நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க காலக்கெடு முடிந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போகிறது. நேபாளத்தில் கடந்த 2008ம் ஆண்டு அரசியல் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. 2012 மே 27ம் தேதிக்குள் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. அதில் பெரிய கட்சிகளுடன் மாவோயிஸ்ட், உதிரி கட்சிகளும் இணைந்தன.
காலக்கெடு நெருங்கிய நிலையில் அரசியல் சட்ட திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆட்சியில் இருந்து சில கட்சிகள் வெளியேறின. எனவே, கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், கட்சிகளுக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அரசியல் சட்ட திருத்தங்கள் செய்யப்படவில்லை.
பிரதமர் பாபுராம் பட்டாரய் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையின் பதவி காலம் 4 முறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், ”இதுதான் கடைசி வாய்ப்பு. 2012 மே 27ம் தேதிக்குள் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்று நேபாள சுப்ரீம் கோர்ட் கடந்த நவம்பரில் உத்தரவிட்டது. அந்த காலக்கெடு நேற்று முன்தினம் இரவுடன் முடிந்த நிலையில் பிரதமர் பாபுராம் தலைமையில் நேற்று காலை அவசர கூட்டம் நடந்தது.
அதில் அனைத்து கட்சி தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். நேபாளத்தில் புதிய அரசியலலைப்பு சட்டத்தை உருவாக்குவதில் தலைவர்களிடம் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து அமைச்சரவையை கலைத்து விட்டு, நவம்பர் 22ம் தேதி புதிய தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் நேபாள ஜனாதிபதி ராம்பரண் யாதவை சந்தித்த பிரதமர் பாபுராம், அமைச்சரவையை கலைத்து புதிய தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
Nepal is sitting on the top of India. We are a Tear Drop from the Chin of India – Pearl S. Buck.