இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கைகள் இருபது, முப்பதுகளிலேயே செத்து விடுகின்றன. அதன் பிறகு சின்னச்சின்ன சந்தோஷங்களுக்காக ஒரு வாழ்க்கை, செத்து விடுவோமோ எனும் பயத்தில் துரத்தும் நாயைப் பார்த்தபடி ஓடுவது போலொரு வாழ்க்கை.
நுண்ணுணர்வு கொண்ட பல கலைஞர்கள் குடித்தும், கஞ்சா அடித்துமே சீக்கிரத்தில் சாவது இதனால் தான்.
இன்னொரு விசயம் இந்த இருத்தலின் ஒவ்வொரு நொடியும் மகத்தானது, இனிதானது என்பது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது என நினைக்கிறேன். பெரும் கனவுகள், நம்பிக்கைகள் இந்த வாழ்க்கைக்கு அவசியம். அதனால் தான் யாராவது இறந்தால் என் மனம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. என்னையும் கூட்டிப் போயிருக்கலாமே நீ எனத் தோன்றுகிறது.
அண்மையில் பிரியத்துக்குரிய கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமான போதும் அப்படியே தோன்றியது. இப்போது ஒரு இளம் பத்திரிகையாளர் தற்கொலை பண்ணிக்கொண்டார் எனத் தெரிய வந்த போதும் அப்படியே தோன்றுகிறது. (இளைஞர்களும் இந்த செத்துப் போன வாழ்வில் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.)
அடுத்த சில ஆண்டுகளில் எனக்கு ஒரு மாரடைப்பு வந்து முதல் அழைப்பிலேயே போய் விட்டால் நிம்மதியாக உணர்வேன். இல்லாவிட்டால் இந்த மொழிக்கு பணியாற்றுவது என் கடமை என நம்பி, இன்னும் ஒரு இருபதாண்டுகள் எழுதும் சுகத்துக்காக மட்டும் இருப்பேன். அப்படி இருப்பது ஒரு துன்பியல் – நியாயமாக வாழும் சுகத்துக்காக, எதிர்காலத்தின் சாத்தியங்களுக்காக வாழ வேண்டும். எழுத்தென்பது வாழ்வின் ஒரு பகுதி தானே, அது வாழ்வு அல்லவே.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு போரிட்டு எதிரிகளை அழிக்கும் அந்த மகத்தான வாய்ப்பு அவர்களுடைய வயதான காலத்திலேயே வந்தது எனப் படித்திருக்கிறேன். யுதிஷ்டிரருக்கு அப்போது வயது 91, பாணடவர்களிலேயே இளைஞருக்கு வயது 88. அரைமனத்துடன் போரிட்டு சாம்ராஜயத்தைப் பெற்று பின்னர் ஜனங்களே இல்லாத அனாதையான ஒரு தேசத்தை அரைமனத்துடன் ஆண்டார்கள்.
நாற்பதுக்கு மேல் வாழ்கிறவர்களின் கதி அனேகமாக அது தான். எல்லாம் அரைமனதாக, அரை-மகிழ்ச்சியுடன், அரை-துக்கத்துடன், அரை-ஆர்வத்துடன் நடந்தாக வேண்டும். பாதி குடித்து ஆறிப் போன காபியைப் போல. ஈ விழுந்தாலாவது கொட்டி விடலாம் என யோசித்தால் எழவு ஈயும் விழாது.