இன்று,இலங்கையின் அரசியல் வாழ்வானது மிகக் கொடூராமானவொரு ஆளும் வர்க்கக் கும்பலால் – சட்டத்துக்குப் புறம்பான கட்சி ஆதிக்கத்தால் வலுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மகிந்த தலைமையிலான அரை இராணுவ ஆட்சிக்குள் வீழ்த்தப்பட்ட இலங்கை அரசானதைக் குறித்துப் பலர் புரிய முற்படும்போது இலங்கையின் நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி ஆட்சி முறைதாம் இதற்குக் காரணமென்கின்றனர். அத்தகையவர்களிலொருவர் இலங்கையின் மதபீடத் தலைவர்களிலொருவரான வண. சோபித தேரர்.இன்றிவர் பின்னால் அணிவகுக்க முனையும் UNP க் கட்சியும் ,அவர்களது மேற்குலகப் பங்காளிகளுமாகப் பின்னும் அரசியலானது இலங்கையில் சட்டவாத அரசை மீள நிறுவிக்கொள்ளுமா?; பரந்துபட்ட மக்களது உரிமைகளைப் பேணிக்கொள்ளத்தக்வொரு இலங்கையை இவர்கள் உருவாக்கும் நோக்குக்குட்பட்டவர்களா?.
இது குறித்தவொரு தேடுதல் அவசியமானதகப்படுகிறது இன்று.
இருந்தும் ,பரவலாகக் கருத்துக்களை முன்வைப்பதும் அதையொட்டிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்துவதும் எமது நோக்கில் ஒன்று.இன்றைய கட்சி அரசியலையும் ,அதுசார்ந்த ஆதிக்கத்தையும் மதிப்பீடு செய்வது-வரையறுத்துக்கொள்வது அவசியமே!
கட்சி ஆதிக்கமும்,சட்டவாதமற்ற அரசும்,தமிழ் அரசியலும்:
புலிவழிச் செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் “தமிழீழ”ப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைச் செல்வ-மற்றும் இயற்கை-மனித வளச் சுரண்டலிலிருந்து தகவமைப்பதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.
இன்றைய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும் போலவே ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் …
இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில் மேலும், இராணுவவாதம் மற்றும் கட்சி-இயக்க ஆதிக்கமானது பாசிசப் போக்கில் , வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.
இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.
இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும். இதைச் சற்றுப் பொருளாதாரவாதத்துக்குட்படுத்திப் பார்ப்போமானால் உலகு தழுவிய கட்சியாதிக்க அரசுகளானவை -ஆளுங் கட்சியாக வருபவை மட்டுமல்ல இன்றைக்கு அனைத்துத் தரப்புமே நிதிமோசடி -வரி ஏய்ப்பு;வளத்திருட்டெனக் கொண்டே நிதியைத் திரட்டும் சட்டத்தை இயற்றுகின்றன.
இது ஏகாதிபத்திய அரசுகளுக்கும் இவற்றைச் சார்ந்த மூன்றாமுலகத் தரகு முதலாளிய அரசுகளுக்குமுரிய பண்பாகவே இவை இருக்கின்றன.இதுள் அநியாயம் என்னவென்றால் இவைகள் தமது அரசைச் சட்டத்துக்குட்பட்ட அரசுகளாகவும் ,இவை சனநாயகப் பண்புடையதாகவும் சட்ட பூர்வமாகக் கோரிக்கொள்வதாகும்.
இலங்கையில் ,கட்சித் தலைவர்கள் -அரச தலைவர்களென வரும் பதவிகளனைத்தும் குவிக்கப்பட்ட நிதிகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை வளங்குவதில் பெரும் பகுதி மக்களது அனைத்து உரிமைகளையும் காலிற் போட்டு மிதிக்கும் சந்தர்ப்பமே தமது நிதியைப் பாதுகாக்க இன்னொரு அடியாளாக வரையறுக்கப்படும் பாதுகாப்புப் படைகள் ,அரச அதிகாரத்துள்ளும் ;அதன் வன்முறை யந்திரத்துள்ளுங் கூடவொரு வியாபார வளங்கொண்ட தலைமையை உருவாக்கியுள்ளது.இத்தகைய அரசியல் நிலைமையை நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி முறைக்குள் திணித்து உரையாடுதல் சாத்தியப்படுமா?
இது அமைப்பின் பிரச்சனை.
