16.08.2008.
நேபாளத்தில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட தன்பின்னரான முதலாவது பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் தலைவர் புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் நிருணய சபையினால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
முடியாட்சிக்கு எதிராக ஒரு தசாப்த காலமாக ஆயுதப் போராட்டம் நடத்திய நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான 53 வயதான பிரசந்தா அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான ஷெர்பகதூர் டியூபாவை 351 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 601 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிருணய சபையில் நேற்றைய தேர்தலில் 577 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். பிரசந்தாவுக்கு இதில் 464 வாக்குகள் கிடைத்தன. நேபாளத்தின் மற்றைய பிரதான இடதுசாரிக் கட்சியான ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் மதேசி உரிமைகள் மக்கள் அமைப்பும் பிரசந்தாவை ஆதரித்தன. ஷெர்பகதூர் டியூபா சாதாரண பெரும்பான்மையைக்கூடப் பெறத் தவறிவிட்டார். அவருக்கு 113 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. அவரின் தோல்வி நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த நேபாள காங்கிரஸ் எந்தளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
பிரதமர் தெரிவு முடியாட்சியின் முடிவுக்குப் பின்னர் சமஷ்டி ஜனநாயகக் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் கடந்த 4 மாதங்களாக நீடித்த இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. பிரசந்தாவுக்கு முன்னர் பிரதமராக இருந்த நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா மாவோவாதிகளின் நெருக்குதல்களையடுத்து பதவியை இராஜினாமா செய்துவிட்டு காபந்து பிரதமராகவே இருந்துவந்தார். நேபாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு சார்க் உச்சிமகாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார்.
பிரசந்தா தலைமையிலான நேபாளத்தின் புதிய அரசாங்கத்தில் மாவோவாத கம்யூனிஸ்டுகள் நிதியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு உட்பட முக்கியமான பல அமைச்சுக்களைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.