புலம் பெயர் நாடுகளில் முன்வைக்கப்படும் தேசியம் அல்லது தமிழ்த் தேசியம் குறித்த கருத்துக்களை பல ஆண்டுகள் பின் நோக்கிப் பார்க்கலாம்.குறிப்பாக ஐரோப்பாவில் தேசியமும் தேசங்களும் உருவான காலத்திற்குப் பின்னோகிச் சென்றால் பல உண்மைகள் புலப்படும். ஐரோப்பாவில் தேசங்கள் உருவான காலத்தில் பிரான்ஸின் மக்ரேபியன் எல்லைப்பகுதிகளில் வட ஆபிரிக்க மக்ரேபிய இனத்தவர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிரஞ்சு தேசிய உருவாக்கத்தின் போது பிரஞ்சு இனத்தவர்களாக மாற்றமடைந்தனர்.
இதே போன்றே இத்தாலியில் அல்பேனியர்களும் தமது பண்பாட்டு அடையாளங்களைத் துறந்து பொதுவான கலாச்சாரத்தோடு இணைந்து கொண்டனர். தெற்கு இத்தாலியில் குடியேறியிருந்த வட இந்தியர்கள் தமது அடையாளம் தெரியாமல் இத்தாலிய ஒன்றிணைவின் போது தேசியக் கலாச்சாரத்தோடு கலந்து போயினர். இவ்வாறு பல உதாரணங்களை முன்வைக்கலாம்.
இங்கு கேள்வி என்னவென்றால், 19ம் ஆம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்தின் பின்னர் ஆசிய நாடுகளிலிருந்தும் மக்ரேபிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் ஐரோப்பாவில் குடியேறியவர்கள் ஏன் இவ்வாறு ஐரோப்பிய தேசத்தோடு இரண்டறக் கலக்கவில்லை என்பதே.
‘இரண்டறக் கலத்தல்’ என்பதும் பல்வேறு பண்பாடுகள் இணைந்து ஒரு பொதுவான கலாச்சாரமும் பொது மொழியும் உருவாதல் என்பது முதலாளித்துவ உருவாக்கத்தின் போதான நிகழ்ச்சிப்போக்கு. அதாவது தேசிய உருவாக்கத்திற்கான பண்பு. தேசங்கள் உருவாகும் காலத்திற்கான அடிப்படைகள். இந்த நிகழ்சிப்போக்கு நிறைவுற்று, மூலதனம் எல்லை தாண்டிச் சென்ற போது முதலாளித்துவப் பொருளாதாரமும் அதற்கே உரித்தான ஜனநாயகமும் முடிவடைகிறது. பின்னர் ஏகாதிபத்தியப் பொருளாதாரம் உருவாகிறது. இது முன்னைய முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து முற்றிலிம் வேறுபட்டது.
நவ தாராளவாதக் கொள்கை அறிமுகமான 70களின் பின்னர் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஐரோப்பாவில் முற்றாகத் தடைப்பட்டது. முதலாளித்துவத்திற்கே உரித்தான சமூக இயக்கம் தடைப்பட்டது. புதிய குடியேற்ற வாசிகள் ஒரு தேசமாக இணைவதும் தடைப்பட்டது. ஒவ்வொருவரும் தம்மைத் தனிக் குழுக்களாக உணர்ந்தனர். அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டனர்.
பிரான்சில் அல்ஜீரியர்கள், துனிசியர்கள், மரோக்கர்கள் போன்றோரின் அடிப்படைவாதம், பிரித்தானியாவில் பாகிஸ்தானியர்களின், இந்தியகள் போன்றோரின் அடையாளத்திற்கான செயற்பாடுகள் இதிலிருந்தே நோக்கப்படலாம்.
1950 இற்கும் 60 இற்கும் இடையிலான காலப்பகுதியில் கிழக்கு லண்டனை நோக்கிக் குடிபெயர்ந்த பங்களாதேஷியர்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும். பங்களாதேஷின் சிலட் மாவட்டத்திலுள்ள பகீர் காதி கிராமத்திலிருந்து பெருந்தொகையான பங்களாதேஷியர்கள் இங்கிலாந்தின் மலிவான கூலிகளாக கிழக்கு லண்டன் பகுதியில் குடியேறினார்கள். கட்டுமானத் துறையில் மிகக் கடினமான பணிகளுக்காக வரவழைக்கப்பட்ட இவர்கள், ஆரம்பத்தில் பிரித்தானியாவில் நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.
