நாளை இந்திய குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும் இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நாளை டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற இருக்கிறது.
சென்னையில் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டிராக்டர் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுப்பது என முடிவு செய்துள்ளார்கள்.
“மக்களுக்கு எதிரான இச்சட்டத்தை தமிழக அரசு சத்தமில்லாமல் மவுனமாக ஆதரித்து வருகிறது. இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என்கிறார் விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன்.”டெல்லியில் நடப்பது போல தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணி நடத்தப்படும். குறைந்தது 300 முதல் இரண்டாயிரம் பேர் வரை டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார்கள்” என பி.ஆர். பாண்டியன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
”எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, அவரிடம் வேளாண் சட்டத்திற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என மனு கொடுக்கும் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும், அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாவதில்லை. டெல்லியில் நடப்பது போலவே, டிராக்டர் பேரணியாக சென்று அரசிடம் எங்கள் எதிர்ப்பை வலியுறுத்தவிருக்கிறோம். பல இடங்களில் அனுமதி மறுத்திருக்கிறார்கள். சென்னையில் அனுமதி தரவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு போன்ற சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் போராட்டம் நடக்கும். பிற மாவட்டங்களில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடி போராட்டத்தில் இறங்குகிறார்கள்,”என்றார் அய்யாக்கண்ணு.
டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுக்க காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.