நாடளாவிய ரீதியில் 3 இலட்சம் போலி வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரம் 21,700 போலி வாக்குச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தலுக்கான பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.தற்போது ஏனைய 3 இலட்சம் போலி வாக்குச் சீட்டுகளும் எங்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என கண்டறிவதற்கான முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, புத்தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் 21,700 போலி வாக்குச் சீட்டுகள் நிரப்பப்பட்ட இரு வாக்குப் பெட்டிகளை பொலிஸார் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிறிதொரு செய்தியில், ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடையப் போவதனை உணர்ந்து கொண்ட அரசாங்கம் கொழும்பிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு கனரக வாகனம் ஒன்றில் வாக்குப் பெட்டிகளையும் போலி வாக்காளர் அட்டைகளையும் அனுப்பி வைத்துள்ளதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
போலியான ஒரு வெற்றியைப் பெறும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கனரக வாகனம் ஒன்றில் கொழும்பிலிருந்து புறநகர்ப் பகுதிக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும் தகவல்கள் பொலிஸ் அதிகாரி ஒருவரிடமிருந்தே எனக்குக் கிடைத்தன.
இதேபோன்று போலி அடையாள அட்டைகளை தயாரிக்கும் வகையில் அடையாள அட்டைகள் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றையும் கொழும்பிலிருந்து புறநகர்ப் பகுதிக்கு அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நாடு பூராவும் 10 லட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் தபாலங்களில் தேங்கிக் கிடப்பதாகவும், குறிப்பாக வடபகுதியில் சுமார் 3 லட்சம் வாக்குச்சீட்டுகள் இன்னும் விநியோகிக்கப்படாமல் கிடக்கும் மர்மம் என்ன?
வடக்குக்கு பொறுப்பான உதவி தபால் மா அதிபர் வி குமாரகுருஹேயின் தகவல்படி, வடக்குக்கான 876.633 வாக்காளர் அட்டைகளில் 566,857 வாக்காளர் அட்டைகள் முல்லைத்தீவு,கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதில் 2 லட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பவ்ரல் அமைப்பின் தகவல்படி, வடக்கில் திருகோணமலையில் 23 வீதமானோரும் மட்டக்களப்பில் 22 வீதமானோரும் அடையாள அட்டைகள் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் 20 வீதமானோரும் மொனராகலையில் 20 வீதமானோரும் அடையாள அட்டைகளின்றி தமது வாக்குகளை செலுத்தமுடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், இடம்பெயர்ந்த மூன்று லட்சம் வடக்கு தமிழர்களில் 42 ஆயிரம் பேர் மாத்திரமே வாக்காளர்களாக பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, நாடளாவிய ரீதியில், அடையாள அட்டைகள் இல்லாமை காரணமாக, பத்து லட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.