பக்கச்சார்பற்ற சுதந்திர விசாரணை வேண்டும்: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத்

கடந்த வாரம் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற பாரிய மனிதப் புதைகுழி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுவில் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக மீளக் குடியமர்த்தப்பட்டிருந்த பகுதியில் இடம் பெயர்ந்த மக்கள் கிணறு தோண்டியபோதே இந்த மனிதப் புதைகுழி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது

அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்துவதன் மூலமே இதுதொடர்பில்  தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியுள்ள சந்தேகங்களை நீக்க முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

மரபணு மற்றும் ஏனைய பரிசோதனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையான விசாரணைகளின்படி, இந்த மரணங்கள் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்கு 5 மாதங்களுக்கு முன்னராக நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும், அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் கிழக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த மனித எச்சங்கள், நீதிமன்றத்தின் உத்தரவின்படி,  அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் சமரக்கோன் தெரிவித்துள்ளார்.