தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே கிழக்கு மாகாண மக்கள் .

Saturday, July 19, 2008

கிழக்கின் வெற்றியை இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி பெரும் விமரிசையாக சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியிருந்தது. இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற குழுவைச் சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் அரசாங்கம் நியமித்திருப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட வெற்றியை கிழக்கின் உதயம் எனும் பெயரில் இலங்கை அரசாங்கம் கொண்டாடி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள போதும், கிழக்கு மாகாணம் இன்னமும் வழமைநிலைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

“வடபகுதிக்குச் சென்று விடுதலைப் புலிகளிடம் பயிற்சிபெற்றவர்கள் ஊடுருவியிருக்கலாம். தமிழ் மக்கள் மீது பாதுகாப்புத் தரப்பினருக்கு இன்னமும் சந்தேகம் உள்ளது” என மட்டக்களப்புவாசி ஒருவர் பி.பி.சிக்கு கூறியுள்ளார்.

மட்டக்களப்பின் சில பகுதிகளில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளுக்குள் முகாமிட்டிருப்பதாகவும், காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என இராணுவத்தினரால் கூறப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாலேயே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்வு

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மோதல்களால் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர நேர்ந்ததுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 110,000 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆயிரம் பேர் மீளக்குடியமர்வதற்காகக் காத்திருப்பதாகவும், இதுபோலவே திருகோணமலையிலும் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், சரியான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் இல்லாத நிலையில் தங்கியிருப்பதாக பி.பி.சி. சுட்டிக்காட்டியுள்ளது. மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து போதியளவு ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அச்சத்தின் மத்தியிலேயே கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்துவருவதாக பி.பி.சி. தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.