நவநீதம்பிள்ளைக்கு ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தலைவர் பதவி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி திருமதி நவநீதம் பிள்ளையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் பரிந்துரைத்துள்ளார் என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய ஆணையாளர் லூயிஸ் ஆர்பருக்கு பதிலாகவே இவர் நியமிக்கப்படவுள்ளார்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் பணியாற்றி வரும் நவநீதம்பிள்ளை, தென்னாபிரிக்க மேன்நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாகக் கடமையாற்றியவராவார்.

தென்னாபிரிக்கா, டேபன் நகரின் பேரூந்து ஓட்டுநர் ஒருவரின் மகளாக 1941 ஆம் ஆண்டு பிறந்த  நவநீதம்பிள்ளை அவர்கள் தமது சொந்தநாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்க வம்சாவளியாக இருந்தமையால்  நவநீதம்பிள்ளை அந்தநாட்டின் முன்னாள் நிறவெறி அரசாங்கத்தினால், 28 வருடங்களாக நீதிபதி சம்மேளனத்தில் இணைக்கப்படவில்லை.இதன்பின்னரே 1995 ஆம் ஆண்டு அவர் தென்னாபிரிக்காவின் முதல் பெண் மேன்நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவானார்.

இவர் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் எட்டு வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியவர் என்பதுவும் றுவாண்டாவில் நிகழ்ந்த மனிதப் படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இவர் மேற்கொண்ட தீர்ப்புக்கள் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருமதி நவநீதம் பிள்ளை ஹவாட் பல்கலைக்கழகத்தில் 1982 ம் ஆண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.