பொருளாதார அடிமட்டத்தின் பிரச்சனை.நிறைவேற்று அதிகாரமென்பது இதிலிருந்துதாம் எழுவது.இது குறித்து பிரான்சு வரலாற்று நிகழ்வின் புள்ளியைப் பார்ப்போம் .கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர் Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும்,கடந்த முள்ளி வாய்க்கால் யுத்தமானது இந்திய-இலங்கை அரசுகளது கூட்டு வன்னிப் படுகொலையாக மாறியது!இதுவே ஒரு கட்டத்தில் தமிழினப் படுகொலை நெட்டூரமாக எழுந்தது.
இதை எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.இத்தகைய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருப்பது பொருளாதார நலன்கள் மட்டுமல்ல.இனவாத – இனக் குரோதத்துக் குட்பட்ட குவிப்புறுதியூக்கம் என்பதாகும்.இது இலங்கைக் கட்சிகளது ஆதிக்கமாகப் பொருளாதாரத்தைக் குவித்து வைத்து இயக்கப்படுகிறது.இதற்கான சட்ட அங்கீகாரம் சட்டத்துக்குட்பட்ட அரசாக வெளிப்படுகிறது.
இது, அனைத்துச் ” சிவில் சந்தைப் பொருளாதாரத்தையுங் ” கூட இராணுவப் பொருளாதார போக்குள் அமுக்கி, இலங்கையில் பாரிய வர்த்தகத்தை இலங்கை அரச யந்திரமே கையகப்படுத்தியுள்ளது.இதைப் பழைய பாணி அரச முதலாளித்துவமாகப் புரியப்படாது.சுய முரண்பாட்டாலெழாத முதலாளியத்துள் அரச முதலாளியமாகவிருந்த இலங்கை , சமீபகாலத்துப் பல்தேசிய மற்றும் நவ தாரளவாதப்போக்குகளால் [Response to Neoliberalism and Globalization ]சில குடும்பங்களது கையில் அந்த அரச முதலாளியத்தை வீழ்த்தியுள்ளதென்பதைப் புரியந் தருணங்களையே நாம் விவாதிக்க வேண்டும் என்கிறேன்.
இதுவேதாம் ,கட்சித் தலைவர்கள்; மந்திரிகள்; இராணுவத்தளபதிகள் என ஒவ்வொருவரையும் சொத்துடமைவாதிகளாக்கிய பின் அவர்களே ஆளும் வர்க்கமாகச் சட்டவாத அரசுக்குள் நேரடியான அதிகாரத்தையும்; ஒடுக்குமுறையையும் உழைப்பவர்கள்மீது திணிக்கின்றனர்.இந்த முரண்பாட்டைக் குறித்து விவாதித்தாகவேண்டும்.
இதைவிட்ட அனைத்தும், அதாவது “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையைப் பிடித்த சனியன் விடுபட முடியுமென்பது சுத்த மோசடியான விவாதம்.இது, புதிய பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும் ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல அது சட்டவாத அரசுள் வகிக்குப் பாத்திரத்தையும் மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.
UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில் மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.
இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.இங்கு, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதற்கு மேலாகக் கண்டடையவேண்டிய இன்றைய இலங்கைபோன்ற தேசங்களது நிதி திரட்சி மற்றும் அத்தகைய நிதியைக்கொண்டியக்கும் சக்தி எவைகள் என்பதைக்குறித்த புரிதல் மிக அவசியமாகிறது!
தமக்குள் ஒன்றுபட முடியாத இனக் குழுக்களோடும், சிதிறிய தலைமைகளோடும் முட்டிமோதும் மூன்றாம்மண்டலத் தேசங்களுக்கேகுரிய பண்போடு திரண்ட நிதிகள் கட்சித்தலைவர்கள் – மந்திரிகளது குடும்பச் சொத்தாக மாறுவதற்கான சட்ட நியாயங்களைக் குறித்து நோக்குவது அவசியமானதாகும்.நவதாரளவாதப் பொருளாதார நகர்வுக்கும் இலங்கை அரசுக்கும் 1948 ஆம் ஆண்டிலிருந்தே பாரிய தொடர்புகள் இருக்கிறது.யூ.என்.பீ. கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நிரந்தரமானவொரு மென்பர் சீட்டை மெளன் பெலாரின் சொசைட்டி [Mont Pelerin Society ]வழங்கிவருவதை இன்றும் நாம் காணமுடியும்.இங்கு,வகைமாதிரியாக வளர்ந்துவிட்ட பொருதார ஆதிக்கமானது முழுக்க முழுக்க மக்களது வரிப்பணத்தையும் ,தேசத்தின் வளங்களை அந்நியத் தேசங்களோடு கொள்ளையடிப்பதையுமே ஆளும் கட்சிக்கும் அதன் தலைமைக்குமான பாத்தியமாகச் சட்டவரம்புகள் வளைக்கப்பட்டுள்ளன.இதுவேதாம் இலங்கைக்குமட்டுமல்ல இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் உண்மையாக இருக்கிறது.தமிழ் நாட்டையே எடுங்கள் அங்கு என்ன வாழ்கிறது?எதேச்சதிகாரமும் கட்சித் தலைவரையும் கண்முன் நிறுத்துங்கள்.ஜெயலதிதாவின் அதிகார -ஆவணவுச்சம் மகிந்தா குழுவையே விஞ்சும் அளவுக்கு இல்லையா?
