நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் முயற்சி!

19.09.2008.

புதுதில்லி :

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் முயற்சியாக சந்திராயன் திட்டம் செப்-18 அன்று தொடங்கப்பட்டது.

 கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்கலங்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வணிக ரீதியில் செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சி இஸ்ரோவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றியது. அதே போன்று பிஎஸ்எல்வி சி7 ராக்கெட் மூலம் 4 சாட்டிலைட்கள் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த நிலையில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்திற்கு சந்திராயன் என்று இஸ்ரோ பெயர் சூட்டியது. இதன்படி 1400 கிலோ எடை கொண்ட சந்திராயன் விண்கலம் 316 டன் எடை கொண்ட பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுவதற்கான துவக்க விழா செப்-18 அன் நடைபெற்றது. இந்த விண்கலமானது நிலவுக்கு அருகில் சென்று அதனுடைய புறச் சூழல்கள், நில அமைப்புகள், தட்பவெப்பம் ஆகியவை குறித்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

மேலும் அதில் பொருத்தப்பட்ட 29 கிலோ எடை கொண்ட சிறிய வாகனம் ஒன்று நிலவில் சோதனை ஓட்டம் நடத்தும். இதற்கிடையில் சந்திராயன் 2 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.425 கோடி ஆகும். இத்தகவலை மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பி.ஆர்.தாஷ் முன்ஷி தெரிவித்துள்ளார்.