நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய கல்யாண சுந்தரம் திமுகவில் இருந்து உருவான அண்ணான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.
2009- ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் உருவான கட்சி நாம் தமிழர். கணிசமான தமிழக இளைஞர்களை தமிழ் இனவாத அரசியலை நோக்கி திருப்பியதில் நாம் தமிழர் வெற்றி பெற்றுள்ளது. கருத்தியல் ரீதியாக திராவிட இயக்க வெறுப்பு, தமிழர் அல்லாதோர் வெறுப்பு என்ற தளத்தில் இளையோரை திரட்டி வரும் சீமான் இந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
பாஜகவை பிரதான எதிரியாகக் கொள்ளாமல் திமுகவை பிரதான எதிரியாக பறைசாற்றும் சீமான். ஆளும் அதிமுகவின் ஆதரவாளராக இருக்கிறார். இவர் கட்சியில் மாநில இளைஞரணி பொருப்பாளராக இருந்தவர் கல்யாண சுந்தரம். ஐய்ரோப்பிய நாடுகளில் பயணம் செய்து ஈழத்தமிழர்களிடையே தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர் கல்யாணசுந்தரம்.
நாம் தமிழர் கட்சி தமிழக மக்களிடம் பணி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் ஈழத்தமிழர்கள் டாலர், பவுண்ட், யூரோவில் கொடுக்கும் நிதியை வசூத்து கட்சி நடத்துவதாக குற்றச்சாட்டும் உள்ளது. கல்யாணசுந்தரம் ஏன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்பதை சீமான் தெளிவாகச் சொல்லாத நிலையில், சுமார் 30 லட்ச ரூபாய் வரை கல்யாண சுந்தரம் ஈழ மக்கள் கொடுத்த நிதியை மோசடி செய்து விட்டதாக முகநூல் போன்ற வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினரே எழுதிய நிலையில், கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைகிறார்.
இதுவரை திராவிட இயக்க வெறுப்பை வைத்து பிரச்சாரம் செய்து வந்த கல்யாண சுந்தரம் திராவிட இயக்கமான திமுகவில் இருந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இன்று இணைந்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் அதிமுகவினரே அதிருப்தியில் உள்ளார்கள். அதிமுக பாஜக கூட்டணி காரணமாக பல அதிமுகவினரே திமுக பக்கம் சாய்ந்து வரும் நிலையில் திராவிட இயக்க வெறுப்பையே மூலதனமாகக் கொண்டு பேசி வந்த கல்யாண சுந்தரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
சீமானும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்தான் என்ற போதும் கொள்கையில் குன்றுமணி கூட குறையாதவர்கள் என மார்த்தட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கல்யாணசுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து இனி தான் விரும்பும் தமிழ் தேசியத்தை கட்டமைப்பார் என்று முகநூலில் கிண்டல் செய்யப்படுகிறார்.