தமிழகத்தில் பாஜகவைத் தவிற அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கிறது. முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மு கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
இப்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நீட் தேர்வால் எழுந்துள்ள பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்தக் குழுவிடம் நீட் தேர்வுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் மனுக்களை அளித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் “சடத்திற்கு உட்பட்ட நீட் தேர்வை எதிர்ப்போம்” என்றார். ஆனால், பாஜக கட்சியோ நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நீட்டை எதிர்க்கிறோம் என்று சட்டமன்றத்தில் கூறிய நிலையில் நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய பாஜக இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக களமிரங்கியுள்ளது. பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கில் தேச நலனுக்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே தமிழக அரசு நீதிபதி ஏ.கே. ராஜனை நியமித்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சில நாட்களில் விசாரிக்கும் என தெரிகிறது.