பச்சமிளகாய் : சுவாதி

மணியம் வாத்தியார் எண்டால் எல்லாருக்கும் பயம்;. ஆனா மணியம் வாத்தியாருக்கு எங்கட அப்புவக் கண்டாப் பயம். எங்கட அப்புவுக்கு சீவல்காரச் சின்ராசனக் கண்டாப் பயம். இப்பிடி ஒருத்தருக்கு ஒருத்தர் பயப்பிடுகினம் எண்டு எனக்குத் தெரியும். ஆனால் இதை யாரட்டப் போய்க் கேக்கிறது. ஆரட்டக் கேட்டாலும் அடிச்சுப் போடுவினம் எண்டு எனக்குப் பயம்.

நேற்ரைக்கும் மணியம் வாத்தியார் சின்ராசன்ர மகன எனக்குப் பக்கத்தில் இருத்திக் கணக்குச் சொல்லிக்குடுக்கச் சொல்லிப் போட்டு போயிற்ரார்.சின்ராசன்ர மகன்ர சேட்டுக்கொலரில இருக்கிற ஊத்தையெண்டால் ஒரு வண்டில் வரும். எனக்கு அவனுக்கு பக்கத்தில இருக்கப்பிடிக்கேல்லை. ஒருமாதிரிக் கணக்குப் பாடம் முடியும் வரைக்கும் சமாளிச்சுக் கொண்டிருந்தாச் சரி. அங்கால அவர அவற்ர வாங்கில்ல இருத்திப்போட்டு நான் தப்பிப்போடுவன்.

சீவல்க்கார சின்ராசன்ர மகனோட இருக்கிறதொண்டும் எனக்குப் பெரிய பிரச்சினை இல்லத்தான். நான் அவனோட சினேகிதம் வச்சிருக்கிறன் எண்டு என்னோட ஒருத்தரும் கதைக்க மாட்டினமாம். அண்டைக்கு என்ர பிறந்த நாளுக்கு இனிப்புக் குடுக்கேக்கையும் கன ஆக்கள் என்னட்ட இருந்து இனிப்பு வேண்டித் தின்N;னல்ல. வகுப்பில ஏதும் பேன, பெஞ்சிலக் காணாட்டி இவன் தான் கள்ளன். இவன் தான் எடுத்துப் போட்டான் எண்டு எல்லாரும் அவன்ல பழிய போட்டு விடுவினம். ஆனா அவன் அத எடுத்திருக்க மாட்டான் எண்டு எனக்குத் தெரிஞ்சாலும் நான் ஒண்டும் சொல்ற இல்ல. பிறகு என்னையும் கள்ளன் எண்டு சொல்லிப் போட்டு ஒதுக்கி விட்டுருவினம்.

ஒருநாள் இப்பிடித்தான் ஒரு பிரச்சினை வந்து எனக்காக சின்ராசன்ர மகன் எல்லாருக்கும் அடிச்சுப்போட்டான். உடன மணியம் வாத்தியார் என்னையும் அவனையும் கூப்பிட்டு ஒருத்தற்ர காதில ஒருத்தர பிடிக்கச்சொல்லி தோப்புக்கரணம் போடச்சொன்னவர். அப்பேக்க எல்லாரும் என்னப்பாத்துச் சிரிச்சவேல். இதப்போய் நான் அப்புவெட்டச்சொல்லியிருந்தால் அப்பு உடன மணியம் வாத்தியார வீட்ட விட்டு எழுப்பியிருப்பார். ஏனெண்டால் மணியம் வாத்தியார் அப்புவிட கலட்டிக் காணிக்கதான் இருக்கிறார்.

—- —– —–

சின்ன வயசில நாங்கள் ஒழிச்சுப் பிடிச்சு விளையாடுவம். எல்லாரும் ஒழிச்சிருக்க ஒருத்தர்தான் பிடிக்கிறது. பிறகு ஆமி பொலிஸ் எண்டு பக்கம் பிரிச்சு விளையாடுறது. ஆமியும் பொலிசும் சேர்ந்து கள்ளனத்தான் பிடிக்கிறது. இப்ப அதெல்லாம் விட்டுப் போட்டு இயக்கம்பிரிச்சு விளையாடுறது. எந்த இயக்கம் பெரிசு? எது கெட்டிக்கார இயக்கம் எண்டு பாக்கிறது. அதுக்குள்ள நீயா நானா தலைவன் எண்டு சண்டை வரும். இப்பிடியே ஒரு இயக்கத்தில சண்டை கிளம்பி தலைவர் பதவி கிடைக்காத ஆக்கள் எல்லாம் ஒண்டு சேர்ந்து இன்னுமொரு இயக்கத்த உருவாக்கி அதுக்குள்ளையும் சண்ட வந்து முடிவு வர்றதுக்கிடையில விளையாடுற நேரம் முடிஞ்சு வந்திரும்.

போன வெள்ளிக்கிழமை மணியம் வாத்தியார் வரயில்ல. வகுப்பில இருந்து ஒவ்வொருத்தரும் ஒருத்தர ஒருத்தர் கேட்டுக்கொண்டு வந்தினம். நீ எந்த இயக்கம்? நீ என்ர இயக்கத்துக்கு வர்றியா? என்ர இயக்கத்தில கன ஆக்கள் இருக்கு நல்ல ஆயுதம் எல்லாம் இருக்கு வாகனங்கள் இருக்கு என்ர இயக்கம் தான் பெரிய இயக்கம் எண்டான் சபேசன்.

