19.12.2008.
நான்கு ஆண்டுகளில் ஒரு நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் நபர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது என்பது அசாதாரணமான செய்தியாகத்தான் இருக்க முடியும். ஆனால் இத்தகைய செய்தி ஒன்றும் கனவுச்செய்தியல்ல. உண்மையிலேயே வெனிசுலா இந்தச் சாதனையைச் செய்துள்ளது. 2003 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி வெனிசுலாவில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 54 சதவீதமாக இருந்திருக்கிறது. இந்த சதவீதம் 2007 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி 27 சதவீதமாகக் குறைந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்தி 87 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சாவேஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டில், மிகவும் வறிய நிலையில் 43 சதவீதம் பேர் இருந்தார்கள். அந்த எண்ணிக்கையை சாவேசின் மக்கள் நலக் கொள்கைகள் வெறும் ஒன்பது சதவீதமாகக் குறைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு வறுமை ஒழிப்பில் வெனிசுலா சாதித்துள்ளது. இன்னும் வறுமைக்கோட்டைத் தாண்டாதவர்களுக்கு போதிய உணவு மானியம் அளிக்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பு ஒரு பிரச்சனையாக இருந்தாலும் மக்களின் துயரங்களைத் தீர்க்க அரசு இருக்கிறது என்ற எண்ணம் 1998க்குப் பிறகுதான் மக்களிடம் உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் உயர்ந்ததுதான் இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த உதவியது என்று கூறப்பட்டாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்ததற்கு அது மட்டுமே காரணமல்ல. 87 சதவீத வளர்ச்சியில் எண்ணெய்த்துறையின் வளர்ச்சி ஒரு சிறிய பகுதிதான் என்று மேற்கத்திய பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
விவசாயம், தொழில்துறை ஆகியவற்றிலும் ஏராளமான முதலீடுகள் வந்துள்ளன. உணவுப்பொருட்களை இறக்குமதி செய்தே பழக்கப்பட்ட வெனிசுலா, தன்னிறைவுக்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது. விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு, அவை நல்ல பலன்களையும் அளித்து வருகிறது.
அரசின் வருமானத்தை பெரும்பான்மை மக்களுக்கும் செலவிடுவது என்ற சாவேசின் கொள்கைகள் வேலை வாய்ப்பை பெருக்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை, 2007ல் ஏழு சதவீதமாகக் குறைந்துவிட்டது. சமீப காலங்களில் அமெரிக்கா தனது நாட்டில் உருவாக்கிய வேலை வாய்ப்புகளை விட மூன்று மடங்கு அதிகமான வாய்ப்புகளை வெனிசுலா உருவாக்கியுள்ளது. வேலை வாய்ப்பு அதிகரித்ததால் மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட தேவையால் இயல்பாகவே மற்ற துறைகளிலும் உற்பத்தி கூடியது.
சமூக நலப்பணிகளைப் பொறுத்தவரை, பெரும் பணக்காரர்களின் பிடியில் இருந்த வெனிசுலாவுக்கும், தற்போது இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் வெனிசுலாவுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஆரம்ப சுகாதாரத்திற்கான மருத்துவர்களின் எண்ணிக்கை 1,628 என்ற நிலையில்தான் 1998 ஆம் ஆண்டில் இருந்தது.
தற்போது சுகாதாரத்துறையில் அரசின் முதலீடு அதிகரித்துள்ளதால் இந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, மருத்துவத்துறையில் பெரும் சாதனைகள் படைத்துள்ள கியூபாவின் உதவியோடு சிறப்பு மருத்துவமனைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிச.2002 முதல் பிப்.2003 வரையில் நாட்டின் முதலாளிகள் நடத்திய வேலை நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பாதிப்பையும் மீறி வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சி இருந்தது. அந்த வேலை நிறுத்தத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில 24 சதவீத வீழ்ச்சி இருந்தது. இந்த வேலை நிறுத்தம் நடந்தபோது லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும்கூட வெனிசுலாவுக்கு பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. இந்த வீழ்ச்சியையும் தாண்டி வளர்ச்சியடைந்ததால் அர்ஜெண்டினா, பிரேசில் போன்ற நாடுகளிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.
இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும், சோசலிசமே எங்கள் இலக்கு என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் அறிவித்துள்ளார். அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள்.