ஆக, குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிக்கத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும், செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி [CDU/SPD]என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி.[ARD] மற்றும் சற்.டி.எப் [ZDF]ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.[SPD]யையும் மற்றது சி.டி.யூ.[ CDU]வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.எனவே, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முநைதாம் இவற்றுக்குக் காரணமென்பதும் ;ழுமையான புரிதலில்லை.பிரஞ்சு தேசத்தை எடுங்கள் ,அத் தேசத்தின் அதிபருக்கு உலகிலுள்ள எந்தத் தலைவருக்குமற்ற நிறைவேற்று அதிகாரமுண்டு.இன்றைய நிலவரப்படி,ஆசிய-ஐரோப்பிய மூலதன முரண்பாடுகள் ஆட்சி மாற்றத்தைக்கோரும் உலகத் தேச நடப்புள் இலங்கையும் அதன் தர்க்கத்துள்,வியூகத்துள் உள் நுழைந்திருப்பதை நாம் இந்த மதத் தலைவரது கருத்துக்களிலிருந்து கவனிக்கமுடியும்.இன்றுள்ள உலக நிலவரங்களைத் தொடர்ந்து கவனித்தால் இத்தகைய நிலவரத்துள் இலங்கையில் மேற்குலகத்துக்கேற்பவொரு அரசியல்வரை படம் அவசியமாகவிருக்கிறது!
மேற்குலக – ஆசிய மூலதனமும் அதன் பங்காளிகளுமாக இலங்கைக்குள் தொடரும் அதே மேற்குலகத் தாரளவாதப் பொருளாதாரப் போக்குள் முற்றுமுழுதுமாக இலங்கைக்குள் ஆதிகப்பரீட்சார்த்தமாகக் கட்சிகளது பின்னாள் மக்களைத் திரட்டுமொரு வியூகத்தைக் கொண்டிருக்கிறது.அங்கே,இத்தகைய உரையாடல்கள் ஏதோவொரு தர்கத்துள் சிக்குப்பட்டு மக்கள் நலனாக வெளிப்படுத்தும் அரசியலானது அரைவேக்காட்டுத்தனமாகும்.ஆழ்ந்து யோசித்தால், இலங்கையில் கட்சிகள்,தலைவர்கள்,மடாதிபதிகள்தம் வரலாறு பரந்துபட்ட மக்களுக்கு எதிரானதாகவே இதுவரை இருக்கிறது!
தமிழ்த் தலைமைகளும், பெரும்பான்மைச் சமுதாயத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களும்:
பொதுவாகத் தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி “அடங்காத் தமிழன்” சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னானவின்றுங்கூட நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது- மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்ட இத்தொடர் நிகழ்வில், தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?எனினும்,இன்றைய வணக்கத்துக்குரிய சோபித தேரர்தம் அரசியல் நகர்வு-கோரிக்கைகளை வெறுமனவேயொரு “பெரும்பான்மை இனத்துள் இருந்து ஒரு முற்போக்குக் குரல்” என்றும்,தனிப்பட்ட நல்ல மனிதரது கோரிக்கையென்றும் ,அரசியல் ஜனநாயகச் செயற்பாடகக் குறுக்விட முடியுமா?
