வன்னியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேறும் நிலையில் அந்த அமைப்புக்கள் இதுவரை காலமும் மேற்கொண்ட நிவாரணப் பணிகளை தொடர்ந்து யார் முன்னெடுப்பது என்பது தொடர்பாக இதுவரை எந்தவித அறிவுறுத்தலும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் என்.தேவநாயகம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், வன்னிப் பிரதேசத்திலிருந்து சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிவாரண நடவடிக்கைகள் முடக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில் இந்த அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளைத் தொடர்ந்து யார் முன்னெடுப்பது என்பது குறித்த அறிவித்தல் ஒன்றும் அரசாங்கத்திடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை. இடம் பெயர்ந்தவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களால் கூடாரம் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. உதாரணமாக உலக உணவுத் திட்டம் அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களைத் தானே கொண்டு வந்து விநியோகித்தது. அரச சார்பற் நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றை தாமே செய்ய வேண்டியுள்ளதால் இது தொடர்பான அறிவித்தலை நாம் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பதாக கூறினார்.
ஆனால் இதுவரை அவ்வாறான அறிவித்தல் எதுவும் தமக்குக்
கிடைக்கப் பெறவில்லை. நிவாரண நடவடிக்கைகளைப் பொறுத்தளவில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்குப்
பெருமளவில் கைகொடுத்து உதவியுள்ளன. இதேவேளை கிளிநொச்சி நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு பாடசாலைகளை காலை மாலை என நடாத்தி வருவதாக கூறிய அவர் எனினும் தொடர் ஷெல் தாக்குதலால் பொன்நகர், கோணாவில், மலையாளபுரம், கோணாவில், செல்வா நகர், ஊற்றுக் குளம், புதுமுறிப்பு ஆகிய இடங்களிலுள்ள மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.