நேபாள மன்னரின் மகன்: சிங்கப்பூரில் குடியேறுகிறார்

காத்மாண்டு : பதவி பறிக்கப்பட்ட நேபாள மன்னர் ஞானேந்திராவின் மகன் பரஸ், நாட்டை விட்டு வெளியேறுகிறார். அவர் சிங்கப்பூரில் குடியேறுகிறார் என, நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேபாளத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மன்னராட்சி முடிவுக்கு வந்து விட்டது. அங்கு ஜனநாயக ஆட்சி உதயமாகியுள்ளது. பதவி பறிக்கப்பட்ட மன்னர் ஞானேந்திரா, நீண்ட காலமாக வசித்த நாராயண் ஹிதி அரண்மனையை விட்டு வெளியேறி, காத்மாண்டு நகரின் புறநகர் பகுதியில் உள்ள பழைய அரண்மனை ஒன்றில் தங்கியுள்ளார். மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேறியதில், அவரின் மகன் பரஸ், மிகுந்த கோபம் கொண்டுள்ளார். அதனால், நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் குடியேறுகிறார். முதல் கட்டமாக அவர் மட்டுமே செல்கிறார். அவரின் மனைவி ஹிமானி மற்றும் மூன்று குழந்தைகள் செல்லவில்லை. சில நாட்கள் கழித்து அவர்களும் சென்று விடுவர்.இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டதாலும், நாராயண்ஹிதி அரண்மனை அருங்காட்சியமாக மாற்றப்பட்டதாலும், அங்கு தங்கியிருந்த இந்து குருக்கள் ஒன்பது பேர் வேலை இழந்துள்ளனர். ஞானேந்திரா தற்போது தங்கியிருக்கும் அரண்மனையில், தாங்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், கோரியுள்ளனர்.”வேதங்களின் படி, இந்து மத சடங்குகளை மட்டுமே நாங்கள் செய்வோம். அதை தவிர வேறு எந்த வேலையும் எங்களுக்கு தெரியாது. அரசியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டதால், நாங்கள் வேலை இழந்து தவிக்கிறோம்’ என, தனியார் ரேடியோ ஒன்றுக்கு பேட்டி அளித்த குருக்களில் ஒருவர் கூறியுள்ளார்.