21.12.2008.
ஸ்ரொக்ஹோமா: உலகிலேயே மிக உயர்ந்த விருதுகளை வழங்கும் நோபல் பரிசுக்குழு ஊழலில் ஈடுபட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், வேதியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கும் உலக அமைதிக்குப் பாடுபட்டவர்களுக்கும் ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகை தான் உலகிலேயே மிக உயர்ந்த விருதாகக் கொடுக்கப்படும் பரிசுத் தொகைகளிலேயே அதிக மதிப்புள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் பரிசாகக் கொடுக்கப்படுகிறது.
இப்படி மதிப்பு மிக்க இந்த பரிசை வழங்குவதற்காக தேர்வு செய்யும் குழுவிலும் ஊழல் புகுந்து விட்டாதகக் கூறப்படுகிறது.
மருத்துவ, இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் விருதுக்குரியவரை தேர்ந்து எடுக்கும் குழுக்கள் சமீபத்தில் சீனாவுக்கு சென்று வந்தனர். சீன அதிகாரிகளின் செலவில் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் நோபல் பரிசு நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் சீனர்கள் யாருக்கும் நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பரிசுகள் சுவீடன் நாட்டிலுள்ள நோபல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகின்றன. மருத்துவத்துக்குரிய பரிசுக்குரியவரைத் தேர்ந்து எடுப்பதற்கான குழு கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியைகளைக் கொண்டது.
“ரோயல் அக்கடமி ஒவ் சயன்ஸ்’ என்ற கல்விக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் கொண்ட குழு தான் இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தது.
இது தவிர இன்னொரு ஊழலும் வெளியே தெரியவந்துள்ளது. ஆங்கிலோ ஸ்வீடிஷ் பார்மசூட்டிகல் கம்பெனி அஸ்டரா ஜெனெகா. இந்த கம்பெனி நோபல் அறக்கட்டளையுடன் நெருக்கமான தொடர்புடையது. நோபல் கம்பெனிகளுடன் அனுசரணை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹரால் ஜர் ஹாசன் என்ற ஜெர்மனியருக்கு வழங்கப்பட்டது. அவருடன் அஸ்ட்ரா ஜெனெகா வியாபாரத் தொடர்பு வைத்துள்ளது. இதனால், மருத்துவத்துக்கான பரிசு வழங்கியதில் அந்தக் கம்பெனியின் செல்வாக்கு இருந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. ஊழல் ஒழிப்புக்கான சட்டத்தரணி நில்ஸ் எரிக்ஷல்ட்ஸ் விசாரணை நடத்தி வருகிறார்