‘உணர்சிக் கவிஞர் காசியானந்தனோடு சைக்கிளில் சென்று பாலு மகேந்திரா குண்டெறிந்தார்.’
செ.தமிழன் சீமான் கழுத்து நரம்பை மடக்கி வைத்துக்கொண்டு வெடித்த குண்டு பேஸ் புக் உணர்வாளர்களை கனவில் மிதக்கவிட்டிருக்கிறது. சோளனின் கனவிலும் அண்ணன் சீமான் செந்தமிழனாக மட்டுமல்ல, பச்சை, கறுப்பு, நீலம், ஊதா உட்பட பல நிறங்களில் வந்து போனார். சீமானுக்கு பக்கவாத்தியம் வாசித்து பாலு மகேந்திராவின் மரணச் சடங்கை அல்லோலகல்லோலப்படுத்திய உ.கவிஞர் காசியும் கலர்க் கனவுகளில் ஓடித்திரிந்தார்.
காசி 22.5 கரட்டில் கை, கழுத்து, கைவிரல், கால்விரல் போன்ற இன்னோரன்ன பகுதிகளில் மாட்டி வைத்து பாரம் தாங்காமல் நடந்து போகும் காட்சியை கடாசிவிட்டு கலர் கனவே வியர்த்தது. ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ அந்தக் காலத்துப் பாட்டில் காசி கடிக்காமல் கனவில் வந்துபோனார்.
இதையெல்லாம் பார்க்கும் போது நமது தே.த. பிரபாகரன் இப்போதும் இருக்கிறார் என்ற எண்ணம் சோளனுக்குள் வந்து சுருக்கெனத் தைத்தது.
சோளனுக்கு வந்த கனவில் புதுப்புது ஐடியாக்கள் குறுக்கால குறுக்கால வந்து வடிவமைத்தது. தேசிய உணர்வு கூரையைப் பொத்துக்கொண்டு வந்தது. கட்டேல போற காலத்தில் சீமானின் வீட்டு வளவில தான் சாகவேண்டும் எண்டு சோளன் கனவில் முடிவெடுத்தான். அப்படி வீரச்சாவை சோளன் தழுவினால், சீமான் வெளியே வந்து தேசியத் தலைவருக்கு தூசி தட்டியவன் சோளன் என்று புகழ் பாட காசியானந்து விசிலடிக்க புலிகள் புடைசூழ சவக்காட்டிற்கு சோளன் அனுப்பிவைக்கபடுவான்.
சோளன் இப்படி செ.தமிழன் சீமான் வீட்டு வளவில் செத்துப் போனபின்னும் கனவு கண்டவன் என்ற பெருமையை புலம் பெயர் நாடுகளில் இருந்து வேறு புகழ் பாடுவார்கள்.
பாலு மகேந்திரா நான் இலங்கையன் என்பதை ‘நாம் தமிழர்’ ஊடாக ஆத்மா சாந்தி அடைந்த பின்பு அறிவித்து டைரக்சன் உத்தியைக் கையாண்டிருக்கிறார் என்பது வேறு விசயம். தான் வாழ்வதற்காக தான் யார் என்பதைக் கூட சொல்லாமல் சோளன் போல வாழன் என்பதை தனது வாழ்வின் மூலமாக பாலு சொல்ல அந்தப் பலவீனத்தை அடுத்த கட்டத்திற்கு காசியும் செந்தமிழும் நடத்திச் சென்று பாலுவின் புதைகுழியில் புறங்காலால் மண்ணை தள்ளிவிட்டிருக்கிறார்கள் என பக்கத்தில் கனவுகண்ட நண்பனை சோளன் தட்டி எழுப்பினன். அவனை நிஜக் கனவுலகிற்கு அழைத்து வந்தான்.
அவனுக்கு, பாலுவின் கையில் பெற்றோல் குண்டைவைத்து அழகு பார் என்றான். உ.கவிஞன் காசியின் தங்கச் சைக்கிளில் ஏற்றி கைக்குண்டோடு பாலுவை உலாவ விடு என்றான். பாலுவிற்கு கலை உனர்வை வளர்த்தவர் பிரபாகரன் என்று சொல் எனப் போதித்தான். பாலு கமராவைப் பார்ப்பதும் பிரபாகரன் குறிபார்ப்பதும் ஆறு வித்தியாசங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியாத அம்சங்கள் என்று உரை என்றான்.
நாசமாப் போன கனவு முடிந்து விழித்தெழுந்த போது, பச்சைமுத்துவின் புதிய தலமுறை தொலைக்காட்சியில் நண்பன் நேர்காணல் வழங்கிக்கொண்டிருந்தான். ‘மேதகு பாலு மகேந்திரா கமராவால் குறிபார்க்கும் போது…’ என்ற வரிகள் ஆரம்பித்த போது தொலைக்காட்சி அறிவிப்பாளர் கண்கள் கலங்கியிருந்தன.
