சிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவற்துறை தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நாளையதினம் மேடையேற்ற இருந்த காத்தவராயன் நாட்டுக் கூத்து மற்றும் பண்டார வன்னியன் தென் மோடி நாட்டுக் கூத்து ஆகியவற்றை நடத்தக் கூடாதென இன்று இரவு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கலைஞர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் இத்தகைய நாடகங்களை நடத்தக் கூடாதென்று பொலிஸார் விடுத்துள்ள அச்சுறுத்தலுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விந்தன் கனகரத்தினம் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 27ம் திகதி நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள சிவராத்திரியை முன்னிட்டு தம்பாட்டி காந்திஜி மன்றத்தினால் தமிழர்களின் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்கள் அரங்கெற்றப்பட இருந்தது.
இதற்காக பயிற்சிகளில் அந்தப் பிரதேச கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அங்கு சென்ற பொலிஸார் நாடகங்கள் பழகிக் கொண்டிருந்த கலைஞர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
அத்தோடு இந்த நாடகம் அரங்கெற்றக் கூடாதென்றும் அச்சுறுத்தியுள்ளனர். இதே வேளை இந்த நாடகங்கள் புலிகள் சார்பானதாக இருக்கின்றதாகவும், இவ்வாறான நாடகங்களை இங்கு மேடையேற்ற முடியாதென்றும் கடுமையான முறையில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் என்னுடன் தொடர்பு கொண்டு நிலைமைகள் தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தனர். தமிழ் மக்களின் கலாசார பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் இது போன்ற கலை நிகழ்வுகளை அச்சுறுத்தி தடுத்து நிறுத்தும் பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை.
இவை தமிழர்களின் பாரம்பரிய கிராமியக் கலாச்சார வடிவங்கள், இனப்ப்படுகொலை அரச இயந்திரம் கலை கலாச்சாரத்திலும் தனது ஒடுக்குமுறையைத் தொடர்கிறது. இதற்கு எதிராகக் கலை புரட்சியின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். தென்னிந்திய சினிமாக் கூத்துக்களுக்குள் மூழ்கிப் போவதை நிறுத்தி பாரம்பரியக் கலை கலாச்சாரங்களை மக்கள் சார்ந்தாக வளர்த்தெடுக்க வேண்டும்.