யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர் மீது இன்று (29ம் திகதி, வெள்ளிக்கிழமை) மிலேச்சத்தனமான தாக்குதலொன்று நடத்தப்பட்டிருக்கிறது.
இத் தாக்குதலில் காயமடைந்துள்ள பத்திரிகையாசிரியர் ஞானலிங்கம் குகநாதன் தற்போது யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 7 மணியளவில் யாழ், நாவலர் வீதியில் சென்றுகொண்டிருந்த போதே இனங்காணப்படாத நபர்களால் அவர் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார். இச் சம்பவமானது உதயன் பத்திரிகை அலுவலகத்திலிருந்து 200 மீற்றர் தூரத்திலேயே நடைபெற்றுள்ளதோடு முகமூடி அணிந்த இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பத்திரிகை ஆசிரியர் மீது இத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான பாதிக்கப்பட்டவர் தற்போது யாழ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் நடத்தப்படவிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.