சகிக்க முடியாமல் சனலை மாற்றிய போது இலங்கை அரச தொலைக்காட்சி ரூபவாகினி சொல்லியது ’40 வருடங்களின் முன்னர் மாண்புமிகு ஜனாதிபதிக்குக் குண்டுவைக்க முனைந்த பயங்கரவாதி பாலு மகேந்திரா சென்னையில் பதுங்கியிருந்து காலமானார்.’
-யாவும் கனவு-
கலக்கல் கனவு சோளனே! எமது கவி வ.ஐ.ச.ஜெயபாலன் வராதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
From Balan Tholar’s FB…
பாலுமகேந்திரா கைக்குண்டு வீசியதாக கூறும் சீமான் இதற்குரிய ஆதாரத்தை முன்வைப்பாரா?
இயக்குனர் பாலுமகேந்திராவின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் அவர்கள் காசிஆனந்தனும் பாலுமகேந்திராவும் சைக்கிளில் சென்று… கைக்குண்டு வீசியதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய செய்தி இதுவரை நாம் அறியவில்லை. எனவே இதற்குரிய ஆதாரத்தை சீமான் அவர்கள் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பாலுமகேந்திரா தனது திரைப்படங்களில்கூட கைக்குண்டு எறியும் காட்சிகள் வைத்ததில்லை. அப்படிப்பட்டவரை காசி ஆனந்தனுடன் சென்று கைக்குண்டு வீசியதாக குறிப்பிடுவது நம்பமுடியாமல் இருக்கிறது. அதேபோல் காசிஆனந்தன் பஸ்க்குகூட கல் எறியாதவர். அவரையும் கைக்குண்டு அதுவும் சைக்கிளில் சென்று எறிந்ததாக கூறுவதை எப்படி நம்புவது?
பாலுமகேந்திரா எப்போது எறிந்தார்? எங்கு எறிந்தார்? எந்த இயக்கத்தின் சார்பில் எறிந்தார? என்ற விபரங்களை அறிய ஆர்வமாக இருக்கிறோம் . எனவே சீமான் தயவு செய்து இந்த விபரங்களை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பாலு மகேந்திராவைப் பொறுத்தவரையில் நல்ல ஒளிப்பதிவாளர். நல்ல இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவரை ஏதோ தமிழ் போராளி ரேஞ்சுக்கு கதை கட்ட வேண்டாம். அதற்குரிய தகுதி அவருக்கு இல்லை.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் தலைமையில் இயங்கிய தமிழீழ இராணுவம் என்னும் இயக்கமே இலங்கையின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையான காத்தான்குடி வங்கிக்கொள்ளையை செய்தது. அந்த வங்கிக்கொள்ளை பணத்திலேயே வீடு படம் தயாரிக்கப்பட்டது. இது பாலு மகேந்திராவுக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த சலுகையும் செய்யவில்லை. இந்த படம் அவருக்கு விருது வாங்கிக் கொடுத்தது. ஆனால் படம் தயாரித்தவர்களுக்கு இலாபம் கொடுக்கவில்லை. மேலும் இந்த படத்திற்காக கட்டிய வீட்டையும் பாலுமகேந்திராவே எடுத்துவிட்டார் என்று தம்பாபிள்ளை மகேஸ்வரனே வருத்தத்துடன் என்னிடம் கூறியிருக்கிறார்.
காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.
அண்ட புளுகனை பார்த்திருக்கிறோம், ஆகாச புளுகனை பார்த்து இருக்கிறோம்..
ஆனால், உணர்ச்சி கவி பாடும் புளுகனை இப்போ பார்த்து இருக்கிறோம்.
பாலு மகேந்திரா ஒரு சிறந்த ஒளிபதிவாளன், சிறந்த தயாரிப்பாளன். அவர் மூலம் எம் மண்ணுக்கு பெருமைதான்!
அம் மனிதனையும் வைத்து, இந்திய மண்ணில் வாழும் இரண்டு அரசியல் வியாபாரிகளான சீமானும், காசி ஆனந்தனும் பேர் தேட முயற்சிக்கிறார்கள்.
அதுவே நிஜம்.
பணிவுடன்,
தரவை பித்தன்.
போராளியாக வாழ்ந்தவர்கள் பலர் வீழ்ந்து விட்ட நிலையில் போராளியாக உருவெடுப்பவர்கள் அம்மண்ணிலே பயணிக்க வேண்டும். இதை விடுத்து வரலாறு தேட முற்படக்கூடாது. களத்தில் பயணிக்க பயந்தவர்கள், கல்லும்,முள்ளும், நிறைந்த விடுதலைப் பயணத்தில் செல்லாமல், தங்கள் வாழ்வை எண்ணி புலம் பெயர்ந்து,வாழ்பவர்கள் எல்லோரும் போராளி என்ற புனித அடையாளத்தை இழந்து விட்டார்கள். இதை உணர்ந்து செயல்படுவதைத் தவிர்த்து வரலாறு சொல்வதற்கு முன் வருவதும், மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் கேவலப்படுத்துவதற்கு ஒப்பானது.