சூர்யா நடிப்பில் ஞான்வேல் இயக்கத்தில் ஜெய்பீம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் வன்னியர் சங்க அடையாளம் தொடர்பாக சில காட்சிகள் இருப்பதாகக் கூறி வன்னியர் சங்கம் போராட்டம் அறிவித்தனர். அன்புமணி ராமதாஸும் இது தொடர்பாக சூர்யாவுக்கு கடிதம் எழுத படத்தில் வரும் அக்காட்சிகள் நீக்கப்பட்டன.
ஆனாலும், வன்னியர் சங்கங்கள் சூர்யாவின் படங்களுக்கு தடை விதித்துள்ளது. மயிலாடுதுறையில் சூர்யாவின் திரைப்படம் ஓடிய திரையரங்கத்தில் படம் நிறுத்தப்பட்டு வேறு படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஞானவேல், சூர்யா,ஜோதிகா ஆகியோருக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில், ‘படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என்று மனுதாரர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.