யாழ்ப்பாணம் 01.01.09
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த பரந்தன் பகுதியை கடும் சண்டைக்குப் பிறகு இன்று காலை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 30ம் தேதி இந்த பகுதியில் இலங்கை ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இருதினங்களாக நடைபெற்ற சண்டையில் இருதரப்பினருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரந்தன், முரசுமோட்டை ஆகிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சு தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரந்தனை கைப்பற்றியதன் மூலம் விடுதலைப் புலிகளின் முக்கிய தரைவழி தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கிளிநொச்சிக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள இரணமடு சந்திப்பையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புலிகள் தரப்பில் இருந்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கிளிநொச்சி ரயில் நிலையம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பல மாத கடும் போருக்குப் பின் கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை இந்திய தொலைக்காட்சியிடமும் பாதுகாப்புத்துறைச் செயலாளரான கோதபய ராஜபக்சே உறுதி செய்தார். கிளிநொச்சியை எல்லா பக்கங்களில் இருந்தும் ராணுவம் சுற்றி ளைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.