16.08.2008.
தமிழர்களின் ஆதரவு இல்லாததால் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசால் வெற்றிபெற முடியாது என்றும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களுக்கு கூடிய அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பாக இலங்கை அரசின் உண்மையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாராயணனின் இந்த கருத்துகளோடு தாங்கள் ஒத்து நிற்கிறார்கள் என்றும் இக்கருத்துகளையே தாமும் தெரிவித்து வருகிறார்கள் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ. தே. கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகரவே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
இலங்கை அரசால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யுத்தம் தொடர்பாக இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்களின் ஆதரவில்லாது இந்த யுத்தத்தில் அரசால் வெல்ல முடியாது என்றும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுக்கு அதிகூடிய அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இலங்கை பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இது தான். இந்த நிலைப்பாட்டைத்தான் நாமும் கொண்டுள்ளோம். ஆனால் இந்த நிலைப்பாட்டை நாம் தெரிவித்த போது இந்த அரசு எம்மை தேசத்துரோகிகளாக வர்ணிக்கிறது.
இப்போது இதே நிலைப்பாட்டை இந்தியா தெரிவித்திருப்பது தொடர்பாக அரசு என்ன சொல்லப் போகிறது. இந்தியாவையும் இலங்கைக்குத் துரோகம் செய்யும் “துரோகி நாடு’ என்று இலங்கை அரசு சொல்லப்போகிறதா?
இந்தியா சொல்லுகின்ற அந்த அதிகாரப் பகிர்வை வழங்க அரசுடன் இணைந்திருக்கும் ஜாதிக ஹெல உறுமயவோ அல்லது அரசுடன் இப்போது முட்டி மோதிக்கொண்டு நிற்கும் ஜே.வி.பியோ இணங்குமா?
இக்கட்சிகள் நிச்சயம் அதற்கு இணங்கா. இக்கட்சிகள் தான் அரசை யுத்தத்திற்குத் தள்ளி விடுகின்றன. யுத்த மனநிலையில் இருந்து அரசு விடுபட இக்கட்சிகள் அனுமதிக்கா.
இருப்பினும், நாராயணன் தெரிவித்திருக்கும் இக்கருத்துகள் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவென்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்க வேண்டும் என்றார். (சி)