இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நடந்துள்ள போர்க் குற்றங்கள், வன்னி முகாம்களில் நடந்த அத்து மீறல்கள் ஆகியன மீது பன்னாட்டுக் குழுவின் கண்காணிப்பின் கீழ் சிறிலங்க அரசு விசாரணை நடத்தி, போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையில் நடந்த போரில் நடந்த அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து பன்னாட்டு மனித உரிமை சட்டங்களின் படி எப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை கடந்த செவ்வாய்க் கிழமை பான் கி மூனிடம் அளித்தது.
அக்குழுவின் அறிக்கை அப்போதே ஐ.நா.விற்கான சிறிலங்க அரசின் இரண்டாம் நிலை தூதர் ஷாவேந்திர சில்வாவிடம் அளிக்கப்பட்டது. சிறிலங்க அரசின் பரிசீலனையில் அந்த அறிக்கை உள்ள நிலையில், அதன் முழு விவரத்தையும் சிறிலங்க அரசு சார்பு இணையத்தளமான ஐலண்ட் வெளியிட்டுள்ளது.
இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞரான மார்சுகி தாருஸ்மான் தலைவராகவும், தென் ஆப்ரிக்காவின் யாஷ்மின் சூக்கா, அமெரிக்க சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்ட அக்குழு அளித்த அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:
1. சிறிலங்க அரசு கூறியது உண்மையல்ல: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க ‘மனிதாபிமான நடவடிக்கையைத்தான் அரசு மேற்கொண்டது’ என்றும், அதனை ‘ஒரு அப்பாவி கூட கொல்லப்படாத நிலையில் நிறைவேற்றுவதுதான் நோக்கம்’ என்றும் சிறிலங்க அரசு கூறியதற்கு நேர் மாறாகவே உண்மை இருக்கிறது என்பதையே எங்களிடம் உள்ள ஆதாரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த ஆதாரங்கள் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டால், அங்கு மிகப் பாரிய அளவிலான போர்க் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளது உறுதியாகும். இதனை சிறிலங்க அரச படைகளும், விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். போர்க் காலத்திலும் மனித கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டங்கள் அனைத்தும் இந்தப் போரில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் நிரூபிக்கிறது.
2. 2008ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி வரை நடந்த இறுதி கட்ட யுத்தத்தில் பெருமளவில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3,30,000 மக்கள் நாளுக்கு நாள் சுருங்கிவரும் நிலப்பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கடுமையானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போரில் மக்கள் பெருமளவிற்கு கொல்லப்பட்டதை வெளியே கொண்டு செல்ல முயன்ற ஊடகங்களை சிறிலங்க அரசு மிரட்டி அடக்கியுள்ளது. அப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு வெள்ளை வேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.