முதலில் குடியேற்ற வாசிகளின் குடும்பங்களும் அதனைத் தொடர்ந்து கிராமத்தவர்களும் லண்டனை நோக்கி இடம்பெயர ஒரு குட்டி சிலெட் கிழக்கு லண்டனின்ல் உருவானது. இதன் பின்னர் அவர்கள் நாடுதிரும்புவதற்கான தேவை ஏற்படவில்லை என்கிறார் கார்னர் என்ற ஆய்வாளர்.
இவ்வாறே அரசியல் காரணங்களை முன்வைத்து தற்காலிகமாக அமரிக்காவில் குடியேறிய ஹெயிட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது சொந்தத் தேசத்திற்குத் திரும்பிச் செல்வது குறித்துச் சிந்தித்தில்லை என்கிறார் அவர்கள் குறித்து ஆய்வு செய்த கிளிக் சில்லர். ஹெயிட்டி குடியேற்ற வாசிகளைப் போலவே அரசியல் காரணங்களுக்காக நோர்வேயை நோக்கி இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் நோக்கப்பட வேண்டும் என்கிறார் புலம் பெயர் தமிழர்கள் தொடர்பான கற்கையை மேற்கொண்ட பொக்லேர்ட் என்பவர்.
புலத்திலிருந்து இடம் பெயர்ந்து புதிய ஐரோப்பிய அல்லது அமரிக்க நாடுகளில் குடியேறிய மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ற வாசிகளிடையே ஒரு பொதுவான கூட்டுப்பண்பு காணப்படுகிறது என்று வாதிக்கிறார்.கிளிக் சில்லர். அந்தப் பொதுவான பண்பு என்ன அது புலம்பெயர் அரசியல் தளத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்ற வினாக்கள் இன்றைய தமிழ்ப் புலம்பெயர் அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகும்.
புலம் பெயர் தமிழர்களின் சிந்தனை தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் சிந்தனை முறையிலிருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது. 30 வருடங்களாகப் புலம்பெயர்ந்து வாழுகின்ற பெரும்பாலான தமிழர்கள் முப்பது வருடத்திற்கு முன்னர் தாம் தொலைத்த அடையாளங்களை இன்றும் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள். பங்களாதேஷியர்களைப் பற்றிக் குறிப்பிடும் அல் அலி என்ற ஆய்வாளர் இதனைத் தேசம் கடந்த அடையாளம் என்கிறார்.
குடிபெயர்ந்த தமிழர்கள் மத்தியில், முதலாவது சந்ததி இப்போது தான் உருவாக்கம் பெற்றுள்ளது. அந்தச் சந்ததியை தமது கலாச்சார வட்டத்திற்குள் பேணுவதற்காகான பெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.
இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.
30 வருடங்களின் முன்னிருந்த “பிந்தங்கிய யாழ்ப்பாணிகளை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.
பிரித்தானியாவில் பெர்போர்ட் என்ற இடத்தில் செறிந்து வாழ்கின்ற பாகிஸ்தானியர்களை விட பாகிஸ்தானிய நகர்ப்புற முஸ்லீம்கள் மிகவும் “முன்னேறிய” மூட நம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுவதாக ஜோர்ஜ் அழகையா இன்ற பி.பி.சி ஊடகவியலாளர் தனது நேர்முகம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.
ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.
குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.
இவை அனைத்திற்கும் அப்பால் புலம் பெயர்ந்தவர்கள் அந்த நாடுகளின் பிரஜைகளாக மாறியுள்ளனர். தமது வாழ்க்கையை அழித்து சொந்த நிலங்களையும் வீடுகளையும் உரித்தாக்கியுள்ளனர். அவற்றிற்கான கட ன் தொகைக்காக அந்த நாடுகளின் வங்கிப் பொருளாதாரப் பொறிமுறையோடு தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் எந்தக் காராணத்தை முன்னிட்டும் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்லப் போவதில்லை.
ஈழத் தமிழர்கள் எவ்வாறு இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகளாக வளர்ந்துளதை நாம் காணக்கூடியதாக உள்ளதோ அதே சமாந்தரமான நிலைமைகளை பிரான்சின் அல்ஜீரியர்கள், பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள் மத்தியிலும் காணலாம்.
