நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்த விக்கி

cvvikneswaranஎன்ற தலைப்பில் ஜெயலலிதா வெற்றியின் பின்னர் புலம்பெயர் அமைப்புக்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி தொடர்பான கட்டுரை ஒன்று மேமாதம் 15, 2011 @ 19:02 அன்று பதிவேற்றப்பட்டது. அக்கட்டுரையில் ‘எதிர்காலத்தில் இனப்படுகொலைக்குத் துணை சென்றவர்கள், கொலைகளைத் தலைமைதாங்கிய இராணுவ அதிகாரிகள், காட்டிக்கொடுத்தவர்கள், போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று தீர்ப்புவழங்கியவர்கள்,(http://inioru.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/) ஏன் கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமே வெற்றுத் தீர்மானம் ஒன்றின் ஊடாக தமிழர்களின் தலைவராகிவிடலாம்.
ஜெயலலிதாவின் வெற்றி புலம்பெயர் மற்றும் புலத்திலிருக்கும் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போடுகின்றது. இவர்கள் பிழைப்பு நடத்த வழியேற்படுத்திக்கொடுக்கிறது. மற்றப்படி ஜெயலலிதா யார், அவர் முன்பு எப்படியிருந்தார், அவரின் பின்னாலுள்ள நோக்கங்கள் என்ன, எப்படியெல்லாம் மக்களைச் சூறையாடுவார் என்பவையெல்லாம் தமிழ்த் தேசியக் கொள்ளைக்காரர்களுக்கு தேவையற்ற அரசியல், இன்று கொள்ளையடிப்பதற்கு அவரின் வெற்றி உறுதுணையாக விளங்குகிறது. அவ்வளவுதான்.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நான்கு வருடங்களின் பின்னர் கட்டுரையில் எதிர்வு கூறப்பட்டவை நடைபெறுகின்றன.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்கி தனது பதவிக்காலம் முழுவதும் சிங்கள பௌத்த அரசின் நீதியை நிலைநாட்டியவர் விக்னேஸ்வரன். நூற்றுக்கணக்கான போராளிகளின் வாழ்க்கையை அழித்துச் சிதைத்த இப்பிழைப்புவாதி ஜனவரி மாதம் 8ம் திகதி மகிந்த தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழ்த் தேசியம் பேச ஆரம்பித்தார். அதற்கு முன்பதாக ஒரு துண்டறிக்கைகூட இவர் வெளியிட்டதில்லை.
பயங்கரவாதிகளாக விக்னேஸ்வரனால் தண்டிக்கப்பட்ட அத்தனை போராளிகளதும் உணர்வுகளைக் கொச்சைப்படுத்திவிட்டு இன்று திடீர் தேசியவாதியக விக்னேஸ்வரன் மாற்றப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் மூச்சுக் கூட விடாமலிருந்த இரண்டு மனிதர்கள் இன்று புனிதர்களாக்கப்படுகின்றனர். ஒன்று அப்துல் கலாம், மற்றவர் விக்னேஸ்வரன். இரண்டாமவர் கொழும்பின் சிங்கள பௌத்தததிற்குச் சேவை செய்த குடும்பத்தின் பரம்பரை.
தமிழர்கள் அழிக்கப்பட்டபோது ஒரு வரிகூட எழுதாத விக்னேஸ்வரன் செக்ஸ் சாமியார் பிரேமானந்தா தமிழ் நாட்டில் வைத்து ஆதாரபூர்வமான குற்றங்களுடன் கைதான போது பக்கம் பக்கமாக எழுதினார்.
அந்த நேரத்திலெல்லாம் அவர் தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது உண்மை. குறைந்தபட்சம் மனிதர்கள் சாரிசாரியாகக் கொல்லப்படுவது குறித்துத் துயர்கொள்ளும் சாமானிய மனிதனாக இருந்திருக்க முடியாதா என்ன.
இன்று விக்கி தனது மற்றொரு கொழும்புப் பணக்காரச் சகாவான கஜேந்திரகுமாருக்கு வாக்களிக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர்.
இவை அனைத்தும் புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய இன்டஸ்ரி நடத்தும் வெற்று வியபாரக் குழுக்களின் திட்டமிடலிலேயே நடைபெறுகின்றன. புலம்பெயர் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்துள்ள இக் குழுக்களும் அவற்றைச் சார்ந்தவர்களும் தமது வியாபாரத்திற்குத் தேவைப்படும் உணர்ச்சியூட்டலை திறம்படச் செய்பவர்கள் யாரானாலும் ஏற்றுகொண்டு அவர்களின் பங்கைப் பகிர்ந்துகொள்வார்கள்.
விக்கிக்கு வெள்ளையடித்த அதே குழுக்கள் இன்று வாக்குக் கேட்டு ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் சென்று மாற்றத்தை ஏற்படுத்தித் தர கஜேந்திரகுமார் வந்துவிட்டார் என்கின்றன.
இவ்வியாபாரக் கும்பல்களே தமிழ்த் தேசியத்தைக் கையில் வைத்திருப்பதால் சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கை தவறானவர்களாலேஎயே முன்வைகப்படுகிறது என உலகின் ஜனநாயகவாதிகள் எண்ணுகின்றனர்.

நடுநிலைமைத் தேசியவாதியின் பின்னால் புதைந்திருக்கும் மர்மங்கள் : ஈழ மாறன்