அவரது கோரிக்கையில் எது முற்போக்கானது?அனைத்து அதிகாரமுடைய ஜனாதிபதிப்பதவியை ஒழித்தலா அன்றி மகிந்தாவுக்குச் சர்வேதச சட்ட எல்லையில் வைத்துத் தண்டித்தலா?தமிழ்பேசும் மக்களது -இலங்கைச் சிறுபான்மை இனங்களது மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது பொருளாதார மற்றும் நல்வாழ்வுக்கான அடிபடைகள் குறித்த நோக்கானதா? எது முற்போக்கானது?தீடீர் திடீரெனவெழும் தனிப்பட்டவர்களதும்,கட்சித் தலைவர்களதும்”நல்ல மனது”க் கோரிக்களை வெறுமனவே நம்பிக்கொள்ளும் பற்பல சந்தர்ப்பத்தைத்தாம் இந்தப் பொருளாதாரவாழ்வில் உலகம் பூராகவுமுள்ள மக்கள் நம்பிக்கொள்கின்றனர்.
“பாதிக்கப்பட்ட மன நிலையிலிருந்து” தமிழர்கள், பெரும்பான்மை இனத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதென்பதைக் குறித்து நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்திருக்கிறோமோ?[இது இடதுசாரிகளது கேள்வி.]
இலங்கையின் ஆளும் வர்க்கமானது தனது எஜமானர்களான காலனித்துவக் கொடுங்கோன்மை அரசுகள்-ஏகாதிபத்தியங்கள்-பிராந்திய வல்லரசுகளோடிணைந்து பாதிப்புக்குள்ளாக்கிய இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் வாழ்வைக் குறித்து என்ன வகையான மதிப்பீடுகளோடு நாம் பெரும் பான்மை இனத்தின் முற்போக்குக் குரல்களை அணுகும்படி-அரவணைக்கும்படி கோருகிறோம்?
இலங்கையில் அனைத்து ஓட்டுக்கட்சிகளது -இயக்கங்களதும் அரசியல் வரலாறானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே இன்றும் நகர்கிறது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்புங்கூட இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.இதை மிகத் தறுவாகக் கடைப்பிடிக்கும் இலங்கையை மாறி,மாறி ஆளும் கட்சிகளானவை இதுவரை இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த முடிவுக்கும் வர முடியாதிருப்பதன் பின்னணி என்ன?வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை மனவியல்புக்கேற்ப அரசியல் -கட்சி நகர்வுகள் பெரும்பாலும் இலங்கை ஆளும் வர்க்க நலனின் பொருட்டென்பதற்கப்பால் நம்மை அண்டிய தேசத்தினதும் அரசியல் ஸ்த்திரத்தன்மை மற்றும் பூகோள அரசியல் நலன்களைப் பின்னி வைத்திருப்பதென்பதில் இன்றைய வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?
இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருந்தது.அதன் விளைவு முள்ளிவாய்க்காலில் எந்த அரசியலறமுமற்ற கொடும் யுத்தத்துள் தமிழ் மக்களைச் சிக்கவைத்த சிங்கள அரசு முற்றும் பாசிசப் புலிகளது அரசியலானது எவர்களது நலன்சார்ந்திருந்தது-இப்போது அதன் மிச்சசொச்சங்களதும் அரசியலது தெரிவு எது?அந்நிய நலன்களது தெரிவாக இது இருக்கவில்லையா?பிளவுண்ட உலக நிதி மூலதனங்களது பிடியுள் சிக்குப்பட்ட இலங்கையினது வரலாறாக இவை இருக்கும்போது வண.பிதா சோபித தேரர்தம் கருத்துக்களைப் பரந்துபட்ட மக்களது தெரிவுகளாக வரையறுக்கும் அவசரம் அரசியற் தற்கொலைக்கொப்பானது.இத்தகைய தற்கொலையைத் தமிழ்பேசுபவர்கள் ஏலவே புலிகளை ஆதரித்தபடி செய்துவிட்டனர்.
இன்றைய பிளவுண்ட உலக நிதி மூலதனத்துக்கு இலங்கை வேட்டைக்காடாகப் பலப் பரிட்சார்த்த களமாக இருக்கிறது.நேட்டோ[NATO -wirtschaftliche und strategische Interessen ] தலைமையில் தம்மை முன் நிறுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலனானது இருஷ்சிய மற்றும் சீனா ,இந்திய மற்றும் பிறிக்ஸ் கூட்டமைகளும்[BRICS ] கூடவேயான சங்காய் கூட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குள் [The Shanghai Cooperation Organisation ]முட்டிமோதும் தருணங்கள் இலங்கையின் இனப் பிரச்சனையுள் புலிகளை அழித்துபோது கூடவே பல்லாயிரம் அப்பாவி மக்களையும் அழித்தே மோதியது.இது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி, இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும் இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை. இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில்”பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கும் முற்போக்குக் குரல்”முகமூடி அவசியமென்றால் அதையும் செய்யுங்கோ சாமிகளா!.ஆனால், இந்த முற்போக்குக் குரல் நமக்குப் புதில்லை!இவைகளைவிட மிக நேர்த்தியாக லங்கா சமசமாயக் கட்சி மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந்தலைவர்களிடமிருந்தும் இன்றைய வாசு தேவ நாணயக்காரா வரையுமாக நாம் பார்த்தும் -கேட்டும் ஆச்சு!நடந்தது என்ன?
