இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போரினால் இடம்பெயர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில், அந்த முகாம்களுக்கான நிதியுதவி வழங்குவதை ஐக்கிய நாடுகள் சபையினால் தொடர முடியாது என்று இலங்கைக்கான ஐ. நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
முகாம்களிலே தங்கியிருப்பவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் இன்னமும் தொடருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இந்த முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பச் செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. தலைமைச் செயலரிடம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை அவர்கள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று நீல் பூனே தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர்கள் என்று அரசாங்கம் கூறும் பத்தாயிரம் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்படாதது குறித்தும் ஐ.நா. பிரதிநிதி தனது விமர்சனத்தை வெளியிட்டார்.
தவிர இலங்கையைச் சேர்ந்த ஐ.நா.வின் இரு பணியாளர்கள், கடந்த ஜூன் மாதம் முதல் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து நியூயோர்க்கில் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் கடுமையான விசனத்தை தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளால் அவர்கள் தவறான முறையில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.