ஊடகங்களுக்கான அறிக்கை:
01-02-2010
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பேரினவாத முதலாளித்துவ பிரதான வேட்பாளர்களையும் ஆதரித்து நின்ற இரு தரப்பு தமிழ்த் தேசியவாதத் தலைமைகளுக்கும் தமிழ் மக்கள் குறிப்பாக வட புலத்து மக்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்திருக்கிறார்கள். மிகக் குறைந்தளவான 18-20 வீத வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பெருபான்மையான தமிழ் மக்கள் உறுதியான பகிஷ்கரிப்பைச் செய்து தமது எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிவெடுத்து நின்ற உயர்வர்க்க மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டிற்கும் பேரினவாதத்தையும் அந்நிய சக்திகளையும் அரவணைத்து நின்ற போக்கிற்கும் வீழ்ந்த பாரிய அடியேயாகும். இந்த அடியின் நோவை எத்தகைய நியாயப்படுத்தல்களாலும் மூடி மறைத்து விட முடியாது. எனவே தமிழ் மக்கள் பகிஷ்கரிப்புடன் மட்டும் நின்று விடாது அதற்கும் அப்பால் சென்று தமிழ்க் குறுந்தேசியவாத அரசியலுக்குப் பதிலாகப் புதிய மாற்று அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலமே தமது தலைவிதியைத் தாமே தீர்மாணித்துக் கொள்ள இயலும். அவ்வாறே மலையகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தம்மை இனவர்க்க மத ரீதியில் ஒடுக்கி வரும் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுக்கு அணி பிரிந்து ஆதரவு கொடுத்து வரும் சுயநலத் தலமைகளை நிராகரித்து உழைக்கும் சாதாரண சிங்கள மக்களோடு இணைந்து தமது உரிமைகளை வேண்டியெடுக்கும் மக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல முன்வரல் வேண்டும்.
இவ்வாறு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவு பற்றி புதிய – ஜனநாயக கட்சியின் அரசியல் குழுவின் அறிக்கையை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மேற்படி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். யுத்தவெற்றி, புலிகள் அழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு என்பவற்றைப் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்து அடுத்த பதவிக் காலத்தின் சர்வதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகி உள்ளார். சரத் பொன்சேகா வென்றிருந்தாலும் இதே சர்வாதிகார ஜனாதிபதி தொடர்ந்து முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்பே ஏற்பட்டிருக்கும். எனவே தொடரப்படப் போகும் இன்றைய அரசியலமைப்பின் கீழான முறைமையின் கீழ் முழு நாடும், உழைக்கும் மக்களும், உரிமை மறுக்கப்படும் தேசிய இனங்களும் பாரிய சவால்களையும் கடுமையான பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டிய நிலையே காணப்படுகிறது. வாக்களித்த மக்கள் அதற்கான பெரும் விலைகளைப் பல்வேறு வழிகளில் செலுத்த வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாகப்போகிறார்கள் என்பதே எழுந்துள்ள அரசியல் யதார்த்தமாகக் காணப்படுகிறது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலமான வெற்றியாயினும் எதிர்வரப்போகும் பாரளுமன்றத் தேர்தலின் பெறுபேறுகளாயினும் இந் நாட்டின் உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் எவ்விதமான அடிப்படை மாற்றங்களையோ அன்றி விமோசனங்களையோ கொண்டு வரப்போவதில்லை. குறிப்பாகத் தேசிய இனப் பிரச்சினை காரணமான இன முரண்பாட்டிற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகி உள்ள தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழ் மக்கள் அனைவரும் தெற்கின் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளை அரவணைப்பதைத் தவிர்த்து உழைக்கும் சாதாரண சிங்கள மக்களுடன் இணைந்து உறுதியான மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்பி பரந்துப்பட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்வரல் வேண்டும். அதுவே கடந்த இரண்டுத் தேர்தல்களையும் நிராகரித்து தமது எதிர்ப்பார்ப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்திய
தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள ஒரே மாற்று அரசியல் மார்க்கமாக இருக்க முடியும் என்பதே எமது புதிய ஜனநாயக கட்சியின் அறை கூவலாகும்.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளார்.