தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ஒருவன் தனது குடும்பத்தினரையும் இரண்டு கால்களையும் இழந்திருந்தான். பெண்ணொருவர் தனது குடும்பத்தை இழந்திருந்தார். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குத் திரும்பியிருந்தனர். ஆனால், நீண்ட காலம் அவர்கள் இருக்கவில்லை. “ஏனையவர்கள் போன்று எம்மால் வாழமுடியாது… இவ்வாறு அவர்கள் எழுதிவைத்த தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 345 மாணவர்கள் தமது வாழ்க்கையைக் மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றனர். விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த போது, அவர்கள் மோதலின் இடையே சிக்கியிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு அவர்களால் திரும்பிச் செல்லமுடியவில்லை. அந்த மாணவர்களில் சுமார் 12 பேர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையுடன் கதைத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் அதற்கு வெளியேயும் கடந்த வாரம் அவர்கள் இந்துஸ்தான் டைம்ஸுடன் கதைத்ததாக சுதிர்த்தோ பற்றா நோபிஸ் என்ற நிருபர் அந்தப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
அப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
20072008 காலப்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் இரவு, பகலாக பதுங்கு குழிக்குள் கழித்த நாட்கள், யுத்த விமானம், ஆட்லறி ஷெல்கள் என்பவை யுத்தத்தின் போது கிரமமாக தாக்குதல் நடத்தியமை குடும்ப உறுப்பினர்களை இழந்தமை போன்ற திகில் நிறைந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சில பையன்கள் புலிகளினால் படையணிக்குச் சேர்க்கப்பட்டு 2 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்ட பின் அவர்களுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி கொடுக்கப்பட்டது. புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காக சில பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர். நந்து என்ற பெண் கூறுகையில்;
புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்கு ஒன்றில் திருமணம் செய்திருக்க வேண்டும் அல்லது காயமடைந்திருக்க வேண்டுமென்று தெரிவித்தார். அவருக்கு பிள்ளை ஒன்று உள்ளது. “நாங்கள் மரணத்தின் நிழலில் வாழ்ந்தோம். ஒருநாள் முள்ளிவாய்க்காலில் ஆஸ்பத்திரி மீது ஷெல் வந்து விழுந்தது. நாம் இருந்து பதுங்கு குழிக்கருகே அச்ஷெல் விழுந்தது. 60 க்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்று யசோதா என்ற பெண் கூறினார். கலை பீடத்தைச் சேர்ந்த அந்த மாணவி ஒரு குழந்தையின் தாயாவார்.
2009 மேயில் யுத்தம் முடிவடைந்த பின்னர் மாதக்கணக்காக அரசாங்கத்தின் முகாம்களில் இந்த மாணவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பல்கலைக்கழக அதிகாரிகள் அதன் பின் அவர்களை விடுவித்திருந்தனர். இந்த மாணவர்களில் அநேகமானவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகும். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்த இரண்டு மாவட்டங்களும் இடிபாடுகள் நிறைந்த இடங்களாக மாறிவிட்டன. விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த சந்தேகத்தில் மாணவர் ஒருவர் இராணுவ தடுப்பு முகாமில் இருந்திருக்கிறார். மாதக்கணக்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தலைகீழாகக் கட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பிளாஸ்டிக் பைகளால் தனது தலை கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அதன் பின் ஜோன் என்பவர் மற்றொரு புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு இலங்கைக் கொடியை எவ்வாறு ஏற்றுவது என்பது தொடர்பாக அவருக்குப் படிப்பிக்கப்பட்டது. அவர்கள் எமது மனதை மாற்றவிரும்பினார்கள் என்று அவர் கூறினார். நாதன், அக்பர் போன்ற பல மாணவர்களுக்கு ஷெல் காயங்கள் ஏற்பட்டன. பாரிய சத்தம் அதிகளவு வெளிச்சம் என்பனவற்றால் நாதன் அவ்வப்போது நினைவை இழந்துவிடுகிறார்.
இந்த மாணவர்களின் பலரின் கனவானது வெளிநாட்டிற்குச் சென்று சிறப்பான வாழ்க்கையை நடத்துவதாகும். ஆனால், இழந்த வருடங்களை அவர்களால் மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா?
இரண்டு மூன்று வருடங்களாக தமது கல்வியாண்டுகளை அவர்கள இழந்துவிட்டனர். ஆனால், அவர்கள் கெட்டிக்காரர்கள். கடுமையாகப் படிக்க முயற்சிக்கின்றனர் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம் தெரிவித்தார்.
கடந்த காலத்தைக் கடந்து எதிர்காலத்தை நோக்கி முன்நகர்ந்து சென்றால் அவர்களால் கல்வியில் இழந்த வருடங்களை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
(சகல மாணவர்களின் பெயர்கள் இங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.)