ஐரோப்பாவில் ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு முறை தகர்க்கப்பட்டு சமூக மாற்றம் ஒன்று உருவாகும் வரைக்கும் இந்த நிலை தொடரும் என்பதே எனது கருத்து. இதற்கு அப்பால் அவர்களது நாடுகளில் உருவாகும் முற்போக்கு இயக்கங்களின் செயற்பாடுகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
மிகவும் பிந்தங்கிய சிந்தனைகளைக் கொண்ட புலம்பெயர் சமூகங்களை ந.இரவீந்திரன் திட்டித் தீர்பதும் அரசியலில் தலையிட வேண்டாம் என்று ஆணையிடுவதும் வேடிக்கையானது. அவர் மார்க்சியத்தில் குறைந்தப்ட்சம் ஈடுபாடு கொண்டவர் என்றால் இரண்டு விடயங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும். முதலாவதாக புலம் பெயர் சமூகத்தைப் புரிந்து கொள்ளல், இரண்டாவதாக அதனைக் கையாளல்.
புலம் பெயர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு மேற்குறித்த தகவல்கள் பயனுடைதாகும் என்பது எனது நம்பிக்கை. இனி, இந்த சமூகம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதே அடுத்த கேள்வி.
ஏனைய நாடுகளின் புலம் பெயர் சமூகங்களைப் போலவே தமிழ்ச் சமூகத்திலும் மூன்று பிரதான அடுக்குகளைக் காணலாம். முதலில் வசதிபடைத்த மேட்டுக்குடியினர். இரண்டாவதாக அவர்களுக்குச் சேவையாற்றும் இரண்டாவது அணி. இவை இரண்டையும் தவிர தத்தமது அரசியலை நோக்கிப் பயன்படுத்தப்படும் அப்பாவிகள். இவர்களிடையே இன்று இரண்டு அரசியல் போக்குகள் காணப்படுகின்றன. முதலாவதாகவும் பெரும்பான்மையானதாகவும் “தீவிர புலி ஆதரவு” அரசியல். இரண்டாவதாக “தீவிர புலி எதிர்ப்பு” அரசியல். இவை இரண்டுமே இலங்கையின் இன்றை சூழலோடு பொருந்தாத அன்னியமான அரசியல் போக்குகளே. இதற்கு அப்பால் எந்த அரசியல் போக்கும் இங்கு காணப்படுவதில்லை. இவர்கள் இரு பகுதியினருமே தத்தமது அரசியலுக்கு வெவ்வேறு காரணங்களை முன்வைத்தாலும் இந்த இரண்டு எல்லைகளுக்குள்ளேயே அரசியல் முடக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பகுதியினரிலும் புலி எதிர்ப்பு அரசியலோடு இணைந்தவர்கள் மிகச் சிறுபான்மையினரே எனினும் இரண்டு அணியினரிடையேயும் பொதுமைப்பாடுகளைக் காணலாம்.
தமது இருப்பிற்கான வியாபார நோக்கத்திற்காகவும், தம்மைச் சுற்றிய குழு ஒன்றை உருவாக்கிக்கொள்வதற்காகவும் இருபகுதியினருமே தமது அரசியலை முன்வைக்கின்றனர். தவிர, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் இன்னொரு பகுதி எனக் கூறும் இவர்கள் புலம் பெயர் நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. புலம் பெயர் நாடுகளில் காணப்படும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களில் புலம் பெயர் நாடுகளில் அரசியல் பேசுகின்ற எவரும் மறந்து கூடச் செயற்பட்டதில்லை. குறைந்தபட்ச தொழிற்சங்க நடவடிக்கைகளில் கூட அவர்கள் ஈடுபட்டதில்லை. இலங்கை போன்ற நாடுகளை ஒடுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்கின்ற அரசுகளோடும் கட்சிகளோடும் இவர்கள் தாராளமாக உறவு வைத்துக்கொள்கிறார்கள்.
இதன் அரசியல் ஒடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு பல தளங்களில் சேவையாற்றுகிறது.
1. மலிவான கூலிகளான புலம் பெயர் மக்களைத் தொழிற்சங்க மற்றும் ஜனநாயக முற்போக்கு நடவடிக்கைகளிலிருந்து அன்னியப்படுத்தவதனூடாக அடிமைகளான உழைப்பாளிகளாக அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.
2. ஏகாதிபத்திய ஆதரவாளர்களான புலம் பெயந்தோரின் தமது நாடுகள் மீதான அரசியல் ஆளுமை அந்த நாடுகளில் போராடும் சக்திகளைக் காட்டிக்கொடுத்து அழிக்கிறது.