தனிப்பட்டவர்களதோ அன்றி ஒரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்புக்குத் தெரிவுக்கு வெளியிலேதாம் இனப்பிரச்சனைக்கான காரணிகளுண்டு.அது, பாராளுமன்றத்துக்கு வெளியிலேதாம் உண்டு.அதை, அணுகுவதில்தாம் மேற்காணும் நலன்களைக் குறித்து பேச்சு வருகிறது.இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் இருப்புக்கு -நலனுக்குத் தெரிவாகும் அரசியல் என்ன?அது கட்சிகளது புதிய நிதியூகத்துள் மாறிவிட்ட வர்க்க அரசியலது தெரிவுக்குள் இணைவுறும் தருணங்களென்ன?மகிந்தா குடும்பமோ அன்றிப் பட்டார நாயக்க குடும்பமோ இல்லை ரணில் குடும்பமோ வெறும் அரசியல் தலைவர்களில்லை.அவர்களின்று பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களென்பதில் நாம் காணும் அரசியலென்ன-தெரிவென்ன?இவர்களுக்கும்,ஆசிய-ஐரோப்பிய நிதி மூலதனத்துக்குமிடையிலான வர்த்தகவுறுவுகள் எத்தகையானவை?இவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்துதாம் நாம் காணும் இலங்கையின் சட்டவாத அரசின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.இங்கிருந்துதாம் புதிய அணிகளது கூட்டு,அவைகளால் முன் வைக்கப்படும் கோரிக்கைகள்,அவர்கள் மக்களைச் சொல்லி, அணி திரளச் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளும் அரசியல் அமுக்கக் குழு மனப்பாண்மையானது இத்தகைய பின்புலத்தைத் தள்ளி வைத்துவிட்டு அகவிருப்புக்குட்பட்ட தெரிவுகளால் இவைகளை நாம் ஆதரிப்பதில்லை.
நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் :
மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை இடதுசாரிகளெனத் தம்மை வரையறுப்பவர்கள் குறித்துரைக்கின்றனர் நமக்குள்.அது, முதலாளித்துவ சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியம் என்கிறார்னள் ; இந்த நோக்கில் தலையீடு அவசியமென்கிறார்கள்.அத்தைகைய தலையீட்டைச் செய்வதற்காகவேனும் மகிந்தா அரசுக்கெதிரான எந்தச் சக்தியோடும் கூட்டுச் சேரலாமெனவும் பலர் வாதிடுகின்றனர்.
இது சரியானதே.இதை மறுப்பதல்ல எனது நோக்கம்.முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் “இந்த” அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது Regime change என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் “மக்கள்”போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் “எழுச்சி”யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் “மக்கள் திரள்”போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை.
நடைமுறைசார்ந்து இயங்குவதும்;நாம் புலத்தில் உதிரிகளாகத் தத்துவத்துக்குள்க தலை புதைத்து மேலெழுவதும் அவசியமானதுதாம்.நமது நிபந்தனையற்ற ஆதரவு- ஒத்துழைப்புக்கள் -இணைந்த போராட்டங்கள் -மக்களை அணிதிரட்டல்கள் என்பதெல்லாம் தவறாகும் தருணங்களைக் குறித்தும் நாம் தறுவாகப் புரிந்தே ஆகவேண்டும். இதை மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில் சொன்னால் : ” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம் [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ] என்றும் சுட்டிக் காட்டுவேன்.