நீ என்ர இயக்கத்துக்கு வாறியா? நான் இருக்கிற இயக்கம் தான் பாங்கெல்லாம் அடிச்சது, கள்ளன எல்லாம் பிடிச்சது. இதுதான் கெட்டிக்கார இயக்கம் எண்டான் சுரேஸ்.

என்ர இயக்கம் தான் பொதுமக்களக் காப்பாத்திறது. காட்டிக்குடுக்கிற ஆக்களையெல்லாம் கம்பத்தில கட்டிப்போட்டுச் சுடுறது. கன ஆக்களை கண்ணையெல்லாம் கட்டிக்கொண்டு போறது. நீ வேற இயக்கத்தில சேர்ந்து போட்டு மதி சொல்லேக்க அதில சேர்ந்திருக்கலாம் எண்டு கவலப்படுவ என்றான் மதி.

ஆமி பொலிஸ் விளையாடேக்கையும் ஆமிக் கொமாண்டரா வாற சின்ராசின்ர மகன் ரகு மட்டும் கருணாவோட சேர்ந்து நிண்டு இருவரும் தாங்கள் ஒரு இயக்கத்திட பெயரச் சொல்லி என்னக் கூப்பிட்டாங்கள். ஏன் எண்டால் அந்த இயக்கம் தான் தங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்குதாம். துவக்கால தென்ன மரத்தில இருக்கிற இளனிய எல்லாம் சுட்டுக்காட்டினதாம் என்றான். எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்ல. நான் எந்த இயக்கத்துடனும் சேர மாட்டன் எண்டு சொல்லிப் போட்டன். நான் பள்ளிக்கூடத்தால வெளிய வர எல்லாரும் சேர்ந்து என்ன துரத்திக்கொண்டு வந்தார்கள். நான் துரோகி நான்தான் காட்டிக் குடுக்கிறன் எண்டு. நானும் ஒரே ஓட்டமா சின்ராசண்ணன் வீட்டடியால வரேக்க எங்கட அப்பு சின்ராசண்ணை வீட்டு திண்ணையில இருந்து கள்ளுக்குடிச்சுக் கொண்டிருக்கிறார்.

—– —– —–

மணியம் வாத்தி சாதி சமயம் பார்க்கிறதில்லை எண்டு எப்பிடித்தான் நடந்தாலும் இப்ப அவர் எண்னெண்டு வெளிய தலை காட்டப் போறார். எந்த முகத்தோட இந்தச் சம்மந்தத்த செய்து வைக்கப்போறார் என்று அம்மாவும் பரமேஸ்வரி அக்காவும் கதைச்சுக் கொண்டு இருந்தினம். மேளமடிக்கிற லாந்தியிட அண்ணன்ர மகனை மணியம் வாத்தியாற்ர மகள் காதலிச்சுப் போட்டாளாம். அவங்களும் பெட்டையக் கொண்டு போயிற்ராங்களாம் எண்டு கதைத்துக் கொண்டு நிண்டா. எனக்கு இப்பத்தான் விளங்குது ஏன் வாத்தியார் பள்ளிக்கூடம் வர்றதில்லையெண்டு. அந்த நேரம் பார்த்து சபேசன் வந்து மணியம் வாத்தியாரையெல்லோ எங்கட இயக்கம் பிடிச்சுக்கொண்டு வந்து வச்சிருக்கிறாங்கள் எண்டான். உனக்கெப்படித் தெரியும் எண்டுகேக்க நான் எங்கட கிடுகு வேலிக்குள்ளால ஓட்டை வைச்சுப் பார்த்தனான். வேணுமெண்டா ஒருத்தருக்கும் சொல்லாமவா காட்டுறன் எண்டு என்னக் கூட்டிக் கொண்டு போக, நானும் போய்ப் பார்த்தன். ஒரு அண்ணை கேட்டார் மாஸ்டர் நீங்க என்ன இருந்தாலும் ‘….பிள்ளைக்கு என்ர வீட்டுல சம்மந்தம் கேக்குதா?” எண்டு கேட்டது பிழைதானே. அதனால நீங்க அவற்ர முதுகில கொட்டியிருக்கிற சீனிய உங்கட நாக்கால நக்கியெடுக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு, மாஸ்டர் அழுதுகொண்டிருக்க, அங்க பாருங்க மாஸ்டர் கனகலிங்கம் ஐயாவ கள்ளுக்குடிச்சுப் போட்டு பேசாமப் போறதுக்கு வெறியில கள்ளுக்குடுத்தவர ‘….பெடிப்புள்ளைக்கு என்ன காசு? என்று கேட்டார். அவருக்கு தண்டனையா 5 பச்சமிளகாய் குடுத்திருக்கிறன். அத அவர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். சாதி கதைக்கிற ஆட்கள் தண்டனையில் இருந்து தப்பவே ஏலாது என்றான். நானும் பாத்தன் எங்கட அப்புதான் பச்சமிளகாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
உடன நான் திரும்பியோட நில்லு எங்கபோற. வீட்ட போய் சொல்லி ஆக்கள் வந்து பாத்தா என்னண்டு உங்களுக்குத் தெரியும் எண்டு கேட்டு எங்களையும் அடிப்பாங்கள் எண்டான் சபேசன்.

இல்ல விடு சபேசன் அம்மாவோட இருந்து சாதிகதைச்சுக்கொண்டிருக்கிற பரமேஸ்வரி அக்காவுக்கும் நான் பச்சமிளகாய் குடுக்க வேணும்.