தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்- கே.டி.லால் காந்த

வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள் குறித்துத் தீர்மானிப்பதற்கு தொழிற்சங்கங்களைக் கூட்டி ஆராயவிருப்பதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும், ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
   தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்க, தனியார் தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி ஆராயப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால் தொடர்சியான தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

“ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அரசாங்கத்துக்கு வெறும் எச்சரிக்கை மாத்திரமே. நாம் எமது முழுப்பலத்தையும் காண்பிக்கவில்லை. அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தொடர்ந்தும் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதனை நாங்கள் கைவிடமாட்டோம்” என லால்காந்த கூறியுள்ளார்.

ஜுலை 10ஆம் திகதி வேலைநிறுத்தம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களும் 2 வாரங்களுக்கு முன்னரே உரிய முறையில் அறிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் உரிமை மீறப்பட்டால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.