வணக்கத்துக்குரிய சோபித தேரர் தம் நகர்வு ஒரு அரசியல் திருப்பு முனையாக மேலெழுவதென்பது பரந்தபட்ட மக்களது திரட்சியின் வாயிலாகவே சாத்தியமாகலாம்.அது ருனேசிய -எகிப்திய “எழுச்சிகளை”நமக்கு அறிமுகப்படுத்துமொரு சூழல் இலங்கையிலுண்டு. Professor Sudarshan Seneviratne[University of Peredeniya ] தலைமையில் 2011 ஆம் நடைபெற்ற உரையாடலில் (Peace and Conflict Studies ) “Participating Faculty Members ” கள் கீழ்வருபவர்கள்: Srdja Popovic[ CANVAS], Todd Armstrong, Victoria Brown, Krista Bywater, Lesley Delmenico, Brigittine French, Chris Hunter, Peter Jacobson, Suchi Kapila, Leslie Lyons, Elaine Marzluff, Jenny Michaels, Wayne Moyer, Elizabeth Prevost, Sarah Purcell, Monty Roper, Craig Upright, Timothy Werner, Eliza Willis, Shawn Womack, Mervat Youssef. இதுள் கலந்துகொண்டவர்கள் -பங்காளர்களில் பலர் ஓட்போரது[Otpor!] ஒத்துழைப்புக்குள் இயங்குபவர்கள்.இன்றைய இலங்கையினது ஆட்சி மாற்றம் குறித்து இலங்கை மக்கள் ஆர்வப்படுகிறார்களோ இல்லையோ மேற்குலகமும் அவர்களது அடியாட் படையான Otpor! உம் இலங்கையில் களத்திலுள்ளன.இது மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.இதை நிச்சியம் ஒட்போர் (Otpor!) செய்தே காட்டும்.இந்தச் சூத்திரத்தைப் புரிவதில் தமிழ்பேசும் மக்களுக்கு என்ன சிக்கல் ?இது,சதி நிரம்பிய காலம்.
இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?:
தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.இந்த அரசியல் அமுக்க வியூகத்தத்தாம் சேர்ட்யா போப்போவிச்சும் அவரது எசமானர்களான அமெரிக்காவும் -ஐரோப்பாவும் “The Center for Applied Nonviolent Action and Strategies ” என்கிறார்கள்.இதைக் காந்தியின் பெயரால் மொழி பெயர்த்தும் வைக்கின்றனர்.நான் நினைக்கிறேன் அன்று காலனியவாதிகளுக்கு முன் இந்தியப் புரட்சிகரச் சக்திகளைக் காந்தியடிகளார் காட்டிக்கொடுத்ததுபோலவேதாம் இதையும் நாம் புரிந்தாக வேண்டுமென.
மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது[ ருனெசியா மற்றும் எகிப்தைப் இப்போது பாருங்கள்] சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு “சட்டம்-ஒழுங்கு” ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இதைத்தாம் வண.சோபித தேரரது வெற்றி அல்லது வரவு தரமுனையும்[இதற்கு அப்பாலானவொரு தெரிவை அவருக்குப் பின்னிருக்கும் உந்து சக்திகள் அனுமதிக்குமென எவரும் நம்பிக்கொள்வது அவரவர் அறிவுக்கும் -புரிந்தலுக்கும் உட்பட்டதே!].
இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் குலைப்பதில் மேற்குலகம் மிக வேகமாகவே காரியமாற்றுகிறது.அதற்கேற்பவே மகிந்தா குடும்பத்து கோணங்கித்தனமான அரசியலும் அவர்களுக்கிசைவாகவே [மேற்குலகத்துக்கு]இருக்கிறது!
இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக [ Social space, political field and political position ]இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.இங்கு வண.சோபித தேரது பாத்திரம் என்ன?
இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.இதை வலியுறுத்தியவொரு போராட்டங்கூட மக்களை அண்மித்த அடிப்படையுரிமைகள் சார்ந்த சனநாயகக் கோரிக்கையை முன் தள்ளியே தீரும்.
ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது ,தத்தமது தேசங்களுக்குள்.
இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ் நிலைக்குள்ளிருக்கும் போதே[G.H. Peiris, Sri Lanka: Challenges of the New Millennium (Colombo: Kandy Books, 2006) ] அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகன் ´, நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் த்தேசியவாதக் கயவர்கள் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர்.
அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்படுகிறது.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்த மகிந்தாவை அம்பலப்படுத்திப் பாசிசப் புலிகளை மக்களிடம் இருந்த அந்நியப்படுத்தும் எந்தப்போராட்டம் அல்லது கருத்தைக்கூட இவர்களால் 2009 இல் தெரிவிக்க முடியவில்லை!எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள் அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள் சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை வண.சோபித தேரர் கொண்டிருக்கிறார்? ; இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic) ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது.தேசத்தின் சுயாதிபத்தியம் என்பது மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல! *
- -ப.வி.ஶ்ரீரங்கன்,
வூப்பெற்றால்,
யேர்மனி.
பங்குனி-சித்திரை 2014