினை மேற்கொள்ள வேண்டுமென நாம் கேட்கின்றோம்.

இலங்கையில் சார்க் மகாநாடு நடத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை மேற்கொள்வதற்கு ஏற்ற இடமென காண்பிக்கவும் மற்றும் பல நன்மைகளையும் பெற முடியும். இந்நிலையில் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு இந்திய படையினர் வருவது எமது படையினரை அவமதிப்பதாக அமைந்துள்ளதுடன் இங்கு பாதுகாப்பு இல்லையென்பதை உலகுக்கு அறிவிப்பதாகவும் உள்ளது.

இந்த மகாநாட்டை நடத்துவதன் மூலம் எந்த நன்மைகளும் நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை. நாட்டுக்கு வருகின்ற முதலீடுகளும் இல்லாமல் செய்யவே வழி வகுத்துள்ளது. இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பில் எமது பாதுகாப்பு படையினரிடம் எந்தவித கோரிக்கையும் விடப்படாது. மேலும் அவர்கள் இது குறித்து எந்தக் கருத்தையும் முன்வைக்காத நிலையிலேயே இந்தியப் படையினர் வருகின்றனர். இது எந்தவகையில் நியாயமானது? இது எமது படையினரை அவமதிப்புக்குள்ளாக்கும் செயலாகவே அமைந்துள்ளது.

வடக்கு வெற்றி அரசின் வெற்றியல்ல. இராணுவத்தினர் மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு பெறுகின்ற வெற்றிகளே அவையாகும். இதற்கு நாம் அவர்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும். எமது படையினருக்காக அமைச்சர்கள் எதுவும் செய்யாமல் அதனை தமது ஊழல் மோசடிகளை மேற்கொள்வதற்கும் மறைந்து கொள்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களின் மகன்மாரும் உறவினருமே இத்தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். மாகாண சபைகளை பரம்பரை ஆட்சிச் சபைகளாக மாற்றி தமது ஊழல் மோசடிகளை மேற்கொண்டு பரம்பரையினர் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கே பயன்படுத்துகின்றனர். இந்த பரம்பரையினரை அகற்ற வேண்டும்.

தமக்கு எதிரானவர்களை புலிகளென முத்திரை குத்துவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தவிர அனைவருமே புலிகளாகிவிடுவர். இந்நிலையில் புலிகள் இதன் கீழ் மறைந்திருந்து தமது செயற்பாட்டை முன்னெடுக்க வழிவகுக்கும். இதனை முதலில் நிறுத்த வேண்டும்.

1999 இல் சந்திரிகா பண்டாரநாயக்க கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தின் போது மகிந்த ராஜபக்ஷ அவரது அரசில் இருந்தவர். அதுபோல் 94 இல் அவர் புலிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மற்றும் கடல்கோள் கட்டமைப்பு ஆகியவை மேற்கொள்ளும்போது அவர் அவரது அரசில் இருந்தவர். இந்நிலையில் தமக்கு எதிரானவர்களை அரசாங்கம் புலியென கூறுவது எந்தவகையில் நியாயமானது.

படையினர் ஈட்டும் வெற்றிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. கிழக்கை படையினர் மீட்டனர். தற்போது பிள்ளையான் ஜனாதிபதியிடம் பொலிஸ், காணி அதிகாரங்களை கேட்கின்றார். இவ்வாறு சொல்லப்பட்டதன் பிரகாரமே கேட்கப்படுகின்றது. இது தொடர்பில் இந்தியாவின் அழுத்தம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இந்தியாவிலிருந்து வந்த மூன்று முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதி பசில் ராஜபக்ஷ, கோதாபயவுடனே கதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் என்ன பேசினார்கள் என்பது புதிராகவேயுள்ளது.

இதன் பின்னர் எண்ணெய் தொடர்பில் உடன்படிக்கை இடம்பெற்றதுடன் ஜனாதிபதி இந்தியா சென்றார். இந்தியாவின் தெற்கு மாநிலங்களுடன் இலங்கையையும் சேர்த்து பொருளாதார வலயமாக்க வேண்டுமென கூறப்படுகின்றது. எமது பொருளாதாரத்தை நாமே ஈட்ட வேண்டும். இதற்கு ஏன் கூட்டுச் சேர வேண்டும்.

110 அமைச்சர்களை தற்போது உருவாக்கி ஊழல் மோசடியுடனும் பரம்பரை அதிகாரத்தை அகற்றுவதற்கும் அனைவரும் இத்தேர்தலில் எமக்கு வாக்களிக்க வேண்டும். ஊடகவியலாளர்களும் உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.

2004 இல் திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருபராஜா தற்போது ஆட்கடத்தல், கப்பம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதன் பின்னணியில் யார் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.