இந்த இரண்டுமே இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய மக்களுக்குமே எதிரான சமூகவிரோதக் கருத்துக்கள்.
மேட்டுக்குடி புலம்பெயர் அரசியல் வாதிகள் ஊடாக அந்த நாடுகளின் அதிகாரவர்க்கம் புலம்பெயர் அப்பாவிகளைக் கையாள்கின்ற உண்மையைப் புரிந்துகொள்கின்ற நாம் அதனை எவ்வாறு அணுகப்போகிறோம்?
இரவீந்திரன் சொல்வது போல “வாயை மூடுங்கள்” என ஆணையிடுவது ‘கோதாபய பாதி கோர்பச்சேவ் பாதி’ கலந்த கலவை. மார்சிஸ்டுக்கள் என்ற விஞான பூர்வமான அணுகுமுறையை ஏற்றுக்கொள்பவர்கள் முன்வைக்கும் அரசியல் திட்டம் என்ன? அவர்களை வென்றெடுப்பதும், மேட்டுக்குடி அரசியல் வியாபாரிகளிடமிருந்தும் அப்பாவிகளை விடுவிப்பது எப்படி?
கோ சீ மீன் வியட்நாமிய விடுதலையின் போது செயற்பட்ட முறை எமக்குச் சில முன் உதாரணங்களைத் தருகின்ற போதிலும் அது முழுமைபெற்றதல்ல.
முதலில் இலங்கையில் உறுதியான அரசியல் திட்டத்தை முன்வைக்கும் தேசிய இன முரண்பட்டைப் புரிந்துகொள்கின்ற, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்காகக் குரல்கொடுக்கும் அரசியல் தலைமையை உருவாக்குவதற்கான அடிப்படை வேலை முறைகளிலிருந்தே இவை ஆரம்பமாகலாம். அவ்வாறான அரசியல் தலைமை புலம் பெயர் நாடுகளின் தமிழர்கள் அல்லாத முற்போக்கு ஜனநாயக சக்திகளோடு இணைவை ஏற்படுத்துவதற்கான அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும். இந்த இணைவு என்பது பின் தங்கிய சிந்தனை வட்டத்திற்குள் சிக்குண்டுள்ள தமிழர்களுக்கு இன்னொரு பக்கத்தை அறிமுகப்படுத்தும். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான உள்ளேயும் வெளியேயுமான போராட்டங்களைத் தீவிரப்படுத்தும்.
இலங்கையில் அரசியல் தலைமை உருவாதலும் சர்வதேச ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனான இணைவும் கூட ஒன்றோடொன்று பிரக்க முடியாத நிகழ்ச்சிப் போக்காகக் காணப்படலாம்.இந்த அடிப்படையில் புலம் பெயர் நாடுகளில் உருவாகும் அரசியல் இயக்கம் தமிழ் நாட்டின் “தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரிகளை” இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறிந்துவிடும். கிரேக்கத்தில் இடதுசாரிகளின் எழுச்சி, இத்தாலியில் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் புதிய வரவுகள், ஸ்பானியாவில் திரண்டெழும் அரச எதிர்ப்பு மக்கள் திரள்கள் என்பவற்றிலிருந்து ஐரோப்பா முழுவதும் பரவிவரும் புதிய அரசியலில் தமது பங்கை உறுதி செய்துகொள்ள ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முன்னணி சக்திகள் என்ன செய்தார்கள்? குறைந்தபட்சம் ஆதரவு அறிக்கை, மின்னஞ்சல் போன்ற ஆரம்ப நிலையைக் கூட அவர்கள் எட்டியதில்லை. கொழும்பில் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கும் இடதுசாரியம் அதன் குறுகிய வட்டத்தைத் தாண்டியதில்லை.
இரட்டைத் தேசியம் என்ற புனைவுக்குள் முகத்தை மூடிக்கொள்கின்ற ந.இரவீந்திரன் போன்றவர்கள் ஒடுக்கப்படும் உலகத் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களின் மேலெழும் எழுச்சிகள் குறித்தும் சிந்திப்பார்களானால் புலம்பெயர் தமிழர்களைக் கையாள்வது சாத்தியமானதே.
அதுவரை புலம் பெயர் அரசியல் வியாபாரம் புலி எதிர்ப்பாகவும் புலி ஆதரவாகவும் ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம்படை போன்று செயற்படுவது தவிர்க்கமுடியாத துயரமாகும்.
முன்னைய பதிவுகள்: