பணவீக்கம் 11.42% ஆனது : 13 ஆண்டில் இல்லாத உயர்வு

புதுடெல்லி, ஜூன் 28: கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந¢த வாரத்தில், பணவீக்கம் 11.42 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.05 சதவீதமாக இருந்தது. இப்போதும் மேலும் அதிகரித்துள்ளது.

 2009 மார்ச் நிலவரப்படி, பணவீக்கம் 5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் தொடர்ந்து 18 வாரங்களாக 5.5 சதவீதத்தை தாண்டியே பணவீக்கம் இருப்பது கவலை அளிக்கும் சேதி.

பால், டீ, தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் விலை உயர்வால்தான் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை 0.2 சதவீதமும் எரிபொருள் 0.1 சதவீதமும் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு பணவீக்கம் உயரும் என வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் சிதம்பரம் இதே கருத்தை பிரதிபலித்து உள்ளார். இரட்டை இலக்க பணவீக்க விகிதம் அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என அவர் தெரிவித்து உள்ளார்.